Published : 26 Aug 2019 10:51 AM
Last Updated : 26 Aug 2019 10:51 AM

படம் வெளியாகும் அன்று என்ன செய்வேன்? - பிரபாஸ் சுவாரஸ்ய பதில்

'சாஹோ' படத்தில் பிரபாஸ் | கோப்புப் படம்

படம் வெளியாகும் அன்று என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்குச் சுவாரசியமாகப் பதிலளித்துள்ளார் பிரபாஸ்.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'சாஹோ' படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

தன் படம் வெளியாகும் அன்று என்ன மனநிலையில் இருப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பிரபாஸ். அதில் "படம் வெளியாகும் அன்று என் நண்பர்களுடன் மட்டும் இருப்பேன். யாரையும் சந்திக்க மாட்டேன். அந்த நாளில் எனக்குச் சிந்தனை எல்லாம் மரத்துவிடும் என நினைக்கிறேன். 'பாகுபலி'க்கு முன் 'ரெபல்' என்ற படம் வெளியாகும் போது, பட வெளியீடு அன்று கண்டிப்பாக ரசிகர்களுடன் படத்தைப் பார்க்க வேண்டும், இதற்கு முன்னால் இருந்ததைப் போல இருக்கக்கூடாது என்று நினைத்தேன்.

காலைக் காட்சிக்குச் சென்றேன். எனக்கு மாரடைப்பே வந்துவிடும் போல இருந்தது. அந்த பதட்டத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்வதென்று தெரியவில்லை. திரையரங்குக்குப் போகும் முன்னாலேயே அப்படி உணர்ந்தேன். என் வீட்டிலிருந்து திரையரங்கு செல்ல 20-30 நிமிடங்கள் ஆகும். இயக்குநரிடம், நாம் சேர்ந்து பார்ப்போம் என்று உறுதியளித்திருந்தேன். ஆனால் முடியவில்லை.

வெளியீடு தேதியில் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. நண்பர்களிடம் பேசிக்கொண்டிருப்பேன். தூங்குவேன். படம் பெரிய ஹிட் என்றால் மட்டும் என்னை எழுப்புங்கள் என்று சொல்லிவிடுவேன். 'பாகுபலி'க்கு முன்னால் வெளியான படம் பெரிய ஹிட் ஆனது. நண்பர்கள் என்னை எழுப்பிச் சொன்னார்கள். நான் அவர்களுக்காகத் தூங்குகிறேன் என்று சொன்னாலும் உண்மையில் தூக்கம் வராது.

'பாகுபலி' வெளியான அன்று யாரும் என்னை எழுப்பவில்லை. ஏனென்றால் இந்தியில் முன்னாள் நடந்த பிரத்தியேக காட்சியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தெலுங்கில் முதல் நாள் அவ்வளவு சிறப்பான வரவேற்பு இல்லை. நான் - ராஜமௌலியுடன் இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் கடைசி காட்சியில் கட்டப்பா பாகுபலியை கொன்றதுடன் படம் முடிய மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு முன் அப்படி ஒரு படத்தை அவர்கள் பார்த்திருக்கவில்லை. அதை எதிர்பார்க்கவும் இல்லை. அந்த காட்சிக்குப் பிறகு யாரும் எழுந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு படம் இன்னமும் இருக்கிறது என்று நினைத்தார்கள். இதனால் மாலைக் காட்சி முடியும் வரை சரியான வரவேற்பு இல்லை. யாரும் என்னை எழுப்பவும் இல்லை.

ஏன் என்று கேட்டேன், ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சமாளித்தார்கள். அப்போதே படம் அவ்வளவுதான் என்று நினைத்தேன். தமிழ், இந்தியைப் பொருத்தவரை அவர்கள் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தார்கள். ஒரு சில நடிகர்களைத் தவிர, நான் உட்பட, அனைவரும் அவர்களுக்குப் புதியவர்கள். எனவே அவர்களுக்கு உடனடியாக படம் பிடித்தது" என்று தெரிவித்துள்ளார் பிரபாஸ்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x