Published : 25 Aug 2019 08:20 PM
Last Updated : 25 Aug 2019 08:20 PM

'காப்பான்' படத்தில் எந்த அரசியல் கட்சியையும் தாக்கவில்லை: இயக்குநர் கே.வி.ஆனந்த்

'காப்பான்' படத்தில் சூர்யா

'காப்பான்' படத்தில் எந்த அரசியல் கட்சியையும் தாக்கவில்லை என்று இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காப்பான்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு உள்ளிட்ட விழாக்கள் முடிவுற்றது. தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. முதன் முறையாக 'காப்பான்' படத்தின் கதைக்களம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் கே.வி.ஆனந்த்.

அதில் 'காப்பான்' படத்தின் கதைக்களம் குறித்து, "’காப்பான்’ உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானதுதான். நமது தேசியப் பாதுகாப்புப் படையின் அங்கமான சிறப்புப் பாதுகாப்புக் குழுவைப் பற்றிய ஆராய்ச்சியின் போது திரட்டப்பட்ட தகவல்கள், கதைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. இதை வைத்து ஏன் படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன்.

பிரதமருக்குப் பக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்குபவர்கள் இவர்கள். குண்டடிபட சம்பளம் பெறுபவர்கள். இவர்களுக்குள் ஒரு ஒற்றன் இருந்து, அவன் பிரதமரைக் கொல்ல நினைத்தால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கரு. காப்பான் அரசியல் த்ரில்லர் படம் கிடையாது. கற்பனையான ஒரு பிரதமர் கதாபாத்திரம் இருக்கும் ஒரு கற்பனைப் படம் தான் இது. சில நிஜ சம்பவங்களை உங்களுக்கு இந்தப் படம் ஞாபகப்படுத்தலாம். ஆனால் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் தாக்கவில்லை

சூர்யா இப்போது அதிக சமூக உணர்வுடன் உள்ளார். மேலும் சரியான விஷயங்களைச் சொல்வது குறித்து தற்போது வற்புறுத்துகிறார். பெண்களைக் கிண்டல் செய்யும் ஒரு வசனம் இருந்தால் அதைப் பேசத் தயங்குகிறார். சில காட்சிகள் அவரை அசவுகரியமாக்கின. இது சூர்யா அல்ல, அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என நான் அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது

மோகன்லால் கேட்பதைக் கொடுப்பவர். எந்த காட்சியாக இருந்தாலும் இரண்டு விதமாக நடித்து என் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்வார். இயக்குநர் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பார். அவர் நடிப்பதை மானிட்டரில் பார்க்கும்போது, சரி இதிலென்ன சிறப்பு என்று தோன்றும். ஆனால் எடிட் செய்யும்போது பார்த்தால் தான் அவர் எவ்வளவு சிறந்த நடிகர் என்பது தெரியும்

ஆர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அல்லு சிரீஷை ஒப்பந்தம் செய்திருந்தோம். அவர் விலகிய பிறகு யாரும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. இரண்டாம் கட்டத்தில் இருக்கும் நடிகர்கள் கூட அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்று தயங்கினார்கள். ஆனால் ஆர்யாவை அழைத்தபோது, 'சார் எனக்குக் கதையைப் பற்றி கவலையில்லை. நான் செய்தால் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நான் தயார்' என்று சொன்னார்” என்று தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x