Published : 09 Sep 2019 11:31 AM
Last Updated : 09 Sep 2019 11:31 AM

நான்கு நண்பர்கள் படங்கள்;   ‘பாலைவனச்சோலை’தான் ஆரம்பம்!  

வி.ராம்ஜி


இன்றைக்கு வாரம் மூன்று படங்கள் வந்தால், அதில் ஒருபடத்திலாவது நான்கு அல்லது ஐந்து நண்பர்களைக் களமாகக் கொண்ட படங்கள் வந்துவிடுகின்றன. இந்தப் படங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்த படம்தான் ‘பாலைவனச்சோலை’.


ஒரு படத்தில் நான்கைந்து நண்பர்கள் இருப்பார்கள். ஏதேனும் ஓரிடத்தில் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அரட்டையடிப்பார்கள். வேலை தேடுவார்கள். ஒரே அறையில் சேர்ந்து தங்கியிருப்பார்கள். தண்ணியடிப்பார்கள். ஜாலியாக இருப்பார்கள். சண்டைக்குப் போவார்கள். யாரோ காதலிப்பார்கள். எல்லோரும் உதவுவார்கள். வில்லன்களுடன் மோதுவார்கள். நண்பர்களில் ஒருவர் கொல்லப்படுவார். ஒவ்வொருவராகக் கொல்லப்படுவார்கள். அவர்களில் ஒருவர், வில்லனையும் அந்தக் கூட்டத்தையும் துவம்சம் செய்வார்.


இவையெல்லாம் நம் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் விஷயங்களாக பார்க்கப்படுகின்றன.


இயக்குநர் ஸ்ரீதரின் ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில், சிவாஜி, முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன் மூவரும் ஒரேவீட்டில் தங்கியிருப்பார்கள். உடல்நலமில்லாமல் கோபாலகிருஷ்ணன் இறந்துவிடுவார். முத்துராமன் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிடுவார் என்று கதை நண்பர்கள் கதையில் இருந்து அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுவிடும்.


1980ம் ஆண்டு டி.ராஜேந்தரின் ‘ஒருதலைராகம்’ வெளியானது. சங்கர்தான் நாயகன். சந்திரசேகர் உடனிருக்கும் நண்பன். மற்றபடி நண்பர்கள் கூட்டம் உண்டு. என்றாலும் கூட, நண்பர்களின் கதையாக இந்தப் படம் இல்லை. சொல்லாத காதலைச் சொன்ன படம் இது.


இயக்குநர் கே.பாலசந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில், கமல், எஸ்.வி.சேகர், திலீப் மூவரும் பட்டதாரிகள். டில்லியில் ஒரே வீட்டில் தங்கியபடி, வேலை தேடுவார்கள். அவரவர் பசி, அவரவர் வயிறு, அவரவர் வாழ்க்கை என்று திரைக்கதை பயணிக்கும்.


இயக்குநர் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தில், சந்திரசேகர், ராஜசேகர், நிழல்கள் ரவி என மூவரும் வேலை தேடுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிற பிரச்சினைகளைச் சொல்லும் கதை.


கே.பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’ மூன்று நண்பர்களை மையப்படுத்திய கதை. ஆனாலும் மூவரும் ஒரே பெண்ணை காதலிப்பது, அதனால் பிரிவது, க்ளைமாக்ஸில் சேருவது என்று புதுரூட்டு போட்டு திரைக்கதை பின்னப்பட்டது.


இயக்குநர் விக்ரமனின் முதல் படம் ‘புதுவசந்தம்’ வெள்ளிவிழாப்படம். நான்கு நண்பர்களையும் ஒரு பெண்ணையும் சுற்றிச் சுழலும் கதை இது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது. ஷங்கரின் ‘பாய்ஸ்’, ‘நண்பன்’ எல்லாம்கூட நண்பர்களைச் சுற்றிச் சுழலும் கதைக்களம்தான். இப்படி வரிசையாகவும் கொஞ்சம் இடைவெளிவிட்டும் நான்கு நண்பர்கள் கான்செப்ட் தமிழ் சினிமாவில் ஒர்க் அவுட்டாகிக்கொண்டேதான் இருந்தன. நண்பர்கள் கான்செப்ட் ஸ்கிரிப்டில், கமலும் உண்டு; அவரின் ‘பஞ்ச தந்திரம்’ படமும் உண்டு.


இயக்குநர் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ வந்த பிறகு, நான்கு அல்லது ஐந்து நண்பர்கள் கான்செப்ட், இன்னும் வேகம் பிடித்தது. போதாக்குறைக்கு ‘நாடோடிகள்’ படமும் அப்படியே அமைய... இன்னும் சூடு பிடித்தது. ‘நாலு நண்பர்கள் இருக்கிற மாதிரி கதை சொல்லுங்க’ என்று ஹீரோவும் கேட்கத் தொடங்கினார். தயாரிப்பாளரும் கேட்டார். இயக்குநர்களும் அப்படித்தான் கதை பண்ணினார்கள்.


இத்தனைப் படங்களுக்கும் அச்சாரம்போட்ட படம்... ‘பாலைவனச்சோலை.’ முழுக்க முழுக்க நண்பர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் சொல்லியது இந்தப்படம். சந்திரசேகர், ராஜீவ், ஜனகராஜ், தியாகு, கைலாஷ்நாத் என்று ஐந்து நண்பர்கள். காம்பவுண்ட் சுவரில் எல்லோரும் சேர்ந்து பேசி அரட்டை அடிப்பதும் அங்கே எதிர்வீட்டுக்கு நாயகி, தன் தந்தையுடன் குடிவருவதும், பிறகு அந்த ஐந்து நண்பர்களும் அந்தப் பெண்ணும் அன்பில் கட்டுண்டு போக, அவரவர் வாழ்வில் அந்தப் பெண்ணின் ஸ்நேகம் ஏற்படுத்துகிற தாக்கமும் ஊக்கமும்தான் கதை.
ஒருவகையில் இந்தப் படமும் வேலையில்லாப் பிரச்சினை, தன் கனவு, பொருளாதாரச் சிக்கல், அன்புக்கு ஏங்குதல், உடலின் தீராத நோய் என்பவற்றையெல்லாம் கலந்துகட்டிக் கொடுத்தன. ஆனாலும் ஓவர்டோஸ் என்று சொல்லமுடியாத அளவுக்கு கதை அழகான திரைக்கதையாக ஆக்கப்பட்டிருக்கும். அதுதான் ‘பாலைவனச் சோலை’ ஸ்பெஷல்.


1981ம் ஆண்டு வெளியான ‘பாலைவனச்சோலை’ அந்தக் காலத்து பெல்பாட்ட நண்பர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றைக்கும் பேசப்படுகிறது. சந்திரசேகர், ராஜீவ், ஜனகராஜ், தியாகு, கைலாஷ் என ஒவ்வொருவரும் அவர்களின் கேரக்டர்களாலும் நடிப்பாலும் நம் மனதுக்குள் இடம்பிடித்தார்கள். சுஹாசினியின் பண்பட்ட நடிப்பும் கண்ணியமான கேரக்டரைசேஷனும் அந்தக் காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, படத்தில் அவர் கட்டிக்கொண்டு வருகிற காட்டன் புடவைகள் கூட ஆண்களையும் ஈர்த்தன.


சங்கர் கணேஷ் இசையில் எல்லாப்பாடல்களும் தித்தித்தன. ராபர்ட் - ராஜசேகர் இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள். இவர்களின் முதல் படம் இது. இவர்களில் ராஜசேகருக்கு கூடுதல் ஸ்பெஷல் உண்டு. முதல் ஸ்பெஷல்... ‘ஒருதலைராகம்’ படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தில் மூன்று நாயகர்களில் இவரும் ஒருவர்.


கவிஞர் வைரமுத்து, தமிழ் சினிமாவில் முதலில் எழுதிய பாடல் ‘நிழல்கள்’ படத்துக்குதான். இந்தப் படத்தில் இடம்பெற்ற வைரமுத்துவின் முதல் பாடலான ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ இன்றைக்கும் காலர் டியூன்களாக நம் காதுகளை வருடுகிறது. வைரமுத்து எழுத, இளையராஜா இசையமைக்க, எஸ்.பி.பி. பாட... இந்தப் பாடலை பாரதிராஜா காட்சிப்படுத்த... பாடலில் நடித்திருந்தவர் ராஜசேகர்.


இன்றைக்கு ராபர்ட் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இப்போது ராஜசேகரும் இல்லை. நேற்று 8.9.19 அன்று இறந்துவிட்டார். ஆனால், இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும், நண்பர்கள் கான்செப்டின் ஆரம்பப் படமான ‘பாலைவனச்சோலை’யும் வாணி ஜெயராமின் குரலில் குழைந்து வரும் ‘மேகமே... மேகமே...’ பாடலும் மறக்கவே மறக்காது நமக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x