Published : 04 Sep 2019 01:58 PM
Last Updated : 04 Sep 2019 01:58 PM

ஜெயலலிதா வெப் சீரிஸ் தலைப்பு ‘குயின்’

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ள கெளதம் மேனன், அதற்கு ‘குயின்’ எனத் தலைப்பு வைத்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவருமான மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர்கள் விஜய், பாரதிராஜா, பிரியதர்ஷினி, லிங்குசாமி ஆகியோர் முயற்சி எடுத்தனர்.

இதில், பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படத்தை இயக்குவதாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘தலைவி’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ‘ஜெயா’ என்ற தலைப்பில் இந்தியிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. லிங்குசாமி மற்றும் பாரதிராஜா இருவரும் தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டனர்.

இன்னொரு பக்கம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். இதில், ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சசிகலாவாக விஜி சந்திரசேகர், எம்ஜிஆராக இந்திரஜித், சோபன் பாபுவாக வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸுக்கு ‘குயின்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x