Published : 03 Sep 2019 02:14 PM
Last Updated : 03 Sep 2019 02:14 PM

'எனை நோக்கிப் பாயும் தோட்டா' - வெளியீட்டுப் பின்னணி என்ன?

கௌதம் மேனன் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா', ஒரு வழியாக செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படம் மார்ச் 2016-ல் ஆரம்பிக்கப்பட்டது. பணப் பிரச்சினையால் படப்பிடிப்பு நடக்காமல் தாமதமானது. கடந்த வாரம் ட்விட்டரில் படத்தின் புதிய ட்ரெய்லரைப் பகிர்ந்த கௌதம் மேனன், படத்தின் வெளியீட்டைச் சுற்றியிருந்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'. கௌதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தன. ஸ்டைலான படங்களை இயக்கியிருக்கும் கௌதம் மேனனுடன் தனுஷின் முதல் படம். முதல் முறையாக நவ நாகரிக இளைஞனாக தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

மேலும் இதில் மேகா ஆகாஷ், சசிகுமார், வேல ராமமூர்த்தி, செந்தில் வீராசாமி ஆகியோர் நடித்துள்ளனர். சுனைனா, ராணா இருவரும் கவுரவ வேடங்களில் நடித்துள்ளனர். ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா என இரண்டு ஒளிப்பதிவாளர்கள். ஆறு மாதங்களுக்கு முன்னால் தணிக்கை முடிந்த இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய அம்சமே அதன் இசை தான். ஆரம்பத்தில் படத்தின் பாடல்களை மிஸ்டர் எக்ஸ் இசையமைக்கிறார் என்றே கௌதம் மேனன் சொல்லி வந்தார். இது பலரது கவனத்தைப் பெற்றது. பின்னர், தர்புகா சிவா தான் இசையமைப்பாளர் என்பதை கௌதம் அறிவித்தார். இதுவே தர்புகா சிவாவின் முதல் படமாக வந்திருக்க வேண்டியது.

மறுவார்த்தை, விசிறி போன்ற பாடல்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஹிட் ஆகின. ஆனால் பல மில்லியன் பார்வைகளைக் கடந்த பிறகு, கௌதம் மேனனின் யூடியூப் சேனலில் இருந்து இந்தப் பாடல்கள் நீக்கப்பட்டன. பாடல்களுக்கான உரிமைகளை வாங்கியிருக்கும் டிவோ மியூஸிக் நிறுவனம், தங்களது சேனலில் இதை வெளியிட்டுள்ளது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக்க புதுவிதமான விளம்பரங்களை செய்ய தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

கௌதம் மேனனுக்கு இப்போது இருக்கும் பணச் சிக்கலிலிருந்து அவரைக் காப்பாற்ற பிரபலமான ஃபைனான்சியர்கள் பலரும் முன் வந்தார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மீதிப் பணத்தை ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் தவணை முறையில் தர வேண்டும் என்ற நிபந்தனையும் போடப்பட்டுள்ளது.

'எனை நோக்கிப் பாயும் தோட்டா'வோடு விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படமும் நிலுவையில் உள்ளது. இதை தயாரித்து இயக்கியதோடு, செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தையும் கௌதம் மேனன் தயாரித்திருந்தார். கார்த்திக் நரேனின் நரகாசுரனும் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன்படி செப்டம்பர் 6 அன்று 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' எந்தச் சிக்கலும் இன்றி வெளியாவதை உறுதி செய்துள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும் துறையில் ஒரு சிலர் படத்தின் வெளியீடு குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளனர்.

ஆனால் ஒரு முன்னணி ஃபைனான்சியர் பேசுகையில், "இப்போதைக்கு இந்தப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்றே பார்க்கிறோம். இதுதான் அவரது கடனை அடைக்க சிறந்த வழி. அவரின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் தவணை முறையில் தர வேண்டும். 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' செப்டம்பர் 6-ம் தேதி வெளியாக வேண்டும். அப்படி இல்லையென்றால் நிறைய படங்கள் சேர்ந்து விடும். அக்டோபர் 4-ம் தேதி தனுஷின் 'அசுரன்' வெளியாகிறது. இதனால் அது பாதிக்கக்கூடாது" என்றார்.

செப்டம்பர் 6-ம் தேதி சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை', ஆர்யாவின் 'மகாமுனி' ஆகிய படங்களும் வெளியாகின்றன. செப்டம்பர் 20-ம் தேதி சூர்யாவின் 'காப்பான்', செப்டம்பர் 27-ம் தேதி சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' என பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகின்றன.

- ஸ்ரீதர் பிள்ளை (தி இந்து ஆங்கிலம்) | தமிழில்: கா.கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x