Published : 11 Sep 2019 01:38 PM
Last Updated : 11 Sep 2019 01:38 PM

'ஒத்த செருப்பு' படத்துக்கு அங்கீகாரம் கோரி மத்திய அமைச்சருக்கு பார்த்திபன் கடிதம்

'ஒத்த செருப்பு' படத்துக்கு அங்கீகாரம் கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, படம் செப்.20-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார் பார்த்திபன்.

இந்தப் படம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் இயக்குநர் பார்த்திபன். அக்கடிதத்தில் அவர், "நாளைய இந்தியாவின் வளர்ச்சியை, நேற்றே சந்தித்ததில் மகிழ்ச்சி! 'ஒத்த செருப்பு' உலகத்தின் முதல் திரைப்படம். ஒரே ஒரு மனிதன் மட்டுமே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு மற்றும் விநியோகம் இப்படி அனைத்தையும் செய்திருக்கிற முதல் தமிழ்ப் படம் உலக அரங்கை நோக்கி...

சந்திராயன் - 2 நிலவிறங்க... விஞ்ஞானி கண்கலங்க, ஆதரவுக் கரமும் அணைப்பின் மனமாகவும் இயங்கும் பிரதமர் மோடியின் ஆட்சியில், பேச்சால் இல்லாமல் செயல் வீச்சால் வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை வழி நடத்தும் தங்களின் பேருதவியோடு இம்முதல் முயற்சிக்கு முழு ஆதரவு வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

I & B மூலமாக எவ்வகையிலாவது இதற்கு ஒரு அங்கீகாரம் வழங்கலாமா? மத்திய அரசிலிருந்து வரிவிலக்கு வழங்கினால், மக்களுக்கு இத்திரைப்படம் மீது ஒரு கவன ஈர்ப்பு ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x