Published : 29 Aug 2019 02:15 PM
Last Updated : 29 Aug 2019 02:15 PM

ஜப்பானிலும் சிகாகோவிலும் திரையிட 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' தேர்வு  

ஜப்பானில் நடைபெறும் ஃபுக்குவாக்கா உலகத் திரைப்பட விழாவிலும் சிகாகோவில் நடைபெறும் உலகத் திரைப்பட விழாவிலும் இயக்குநர் வஸந்த் எஸ் சாயின் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளைக் கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குநர் வஸந்த் எஸ் சாய் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், 'மயக்கம் என்ன' சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் சமத்துவப் பாலின விருது பெற்றதுடன், சர்வதேச பெங்களூரு திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டா உலகத் திரைப்பட விழாவில் நிறைவு விழாப் படமாகத் திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

23-வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழா, திபுரான் உலக திரைப்பட விழா, அட்லாண்டா திரைப்பட விழா , அமெரிக்காவில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்பட விழாக்கள், யுரேஷியாவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழா என இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் தேர்வு செய்யப்படது. அமெரிக்காவின் மூன்று மாகாணங்களிலும் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.

தற்போது ஜப்பானில் நடைபெறும் மாபெரும் ஃபுக்குவாக்கா உலகத் திரைப்பட விழாவிலும் சிகாகோவில் நடைபெறும் மாபெரும் உலகத் திரைப்பட விழாவிலும் இயக்குனர் வஸந்த் எஸ் சாயின் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x