Published : 14 Sep 2019 09:47 AM
Last Updated : 14 Sep 2019 09:47 AM

பேனர் விவகாரம் சினிமாவுக்கும் பொருந்தும்: விவேக் கருத்து

பேனர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது சினிமாவுக்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க, துரைப்பாக்கம் - வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாகப் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கட்சியினரைக் கடுமையாக எச்சரித்துள்ளனர். இனிமேல் கட்சி தொடர்பான பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் எனத் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பான நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், "எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டுவது குறித்து 'காதல் சடுகுடு' படத்திலேயே கண்டனம் தெரிவித்திருப்பேன். இந்தச் சம்பவம் மிகவும் துயரமானதும் துரதிருஷ்டவசமானதும் ஆகும். சுபஸ்ரீ குடும்பத்துக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்" என்று தெரிவித்துள்ளார் விவேக்.

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக முன்னணி நடிகர்கள் யாருமே இதுவரை இரங்கல் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்களுடைய படங்கள் வெளியாகும் நாள் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றுக்குப் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும் இதுவரை நடிகர்கள் தெரிவிக்காதது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x