Published : 09 Sep 2019 12:50 PM
Last Updated : 09 Sep 2019 12:50 PM

தொடரும் 'ஜெர்சி' பட வசூல் நிலவரக் கேள்வி: நானி காட்டம்

தொடர்ச்சியாக 'ஜெர்சி' படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்துக் கேட்டுக்கொண்டே இருப்பதற்கு, நானி காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜெர்சி'. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. ஏப்ரல் 19-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேங் லீடர்' படத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 12-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பேட்டியொன்றில், 'ஜெர்சி' படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மிகவும் கோபமாகப் பதிலளித்துள்ளார் நானி. அதில், "படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் பற்றி ஏன் ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள எனக்குக் கடினமாக இருக்கிறது. நான் தெளிவுபடுத்தி விடுகிறேன் படத்தின் கலெக்‌ஷன் ரூ.30 கோடி.

தெலுங்கு சினிமாவின் வழக்கமான மாவரைத்தலை இந்தப் படம் உடைத்துள்ளது. மேலும் பல பாராட்டுதல்களையும் பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட்டையும் பெற்றுள்ளது. இம்மாதிரியான படம் அதற்குரிய பணம் பண்ண முடியும் எனில் ஏன் எல்லோரும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

'ஜெர்சி' அனைத்து விஷயங்களிலும் ஒரு பிளாக் பஸ்டர். இது தற்போது பல மொழிகளில் ரீ-மேக் ஆகிறது" என்று நானி தெரிவித்துள்ளார்.

தமிழிலும் 'ஜெர்சி' படம் ரீமேக் ஆகிறது. இதில் நானி கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்கவுள்ளனர். 'மான்ஸ்டர்' படத்தின் இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x