Published : 08 Sep 2019 03:26 PM
Last Updated : 08 Sep 2019 03:26 PM

ரஜினிக்கு ‘பாட்ஷா’ - கமலுக்கு ‘குருதிப்புனல்’; பாரதிராஜாவின் ‘பசும்பொன்’ - பாக்யராஜின் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’

வி.ராம்ஜி


95ம் ஆண்டில் ரஜினிக்கு ‘பாட்ஷா’வும் கமலுக்கு ‘குருதிப்புனல்’ திரைப்படமும் வெளியாகின. மேலும் பாரதிராஜாவின் ‘பசும்பொன்’ திரைப்படமும் பாக்யராஜின் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’யும் வெளியாகின். பரபரப்பைக் கிளப்பிய மணிரத்னத்தின் ‘பம்பாய்’ திரைப்படம் அந்த வருடத்தில்தான் வெளிவந்தது.


95ம் ஆண்டு, அஜித்தின் ‘ஆசை’ வெளியாகி 200 நாட்களைக் கடந்து ஓடியது. விஜயகாந்துக்கு ‘கருப்பு நிலா’, மற்றும் ‘காந்தி பிறந்த மண்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. ஆனால் இந்த இரண்டு படங்களுமே பெரிதாகப் போகவில்லை.


அர்ஜூனுக்கு ‘ஆயுதபூஜை’யும் ‘கர்ணா’வும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அமைந்தன. ‘கர்ணா’ படமும் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.


எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவல் மிகப் பிரபலம். இந்த நாவல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நாவல், இந்த வருடத்தில் ‘மோகமுள்’ என்ற தலைப்பில் படமாக வெளிவந்தது. ஆனால், நாவல் அளவுக்கு படம் தாக்கம் ஏற்படுத்தவில்லை. படமும் தோல்விப்படமாக அமைந்தது.


அதுவரை நடிகராக மட்டுமே அறியப்பட்ட ‘அவதாரம்’ மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தது இந்த வருடத்தில்தான். கூத்துக்கலையைப் பின்னணியாகக் கொண்டு, பார்வையற்ற ரேவதியையும் துணைக்கு வைத்துக் கொண்டு, மிகச்சிறந்த படமாக உருவாக்கியிருந்தார் நாசர். இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இன்றைக்கும் எல்லார் செல்போன்களிலும் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல் இருப்பதே அதற்கு சாட்சி.


நாசரைப் போலவே இன்னொருவரும் இயக்குநர் அவதாரம் எடுத்தார். விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக, நடிகராக என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்த ராஜ்கிரண், ‘எல்லாமே என் ராசா’தான் படத்தை இந்த வருடத்தில் இயக்கினார். கிராமம், வலுவான, உணர்வுபூர்வமான கதை. முக்கியமாக, இளையராஜாவின் ஆறேழு பாடல்கள். அத்தனையும் ரசிகர்களைக் கிறங்கடித்தன.


இயக்குநர் பாரதிராஜா, ஏற்கெனவே சிவாஜிகணேசனை வைத்து ‘முதல்மரியாதை’ எடுத்திருந்தார். இந்தநிலையில், 95ல், சிவாஜி, பிரபு, சிவகுமார், ராதிகா என கூட்டணி அமைத்து ‘பசும்பொன்’ படத்தை இயக்கினார். ஆனால் இந்தப் படம் செண்டிமெண்ட் ஓவர்டோஸானது. நல்ல படம் என்று பேர் கிடைத்தது. ஆனாலும் வசூல் மழை பொழியவில்லை.


குருநாதர் பாரதிராஜாவுக்கு ‘பசும்பொன்’என்றால், சிஷ்யர் பாக்யராஜுக்கு ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’. மீனா, ஜனகராஜ், லிவிங்ஸ்டன், குமரிமுத்து என பெரிய கூட்டத்துடன் களமிறங்கினார். மீண்டும் இளையராஜாவின் இசையும் சேர்ந்துகொண்டது. ஆனாலும் ராஜாவுக்கு ராஜகுமாரி கிடைத்தும் கூட, வசூலிலும் தரத்தில் பாக்யராஜ் படம் போல இல்லை என்று பேசப்பட்டது.


இந்த வருடத்தில்தான், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, ‘பம்பாய்’ ரிலீசானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் இப்படியான களம் புதிது. இந்தியாவில் எங்கோ நடக்கிற அவலத்தை, இங்கே தமிழ்க்கோடி கிராமத்தில் இருந்தபடி பார்த்து விக்கித்துப் போனான் தமிழன். ஏ.ஆ.ரஹ்மானின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அரவிந்த்சாமி, மனீஷா கொய்ராலாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. மிகப்பெரிய வெற்றி பாராட்டாகவும் வசூலாகவும் கிடைத்தன.


அடுத்து கமல். இந்த வருடத்தில் கமல் இரண்டு படங்களில் நடித்தார். இரண்டுமே ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு. ஒன்று அப்படி... இன்னொன்று இப்படி. அதாவது, ஒரு படம் சீரியஸ். இன்னொரு படம் காமெடி. ’துரோக்கால்’ எனும் இந்திப் படத்தின் ரீமேக் இது. ‘குருதிப்புனல்’ எனப் பெயரிட்டு வெளியிட்டார் கமல்.


கமல், அர்ஜூன் இணைந்து நடித்த முதல் படம் இது. கவுதமி, கீதா, நாசர் என பலரின் நடிப்பும் பிரமிக்க வைத்தது. குறிப்பாக, பத்ரி எனும் தீவிரவாதியாக நாசர் மிரட்டியெடுத்திருப்பார். டால்பி எனும் புதியதொரு சவுண்ட் சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழின் முதல் படம் இது எனும் பெருமையும் ‘குருதிப்புனல்’ படத்துக்கு உண்டு. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கினார். ‘நம்மவர்’ மகேஷ் இசையமைத்திருந்தார்.

அடுத்து கமலின் காமெடி சரவெடி. கமல், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா, கல்பனா, ஹீரா, ராஜா என்று மிகப்பெரிய பட்டாளமே உண்டு. கிரேஸி மோகனின் வசனங்கள் பலம். பாலுமகேந்திராவின் டிப்பிகல் ‘ரெண்டுபொண்டாட்டி’ கதைதான் இதுவும். என்றாலும் கமல், கோவை சரளா ஜோடி படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ‘சதி லீலாவதி’.


கமலைச் சொல்லிவிட்ட பிறகு அடுத்து யாராக இருக்கும்.


ஆமாம்... ரஜினிதான்.


சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில், ‘சத்யா’ பட இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில், பாலகுமாரன் வசனத்தில், நக்மாவை ஜோடியாக்கி, ரகுவரனை வில்லனாக வைத்துக்கொண்டு ரஜினி ஆடிய ஆடுபுலி ஆட்டம்தான் ‘பாட்ஷா’.


’பாட்ஷா’வைப் பார்க்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ‘பாட்ஷா’ படமும் அந்தப் படம் வெளியாகி ரஜினியின் வழக்கமான மசாலாப்படம் போல் ஓடியதும் அப்படி ஓடிக்கொண்டிருந்த நிலையில், ரஜினி கொளுத்திப்போட்ட அரசியல் பேச்சு, இந்த வெற்றிப் படத்தை, மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது. தேவாவின் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்.


ரஜினி, ரகுவரன், சரண்ராஜ், தேவன், விஜயகுமார், ஜனகராஜ், நக்மா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளிவந்து, 200 நாட்களைக் கடந்து வசூல், ஹவுஸ்புல் என கல்லா நிரப்பிய முக்கியமான படம். சொல்லப்போனால், ரஜினியின் கேரியரில் ‘பாட்ஷா’ மிகப்பெரிய மைல்கல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x