Published : 10 Sep 2019 05:34 PM
Last Updated : 10 Sep 2019 05:34 PM

அறுந்த ரீலு: வெளியாகாத 'மகளிர் மட்டும்' ரீமேக்; நாகேஷ் இடத்தில் கமல்

'லேடிஸ் ஒன்லி' படத்தின் காட்சியிலிருந்து...

1994-ம் ஆண்டு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில், கிரேசி மோகன் வசனத்தில் வெளியான படம் 'மகளிர் மட்டும்'. ரேவதி, ரோகிணி, ஊர்வசி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருந்தார். '9 டு 5' என்ற ஆங்கிலப் படத்தின் அறிவிக்கப்படாத தழுவல் இது.

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு வரும் துன்பங்கள் நகைச்சுவை இழையோடு சொல்லப்பட்டிருக்கும். படம் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடினாலும், நாயகன் இல்லாமல் பெண்களை மட்டுமே மையப்படுத்தியிருப்பதால், இந்தப் படத்தை வெளியிட எந்த விநியோகஸ்தரும் அன்று முன்வரவில்லை. கமல்ஹாசனே சொந்தமாக வெளியிட்டு அதற்கான பலனையும் அறுவடை செய்தார்.

அன்றைய அச்சு ஊடகங்கள் பலவும் 'மகளிர் மட்டும்' படத்தைக் கொண்டாடின. இந்த முயற்சிக்கு கமல்ஹாசனும் பாராட்டப்பட்டார். குறிப்பாக ஊர்வசியின் நடிப்பு பலரால் குறிப்பிட்டுப் பாராட்டப்பட்டது. இந்தப் படத்துக்காக ஊர்வசி மாநில அரசின் விருதைப் பெற்றதும் நினைவுகூரத்தக்கது.

'மகளிர் மட்டும்', 'ஆடவாள்ளக்கு மாத்ரமே' என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் கமல்ஹாசன். தினேஷ் சைலேந்திரா இயக்க, கமல்ஹாசன் தயாரிக்க, சீமா பிஸ்வாஸ், ஷில்பா ஷிரோத்கர், ஹீரா உள்ளிட்டோர் நடித்தனர். நாசர் கதாபாத்திரத்தில் ரந்தீர் கபூர் நடித்திருந்தார். 'லேடிஸ் ஒன்லி' என்று பெயரிடப்பட்டது.

முக்கியமாக, 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ் ஒரு பிணமாக நடித்திருப்பார். அந்த 10-15 நிமிடங்கள் படத்தின் முக்கியமான நகைச்சுவைப் பகுதி. மேலும் படத்தின் கடைசிக் காட்சியில் கமல்ஹாசன் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். ஆனால் இந்தியில் நாகேஷுக்குப் பதிலாக பிணமாக நடித்தவர் கமல்ஹாசன். அந்தக் காட்சியில் கமல்ஹாசனும், படத்தின் மூன்று நாயகிகளும் இருக்கும் புகைப்படம் மட்டுமே இன்று இணையத்தில் காணக் கிடைக்கிறது.

படம்? வெளியாகவே இல்லை. 1997 ஆம் வருடமே 'லேடிஸ் ஒன்லி' படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் படம் வெளியிடப்படவே இல்லை. காரணமும் வெளியே சொல்லப்படவில்லை. அதனால் படம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர யாருக்கும் என்ன காரணம் என்று தெரியாது.

விரைவில் இதுகுறித்து கமல்ஹாசன் எந்தத் தளத்திலாவது சொல்வார் என்று நம்புவோமாக! கமல்ஹாசனை அப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் என்று பார்த்தாலும் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x