Published : 06 Sep 2019 03:13 PM
Last Updated : 06 Sep 2019 03:13 PM

’ஐநோ.. ஐநோ... ஐநோ... ஐநோ...ஐநோ’ - கே.எஸ்.ரவிகுமாரின் ‘புரியாதபுதிர்’ வயது 29

வி.ராம்ஜி

காமெடி இயக்குநர், குடும்பக்கதை இயக்குநர், கிராமத்து டைரக்டர் என்றெல்லாம் பெயர் வாங்கிவிடலாம். ஆனால் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று பெயர் வாங்குவதுதான் கடினம். அப்படிப் பெயரெடுத்தவர்... கே.எஸ்.ரவிகுமார். அவர் முதன்முதலில் இயக்கிய படம்... ‘புரியாத புதிர்’.


க்ரைம். சஸ்பென்ஸ், குடும்ப சென்டிமென்ட் என எல்லாவகையிலும் பயணிக்கும் தெளிவான திரைக்கதைதான் ‘புரியாத புதிர்’.
ஜெயிலில் இரண்டு கைதிகள் சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்போது ஏற்படும் களேபரத்தில், ஒரு கைதி தப்பித்துவிடுவார். அப்படி கைதி தப்பிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த சண்டை டிராமாவே அரங்கேறியிருக்கும். அங்கே, தப்பிக்கும் கைதிதான் ரகுமான்.
அப்போது போலீஸ் தேடியபடி செல்ல, போலீஸ் ஜீப்பில் மோதி மயங்கிவிழுவார் ஒருவர். அப்படி மயங்கிவிழுபவர்தான் ஆனந்த்பாபு.
தப்பி வரும் ரகுமான், ஒரு வீட்டுக்குள் ஏறிக்குதித்து உள்ளே வருவார். அவரைப் பார்த்து அலறிக்கதறுவார். அவர்தான் ரேகா. இருவரும் நண்பர்கள். கல்லூரி நட்பு. கைதியின் உடையோடு இருக்கும் ரகுமானைப் பார்த்து அதிர்ந்து போவார் ரேகா.


அந்தசமயத்தில், ரேகாவின் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கும். இன்ஸ்பெக்டர் டெல்லிகணேஷ், கதவு தட்டுவார். உள்ளே பரபரப்பாவார் ரகுமான். பதட்டமாவார் ரேகா. ஒளிந்துகொள்ள முனைவார். அங்கே, ஓர் பிணம் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும். அங்கே பிணமாக... இறந்த சடலமாக... ரகுவரன்.


பிணத்தை ஒளித்து வைப்பார் ரேகா. ரகுமானுக்கும் ஒளிவதற்கு இடம் தருவார். கதவு திறப்பார்.போலீஸ் வரும். ‘உங்கள் கணவர் சக்கரவர்த்தி, கல்கத்தாவுக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது. அதில் ஒருவர் கூட தப்பவில்லை’ என்று சொல்லிச் செல்வார்.


அதன்பிறகு, ‘பிணமாகக் கிடப்பது யார்?’ என்று ரேகாவிடம் ரகுமான் கேட்பார். ‘அவர்தான் என் கணவர்’ என்பார். ‘யார் கொன்னது?’ என்று கேட்க, ‘நான் தான் கொன்னேன்’ என்பார் ரேகா.


ரேகா தன் கணவரான ரகுவரனை ஏன் கொன்றார், அந்த ராத்திரியில் ஆனந்த்பாபு ஏன் ஓடிவந்தார், சிறையில் இருந்து ரகுமான் ஏன் தப்பிவந்தார், அவர் சிறைக்குச் செல்ல என்ன காரனம் என்கிற புரியாத புதிர்களுக்கெல்லாம் புரிகிற விதமாக புதிர் போட்டு அந்தப் புதிர்களையெல்லாம் அவிழ்த்திருப்பார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.


ரகுமானும் ரேகாவும் பிணத்தை எடுத்துக்கொண்டு கிணற்றில் போட்டுவிடுவார்கள்.


ஒருபக்கம் ரேகாவின் அண்ணனும் அண்ணியும் பிணத்தைக் கண்டறிய கல்கத்தா சென்றிருப்பார்கள். இன்னொரு பக்கம் ரகுவரனின் அப்பா வி.கோபாலகிருஷ்ணன் வந்திருப்பார். பக்கத்துவீட்டு குமரிமுத்து, க்ரைம் கதைகளைப் படித்துவிட்டு, துப்பறியும் புத்தியுடன் நடப்பவற்றை ஆராய்ந்து, பின் தொடர்ந்துகொண்டிருப்பார்.


இதனிடையே, சரத்குமார் ஆங்காங்கே நின்று ஒட்டுக்கேட்டுக்கொண்டிருப்பார். அந்த சமயத்தில் ரேகாவுக்கு போன்கால். ‘உம் புருஷனை கொன்னது எனக்குத் தெரியும்.மூணு லட்சம் கொடு. இல்லேன்னா போலீஸ்கிட்ட சொல்லிருவேன்’ என்றொரு மிரட்டல் வரும். யாராக இருக்கும் என்று படம் பார்ப்பவர்கள் சிண்டைப் பிய்த்துக்கொள்வார்கள்.


ஆனந்த்பாபுவா, சரத்குமாரா, ரகுமானே இப்படிச் செய்கிறாரா என்றெல்லாம் த்ரில்லிங்கும் சஸ்பென்ஸும் கூடிக்கொண்டே போகும். கடைசியில், பணத்தை கொடுக்க ரேகா செல்ல, யாரென்று பார்த்துப் பிடிக்க ரகுமான் பின் தொடர, சூட்கேஸை வைத்ததும் ஓர் உருவம் வந்து எடுத்துக் கொள்ள, ‘ஹேண்ட்ஸ் அப்’ என்றொரு சத்தம். லைட்டிங். போலீஸ் மொத்தமும் சூழ்ந்திருக்க, அது யார் என்று ரகுமான் திடுக்கிட்டுப் பார்க்க... சஸ்பென்ஸில் ஒன்று தெரியவரும்.


ரகுமானின் காதலி சித்தாரா என்றொரு ப்ளாஷ்பேக் விரியும். இன்னொரு முடிச்சு அவிழும். தப்பித்து வந்த ரகுமானை கைது செய்ய, அவர் மீண்டும் தப்பிச் செல்ல... படம் முடியும்.


எல்லோரும் மிக அழகாக நடித்திருப்பார்கள். எப்போதும் பதட்டத்துடனும் பயத்துடனும் குழப்பத்துடனும் தவிப்புடனும் நடித்திருக்கிற ரேகாவுக்குத்தான் முதலிடம். பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரின் கணவர் ரகுவரன்.


சாதாரணமாகவே பின்னிப்பெடலெடுத்துவிடுவார் ரகுவரன். இதில் சைக்கோ கேரக்டர் வேறு. சொல்லவா வேண்டும். மனிதர், ஒவ்வொரு காட்சியிலும் அப்ளாஸ் வாங்கிக் கொண்டே இருப்பார். அதிலும் ரேகாவிடமும் ஆனந்த்பாபுவிடமும் ‘ஐநோ’... ‘ஐநோ’... ஐநோ’... என்று ஒரெயொரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு, அவர் விளாசும்போதும், மொத்தத் தியேட்டரும் விசிலால் குலுங்கி அடங்க நேரமானது.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசை. படத்துக்கு மிகப்பெரிய செலவு இல்லை. கிட்டத்தட்ட 25 முதல் 30 லட்சம் ரூபாய்க்குள் செலவு செய்து, முப்பதே நாட்களில் படமெடுத்ததாக ஞாபகம். ‘ஒருவழியா தப்பிச்சாச்சு’ என்று ஜெயிலில் கைதி சொல்லும்போது, ‘டைரக்‌ஷன் கே.எஸ்.ரவிகுமார்’ என்று டைட்டில் போடுவார்கள். அப்படிச் சொல்லுகிற கைதியாக ரவிகுமார்தான் நடித்திருப்பார். இப்படி ஒரு சீனில் வருவதை, தன் முதல்படத்தில் இருந்தே வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார் அவர்.


1990ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7ம் தேதி ‘புரியாத புதிர்’ ரிலீசானது. அதாவது படம் வெளியாகி, 29 ஆண்டுகளாகிவிட்டன. 30ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


பொதுவாகவே, ஒரு இயக்குநரின் முதல்படம் சூப்பராக ஓடினால், இரண்டாவது படம் சுமாராகத்தான் ஓடும். கே.எஸ்.ரவிகுமார் விஷயத்தில் அப்படியே உல்டாவானது. முதல்படமான ‘புரியாத புதிர்’ சுமாராகத்தான் ஓடியது. ஆனால் நல்லபெயர் கிடைத்தது. க்ரைம், திரில்லர் என்பதால் லேடீஸ் ஆர்வத்துடன் வரவில்லை.


ஆனால், அவரின் இரண்டாவது படம், நூறு நாட்களைக் கடந்து செம ஹிட்டடித்தது. அது ‘சேரன் பாண்டியன்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x