Published : 28 Aug 2019 12:58 PM
Last Updated : 28 Aug 2019 12:58 PM

’காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன்’ -  ஹிட்டடித்த எம்ஜிஆரின் ‘கலங்கரை விளக்கம்’

வி.ராம்ஜி

எம்ஜிஆர் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் எம்ஜிஆர் நடிப்பது அரிதான ஒன்று. எம்ஜிஆர் ஸ்டைலில் ஒரு எம்ஜிஆர் படத்துக்கு உரிய குணமும் மணமும் இருந்தாலும் இது நாயகிக்கான சப்ஜெக்ட். நடிக்க அதிக வாய்ப்புள்ள சப்ஜெக்ட். இருந்தாலும் எம்ஜிஆர் நடித்தார். மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தார். அந்தப் படம் ‘கலங்கரை விளக்கம்’.


வக்கீல் ரவி. இந்தக் கதாபாத்திரத்தில்தான் எம்ஜிஆர் நடித்தார். அவர் இரவில் காரோட்டியபடி வந்துகொண்டிருக்க, நடுவே நடுரோட்டில், ஆடியபடி இருப்பார் நீலா. அவர்தான் சரோஜாதேவி. காரை நிறுத்த, அவர் ஓட, இவர் பின்னேயே ஓட, கலங்கரை விளக்கத்தின் உச்சிக்குச் சென்று சாகத் துணிகிறார் சரோஜாதேவி. அவரைக் காப்பாற்றுகிறார் எம்ஜிஆர்.


‘நான் நரசிம்ம பல்லவனிடமே செல்கிறேன்’ என்பார் சரோஜாதேவி. ‘அடியேன் பல்லவ மன்னன். நீதான் சிவகாமி. புரிந்துகொண்டுவிட்டேன்’ என்பார் எம்ஜிஆர்.


மாமல்லபுரத்தில் வாழ்ந்து வரும் சரோஜாதேவி, சரித்திரப் பாடம் படிக்கும் போதும் அந்த கற்சிற்பங்களைப் பார்த்தும் பித்துப் பிடித்துவிடும். அதைக் குணப்படுத்த டாக்டர் கோபால் (வி.கோபாலகிருஷ்ணன்) சென்னையில் இருந்து அங்கே வர, அவரின் வக்கீல் நண்பரான எம்ஜிஆரும் அங்கே வர... கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிக் கொண்டே வருவார் சரோஜாதேவி. சரோஜாதேவியின் அப்பாவுக்கு ஏகத்துக்கும் சொத்துகள். அவரின் சித்தப்பா நம்பியாருக்கு அதை அடைந்துவிட வேண்டும் என விருப்பம். சூழ்ச்சிகள் செய்தபடி இருப்பார்.


ஒருகட்டத்தில் சரோஜாதேவி பூரணமாக குணமடைந்திருப்பார். அப்போது சரோஜாதேவியைப் போல் இருக்கும் தன் மனைவியின் தங்கை (மல்லிகா)யைக் கொண்டு திட்டம் தீட்டுவார். ஒருநாள்... சரோஜாதேவி கலங்கரை விளக்கத்தில் இருந்து விழுந்து இறந்துபோவார். கலங்கிக் கதறுவார் எம்ஜிஆர். உடைந்த மனதுடனும் வாழ்க்கையுடனும் சென்னைக்குத் திரும்புவார். சரோஜாதேவியின் அப்பாவும் அதிக தூக்கமாத்திரை சாப்பிட்டு இறந்துவிடுவார்.


இந்தநிலையில், சென்னையில் ஓர் கலைநிகழ்ச்சி. அதில் நடனமாடுகிற சரோஜாதேவியைப் பார்ப்பார். ஆனால் ‘நான் நீலா இல்லை. மல்லிகா’ என்பாள். ஆனால் எம்ஜிஆருக்கு சந்தேகம். அவரை விரட்டி விரட்டிச் சென்று, டிராமாவெல்லாம் போட்டு, சரோஜாதேவியின் மனதில் இடம் பிடித்துவிடுவார். ஆனால் அவர்களின் திருமணத்துக்கு நம்பியார் ஒத்துக்கொள்ளமாட்டார்.
பிறகு, இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள். மாமல்லபுரத்தில், கலங்கரை விளக்கத்தில் நடந்திருக்கிற மர்மம் குறித்து கண்டறிய முனைகிறார் எம்ஜிஆர். இறுதியில்... நீலா இறந்தாளா, மல்லிகா இறந்தாளா... என்பதையும் சூழ்ச்சியையும் விவரிப்பதுடன் முடியும் ‘கலங்கரை விளக்கம்’.
சஸ்பென்ஸில் தொடங்கி, குடும்பக் கதையாக மாறி, காதல் கதையாக ரவுண்டடித்து, மீண்டும் சஸ்பென்ஸ் திரில்லருக்குள் வந்து நிறைவுறும். திரைக்கதை வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கும். மாமல்லபுரம் கதைக்களன் என்பதால், கைடு கேரக்டர்களில் நாகேஷ், ஏ.வீரப்பனின் காமெடி படத்துக்கு களை கட்டும். மனோரமாவைக் காதலிக்கும் காட்சிகளும் வசனங்களும் அருமை.


ஜி.என்.வேலுமணியின் தயாரிப்பில், கே.சங்கரின் இயக்கத்தில் 1965ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி ரிலீசானது. எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. ‘என்னை மறந்ததேன் தென்றலே’ என்றொரு பாடல். ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்... ‘என்றொரு பாடல் (பஞ்சு அருணாசலம் எழுதியது), ‘சங்கே முழங்கு’ என்ற பாடல், ‘என்ன உறவோ என்ன பிரிவோ’ என்றொரு பாடல். ‘காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ என்றொரு பாடல், ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ என்றொரு பாடல்... எல்லாமே அற்புதமாக அமைத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இந்தப் படம் வெளிவந்த ஆண்டில்தான் (1965) ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா நடித்து, எல்.வி.பிரசாத் தயாரித்து உருவாக்கிய ‘இதயக்கமலம்’ வெளியானது. அந்தப் படத்திலும் இரண்டு கே.ஆர்.விஜயா. அதில் ஒருவர் இறந்துவிடுவார். அவர்தான் ரவிச்சந்திரனின் மனைவி. இன்னொருவர் கைது செய்யப்படுவார். ‘நானே ரவிச்சந்திரனின் மனைவி’ என்று வாதாடுவார்.


இங்கே... ‘கலங்கரை விளக்கம்’ படத்தில், இரண்டு சரோஜாதேவி. அதில் ஒருவர்... எம்ஜிஆரின் காதலி நீலா. அவர் இறந்துவிடுவார். அடுத்து இருக்கிற மல்லிகாவுக்கும் நீலாவுக்குமான தொடர்பைக் கண்டறிவார் எம்ஜிஆர். இப்படியான சின்னதான ஒற்றுமைகள் இரண்டு படத்துக்கும் உண்டு.


எம்ஜிஆர் படங்களில் நடிக்கும் போது நாயகிக்கு நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் கிடைக்காது என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் சரோஜாதேவியின் நடிப்பு பிரமாதம். ‘என்ன விசு... இந்த மாதிரிலாம் எனக்கு பாட்டு போடமாட்டியா?’ என்று சிவாஜி இந்தப் படத்தில் வரும் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ பாடலைக் குறிப்பிட்டுக் கேட்டதாகச் சொல்லுவார்கள்.
அதேபோல, ‘என்ன உறவோ... என்ன பிரிவோ...’ பாடலை டி.எம்.எஸ். பாடினார். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, ‘அவருக்குப் (சிவாஜிகணேசனுக்கு) பாடுறது மாதிரி பாடிருக்கீங்க’ என்றாராம் எம்ஜிஆர்.


‘கலங்கரைவிளக்கம்’ படத்தின் ‘என்ன உறவோ... என்ன பிரிவோ’ என்ற பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்களேன்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x