Published : 26 Aug 2019 04:01 PM
Last Updated : 26 Aug 2019 04:01 PM

 சிவாஜிக்கு ‘மனோகரா’; எம்ஜிஆருக்கு ‘மலைக்கள்ளன்’

வி.ராம்ஜி


1954ம் ஆண்டு, எம்ஜிஆருக்கு ‘மலைக்கள்ளன்’ படமும் சிவாஜிக்கு ‘மனோகரா’ திரைப்படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்த வருடத்தில் சிவாஜிகணேசன் 8 படங்களில் நடித்தார். எம்ஜிஆர் இரண்டு படங்களில் நடித்தார். இவற்றில் எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ திரைப்படமும் ஒன்று.


1954ம் ஆண்டு எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் மறக்கவே முடியாத முக்கியமான ஆண்டாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். இந்த வருடத்தில்தான் எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான, ‘கூண்டுக்கிளி’ ரிலீசானது. டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. காரணம்... எம்ஜிஆர் - சிவாஜி.


படம் திரையிடப்பட்ட அரங்குகளில், படம் தொடங்குவதற்கு முன்பு, ‘எம்ஜிஆர் - சிவாஜி ரசிகர்கள் அமைதி காக்கும்படி, அமைதியுடன் படத்தைக் கண்டுகளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என்று தியேட்டர் நிர்வாகம் ஸ்லைடு போட்டதெல்லாம் நடந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.


அதேசமயம், எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் வேறு பல வகைகளில் மிக முக்கியமான வருடம் என்றுதான் சொல்லவேண்டும்.


கலைஞரின் வசனத்தில் ‘பராசக்தி’ எனும் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு, கலைஞர் - சிவாஜி - எல்.வி.பிரசாத் கூட்டணியில், ‘மனோகரா’ திரைப்படம் இந்த வருடம்தான் வெளியானது. 1954ம் வருடம் வெளியான இந்தப் படமும் ‘பொறுத்தது போதும் மனோகரா... பொங்கியெழு’ வசனமும் இன்று வரை பிரபலம்.


சிவாஜிக்கு இன்னொரு விஷயமும் இந்த வருடத்தில் நடந்தது. அதாவது ஏவிஎம் தயாரிக்க, வீணை பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘அந்தநாள்’ இந்த வருடத்தில்தான் வெளியானது. இதிலும் சிவாஜி நெகடீவ் ரோல் பண்ணியிருப்பார். அதுமட்டுமா? தமிழ் சினிமாவில், பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம்... ‘அந்தநாள்’ என்பது தெரியும்தானே.


‘இல்லற ஜோதி’, ஸ்ரீதரின் வசனத்தில் ’எதிர்பாராதது’, ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, துளிவிஷம், மனோகரா, கூண்டுக்கிளி, தூக்குதூக்கி என எட்டுப் படங்களில் சிவாஜி நடித்திருந்தார். இதில் இன்னொரு ‘முதல்’ விஷயமும் இருக்கிறது. ‘தூக்குதூக்கி’ திரைப்படத்தில்தான் சிவாஜிகணேசனுக்கு டிஎம்எஸ் முதன்முதலில் பாடல்கள் பாடினார்.


‘இல்லற ஜோதி’, ‘எதிர்பாராதது’, ‘துளிவிஷம்’ முதலான படங்கள் சுமாராகத்தான் ஓடின. ‘அந்தநாள்’ படம் பார்த்துவிட்டு, ஆங்கிலப்படம் போல் இருக்கிறது என வியந்தார்கள் ரசிகர்கள். ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படம் சிவாஜிக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது. ‘தூக்குதூக்கி’ திரைப்படமும் ‘மனோகரா’ திரைப்படமும் படத்துக்கு ரிப்பீடட் ஆடியன்ஸை வரச் செய்தது. பார்த்தவர்களே மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். ‘கொண்டுவந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர்கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்’ என்கிற ‘தூக்குதூக்கி’யின் கான்செப்ட் ஏற்படுத்தியது மிகப்பெரிய தாக்கம். அதேபோல், ‘மனோகரா’ வை சொல்லவும் வேண்டுமா. இந்தப் படத்துக்குப் பிறகு ‘அம்மா கேரக்டரா... வீரமான அம்மா கேரக்டரா... கண்ணாம்பாவைக் கூப்பிடுங்க’ எனும் நிலை உருவானது.


எம்ஜிஆர் ஃபார்முலாவில் எம்ஜிஆருக்குக் கிடைத்த முதல் படம் அநேகமாக ‘மலைக்கள்ளன்’ படமாகத்தான் இருக்கும். 1954ம் வருடம், எம்ஜிஆர் ‘கூண்டுக்கிளி’, ‘மலைக்கள்ளன்’ என இரண்டு படங்களில் நடித்தார். இதில் ‘கூண்டுக்கிளி’யின் பரிதாபம் நமக்குத் தெரிந்ததுதான். ‘மலைக்கள்ளன்’ வசூல் மலையா, வசூல் மழையா என பிரமிக்கச் செய்தது. இந்தப் படத்தில் இருந்துதான், எம்ஜிஆர் முன்னணி நாயகனாக பலபடிகள் உயர்ந்து நின்றார்.


ஆக, பல காரணங்களால் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத வருடமாக 1954ம் ஆண்டு அமைந்தது!

எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர் தாண்டி இன்னொரு படமும் வெற்றி பெற்றது. காலத்தால் அழிக்க முடியாத, மறக்க முடியாத, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அந்தப் படம்... எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x