Published : 28 Aug 2019 04:00 PM
Last Updated : 28 Aug 2019 04:00 PM

'2.0' பட சப்- டைட்டில் சர்ச்சை: லைகா நிறுவனம் விளக்கம்

'2.0' படம் தொடர்பாக ரேக்ஸ் எழுப்பிய சப்-டைட்டில் சர்ச்சைத் தொடர்பாக, லைகா நிறுவனம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '2.0'. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு சப்-டைட்டில் அமைத்த பணிகளை மேற்கொண்டவர் ரேக்ஸ். இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் அமைக்கும் பணிகளை மேற்கொண்டவர்.

ஆனால், '2.0' படத்தில்பணியாற்றியதற்கான தனக்கான தொகையை லைகா நிறுவனம் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். பெரும் முதலீட்டில், ஷங்கர் - ரஜினி - அக்‌ஷய் குமார் எனப் பிரம்மாண்ட கூட்டணி, உலகளவில் வெளியீடு என்று இருந்தாலும், சப்-டைட்டில் பணிக்குப் பணம் தரவில்லை என்ற புகார் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாக உருவானது.

தனது ட்விட்டர் பக்கம் மூலமாகவே லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர் ஆகியோரது ட்விட்டர் பக்கங்களை மேற்கோளிட்டு கேள்விகளை எழுப்பி வந்தார். ஆனால், நீண்ட நாட்களாகவே படக்குழு எந்தவொரு பதிலுமே தெரிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், முதல் முறையாக லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் '2.0' சப்-டைட்டில் சர்ச்சைத் தொடர்பாகக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "லைகா தயாரிக்கும் அனைத்துப் படங்களுக்கும் ரூ.50,000த்தை சப்-டைட்டிலுக்காக ஒதுக்குகிறது. அந்தப் படம் எந்த பட்ஜெட்டில், எப்படித் தயாரிக்கப்படுகிறது என்றாலும் இதே அளவுதான். ஏனென்றால் தொழில்நுட்ப ரீதியில் அதை முடித்துக் கொடுப்பதற்கான வசதி லைகாவிடமே இருக்கிறது.

திருமதி ரேக்ஸ், ’2.0’ படத்துக்கான சப்டைட்டில் பணிக்கு இரண்டு லட்சம் கேட்டார். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவர் சொந்த விருப்பத்தில் இந்த வேலையைச் செய்து முடித்து, பணம் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொன்னார். பின்னர் அவர் தொடர்புகொண்டு சொன்ன கட்டணம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். பத்து நாட்களுக்கு முன் ரேக்ஸை தொடர்பு கொண்டு ஒரு லட்சம் பணம் தருவதாகச் சொன்னோம். அது நாங்கள் ஒப்புக்கொண்ட பட்ஜெட்டில் இல்லை. ஆனால் நாட்கள் கடந்து விட்டதால், நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்தப் பணம் எங்களுக்கு நியாயமாகப் பட்டது.

ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு லட்சம் கேட்டார். அது கண்டிப்பாகச் சந்தையில் மற்றவர்கள் வாங்கும் கட்டணம் அல்ல. ஒரு தயாரிப்பு நிறுவனமாக நாங்கள் பல வகையில், பல விதமான பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கிறோம்.

நாங்கள் சம்பளம் தராமல் விட்டதில்லை. வழக்கத்தில் இருப்பது போலப் பேரம் பேசுவோம். ஆனால் ரேக்ஸின் இந்த குற்றச்சாட்டு எங்கள் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கத்துடன் சொல்லப்பட்டுள்ளது. அவர் இதை பொதுவில் கொண்டு வந்து விட்டதால் நாங்களும் ஒரு லட்சம் ரூபாய் தரத் தயாராக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு படத்தின் மீதும் அவர்கள் வியர்வை, கடின உழைப்பு, பணம் எனச் செலவிட்டு, பல தடைகளைத் தாண்டி வருகிறார்கள். ஒரு சின்ன ட்வீட், பதிவின் மூலம் ஒருவரை அவதூறாகப் பேசி விட முடியும்.

ஒரு படத்தை முடிப்பதில் பங்கு வகிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடும் வகையில் அவர்களுக்கு உரியப் பணத்தைக் கொடுக்காமல் இருக்க மாட்டோம்” என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

— Lyca Productions (@LycaProductions) August 28, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x