Published : 10 Sep 2019 03:19 PM
Last Updated : 10 Sep 2019 03:19 PM

இந்தியாவின் பெருமை சொல்லும் 1000 குறும்படங்கள்: பரத்பாலாவின் பிரம்மாண்ட முயற்சி

இயக்குநர் பரத்பாலா இந்திய நாட்டின் பல்வேறு பெருமைகளைச் சொல்லும் விதமாக 1000 குறும்படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில் 300 படங்களுக்கான வேலைகள் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பம் வீடியோ மூலம் பிரபலமானவர் பரத்பாலா. தொடர்ந்து மீண்டும் ரஹ்மானுடன் இணைந்து 'ஜன கண மன' பாடல் வீடியோவை வெளியிட்டார். தமிழில் 2013-ம் வருடம் தனுஷ் நடிப்பில் 'மரியான்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

பரத்பாலா இயக்கத்தில், கமல்ஹாசன் திரைக்கதை எழுத '19த் ஸ்டெப்' என்ற திரைப்படம் பற்றிய அறிவிப்பும் பின்னர் வந்தது. டிஸ்னி இந்தப் படத்தைத் தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது, 'வெர்ச்சுவல் பாரத்' என்ற (‘Virtual Bharat’) முயற்சியை பரத்பாலா கையிலெடுத்திருக்கிறார். தேசிய அளவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பெருமைகளை 1000 குறும்படங்கள் வாயிலாகச் சொல்லும் பிரம்மாண்ட முயற்சி இது. மாதம் ஒன்று என்று என இந்தக் குறும்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 'தாளம்' என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான முதல் படம், கேரளாவின் படகுப் பந்தயத்தைப் பற்றிப் பேசியிருந்தது.

இந்தப் புதிய முயற்சி பற்றி பேசியுள்ள பரத்பாலா, "இந்தியாவின் பெருமை இந்தியர்களுக்குத் தெரிவதில்லை என சிலர் என்னிடம் சொன்னார்கள். நாம் விரும்பும் தேசமாக இது இல்லை என்று சொன்னார்கள். அதற்கெல்லாம் என்னிடம் விடைகள் கிடையாது. ஆனால், இந்தியா குறித்து பெருமைப்பட எனக்கு நிறைய கிடைத்தது.

இந்தியா முழுவதும் பயணப்பட்டு பல்வேறு விஷயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். இவற்றை குறும்படங்களாக மாற்ற சரியான நேரம் இது என்று நினைத்தேன். நாகாலாந்தில் வளரும் ஒரு குழந்தை, நம் நாட்டைப் பற்றி சரியாகத் தெரியாமல் வளரும்போது, ஒடிசாவைப் பற்றிய ஒரு அழகிய கதையைப் பார்த்தால் எப்படி இருக்கும். இப்படியான கதைகள் அடங்கிய மெய்நிகர் அருங்காட்சியகத்தின் மூலம் இந்தியாவை இணைக்க முடியும் என்று நம்புகிறேன்.

அடுத்த படத்துக்கு 'ஃபர்ஸ்ட் மேன்' (First Man) என்று பெயர். சம்பல்பூரில் இருக்கும் ஒரு ஆதிவாசிக் கவிஞரைப் பற்றியது. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு பெரிய நட்சத்திரம் வெளியிடுவார். 'தாளம்' படத்தை ரஹ்மான் வெளியிட்டது போல 'ஃபர்ஸ்ட் மேன்' படத்தை குல்சார் வெளியிடுவார். பஞ்சாபில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் அனைத்து குழந்தைகளும் சங்கீதம் கற்றுக்கொள்கின்றனர். இந்த மூன்றாவது குறும்படத்தை ஷ்ரேயா கோஷல் வெளியிடுவார்.

அக்டோபர் 2-ம் தேதி அன்று, 'சேஸிங் காந்தி' (Chasing Gandhi) என்ற படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். சென்னை கதீட்ரல் சாலையில் தினமும் காலையில் சட்டையின்றி வெறும் உடம்போடு ஓடும் ஒருவரைப் பற்றிய படம் அது. அவர் எதைத் துரத்தி ஓடுகிறார் என்பதைப் பற்றிய படம் அது. எல்லைகள் கடந்து உலக அளவில் அனைத்துத் தரப்பு மக்களையும் போய் சேரும் மனிதம் சார்ந்த கதைகளைச் சொல்ல நினைக்கிறேன்.

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் நாங்கள் படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது பக்கத்து கிராமத்தினருக்கே நாங்கள் படம்பிடிக்க வந்த அந்தக் குறிப்பிட்ட விஷயம் குறித்துத் தெரியாது. தேசத்தின் படைப்பாற்றல் திறனை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். நாளை ஒரு கோயில், ஒரு கட்டிடக்கலை அம்சத்தைப் பார்க்கும்போது மனதுக்குள் மரியாதை எழ வேண்டும். 10 நிமிடங்களுக்குள், நம் நாட்டில் மிகுதியாக இருக்கும் படைப்பாற்றல் திறனைக் கொண்டாடுவதே நோக்கம்.

இதில் ஆய்வு என்பதுதான் மிகப்பெரிய சவால். 300 குறும்படங்களுக்கான வேலைகள் முடிந்துவிட்டன. ஒவ்வொரு படமும் அந்த மாநிலத்தின் மொழியில் தான் இருக்கும். இவற்றை செய்திகளாகப் பார்க்காமல், முதன்மைக் கதாபாத்திரம், அழகான ஒளிப்பதிவு, நல்ல இசை தேவைப்படும் கதைகளாகப் பார்க்கிறேன்" என்று பரத்பாலா கூறியுள்ளார்.

தொடர்ந்து அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியில் படம் இயக்கும் வேலைகளைத் தொடங்கவுள்ளதாகவும் பரத்பாலா கூறியுள்ளார்.

- ஸ்ரீனிவாச ராமானுஜம் (தி இந்து ஆங்கிலம்) | தமிழில்: கா.கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x