Published : 24 Aug 2019 06:35 PM
Last Updated : 24 Aug 2019 06:35 PM

'தளபதி 64' படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 64' படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் தனது பணிகள் அனைத்தையும் முடிக்கத் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் விஜய்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்தது. தற்போது விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், எடிட்டராக பிலோமின் ராஜ், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, கலை இயக்குநராக சதீஷ்குமார் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஏப்ரல் 2020-ல் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். நிர்வாக தயாரிப்பாளர்களாக ஜெகதீஷ் மற்றும் லலித் குமார் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x