Published : 11 Sep 2019 05:04 PM
Last Updated : 11 Sep 2019 05:04 PM

ஜிஎஸ்டியில் சலுகைகள் தேவை: தயாரிப்பாளர்கள் கோரிக்கை

ஜிஎஸ்டி வரியில் சில சலுகைகள் தேவை என்று தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது

தமிழ்த் திரையுலகினர் மத்தியில் ஜிஎஸ்டி வரி அமல் அதிருப்தியை உண்டாக்கியது. இது தொடர்பாகப் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். அப்போதிலிருந்து பலமுறை மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, ஜிஎஸ்டி வரி தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். அவரைத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழுவினர் சந்தித்து கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

அவரிடம் என்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டது என்பது தொடர்பாக ஜே.சதீஷ் குமார் பேசியிருப்பதாவது:

''இந்தியா முழுக்க ஆன்லைன் டிக்கெட் முறையை அமல்படுத்தியதிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு சில கோரிக்கைகளை வைத்தோம். ஜிஎஸ்டியில் சில சலுகைகள் தேவை என்றோம். அதற்கு டெல்லியில் உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வந்து, கடிதம் ஒன்றைக் கொடுக்கச் சொல்லியுள்ளார். அதையும் பரிசீலிப்பதாகவும் கூறினார்.

ஒரு படத்துக்கான டிக்கெட் திரையரங்கில் விற்பனையாகும் போதே, அதன் ஜிஎஸ்டி கட்டணம் நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சிலுக்குச் செல்வது போல் வழிவகை செய்து கொடுங்கள் என்றோம். ஏனென்றால், ஜிஎஸ்டி கட்டணத்தை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் வாங்குவது சிரமமாக உள்ளது என்றோம். அதையும் கண்டிப்பாக ஆவன செய்வதாகத் தெரிவித்துள்ளார். மாநில அரசும் அதற்கான செயல்திட்டங்களைச் செய்திருப்பதாகவும் அதற்கு நன்றியும் தெரிவித்துவிட்டு வந்தோம்.

நிறைய தயாரிப்பாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியிலும், சேவை வரியிலும் புரிதல் இல்லாததினால் சிக்கல்கள் உண்டானது. அதில் எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் சரி செய்கிறோம் எனக் கோரிக்கை வைத்தோம். அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பரிந்துரை செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்''.

இவ்வாறு தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x