Published : 23 Aug 2019 12:03 PM
Last Updated : 23 Aug 2019 12:03 PM

எல்லையில்லா கலைஞன் பாரதிராஜா... இன்று பாரதிராஜா பிறந்தநாள்

வி.ராம்ஜி


சினிமாவை, ஸ்ரீதருக்கு முன் ஸ்ரீதருக்குப் பின் என்று பிரிப்பார்கள். நடிகர்களைக் கடந்து, இயக்குநர்களின் பக்கம், ரசிகனைத் திருப்பிய முக்கியமான இயக்குநர் இவர். அதேபோல், பாலசந்தருக்கு முன் பாலசந்தருக்குப் பின் என்றும் சொல்லுவார்கள். வசனத்தில் நேர்த்தி, கேமிராவில் கதை சொல்லும் உத்தி என ‘பாலசந்தர் டச்’ பெரிதும் கொண்டாடப்பட்டது. இதன் பிறகு, காட்டிலும் மேட்டிலுமாக, மண்ணின் மணமும் நிறமும் மாறாமல் படமெடுக்க... கிராமங்கள் நோக்கி தமிழ் சினிமா நகர்ந்தது. அந்த வகையில், பா.மு., - பா.பி. என்று சொல்லப்பட்டது. அதாவது, பாரதிராஜாவுக்கு முன்... பாரதிராஜாவுக்குப் பின்!


செட்டுக்குள் கிராமத்தைக் கொண்டு வந்த காலம் போய், கிராமத்துக்குச் சென்று படம் பிடிக்கத் தொடங்கியது, பாரதிராஜாவுக்குப் பிறகுதான் அதிகரித்தது.


கிராமத்துக் கதை, கிராமத்தில் நடக்கிற கதை என்று மட்டுமே சொல்லிவிடமுடியாது. கதையின் மாந்தர்கள், நமக்குப் பழக்கமானவர்கள். நாம் பார்த்து வியந்த, கோபப்பட்ட, நெகிழ்ந்து நெக்குருகியவர்களாகத்தான் இருந்தார்கள். ஊருக்கு ஒரு மயில் உண்டு. அப்பாவி சப்பாணிகள் இப்போதும் இருக்கிறார்கள். அடாவடி பரட்டையனும் அத்துமீறுகிற டாக்டர்களும் இன்னமும் உலவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனைபேருக்கும் தகப்பன் சாமியாக இருந்து, ‘16 வயதினிலே’ தந்த பாரதிராஜாவின் படைப்புகளைக் கண்டு வியந்துதான் போனார்கள் ரசிகர்கள்.


அடுத்து ஒரு கூட்டத்தையே ‘கிழக்கே போகும் ரயிலில்’ ஏற்றிக்கொண்டு வந்தார் பாரதிராஜா. ‘16 வயதினிலே’ தாக்கத்திலிருந்து மீளாத தமிழ் ரசிகர்கள், முண்டியடித்து, ரயிலைப் பார்த்தது. பாஞ்சாலியையும் பரஞ்சோதியையும் அந்த ஆழமான காதலையும் கொண்டாடியது. ‘பாரதிராஜா மாதிரி காதலைச் சொல்லமுடியாதுய்யா’ என்று புகழாரம் சூட்டியது. படத்தின் க்ளைமாக்ஸ், பதைபதைப்புடன் பேசப்பட்டது.


இப்படித்தான் பாரதிராஜா, நம் மனங்களுக்குள் புகுந்து விஸ்வரூபமெடுத்து உட்கார்ந்துகொண்டார்.


‘பாரதிராஜா கிராமத்தான். அதனால கிராமத்துக் கதையைத் தவிர எதுவும் எடுக்கமுடியாதுய்யா’ என்றொரு பேச்சும் கிளம்பத்தான் செய்தது. அந்தப் பேச்சு, சென்னை மாநகரத்தில் இருக்கிற பாரதிராஜாவின் செவிகளுக்குள் இறங்காமலா இருக்கும்?


சிட்டிக்குள் நடக்கிற கதையைப் பிடித்தார். கூடவே திரில்லர் கலந்து கதை சொன்னார். சப்பாணி கமலஹாசன், கோட்டும்சூட்டுமாகப் போட்டுக்கொள்ள... அங்கே சைலண்ட் க்ரைம் கதை தடதடத்துப் படபடத்தது. ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் வேறு ரகம்.
மென்மையான காதலைச் சொல்ல ‘நிறம் மாறாத பூக்கள்’, வேலையில்லாக் கொடுமையைக் கண்டு கோபத்துடன் ‘நிழல்கள்’, சின்னஞ்சிறுசுகளின் வெள்ளந்திக் காதலைச் சொன்ன ‘அலைகள் ஓய்வதில்லை’, இசையும் கலையும் கண்ணெனக் கொண்டு காதல் மொழி பேசிய ‘காதல் ஓவியம்’, படிப்பு சொல்லித் தரும் டீச்சருக்கும் படிக்காத ரெளடிக்கும் மலர்கிற அன்பும் நேசமும் அடர்த்தியான காதலுமாக அலையடித்த ‘கடலோரக் கவிதைகள்’... என பாரதிராஜா கொடுத்ததெல்லாம் காவியங்கள். அந்தக் காவியத்தின் ஈரமான பக்கங்கள்.
வசனம் சொல்லவேண்டிய விஷயத்தை, ஒரு கேமிராவின் நகர்வில் உணர்த்திவிடுவார் பாரதிராஜா. சிறகில்லாமல் பறக்கும் கைக்குட்டையைக் கூட காதல் தூதாக்கி விடுகிற யுத்தியும் உணர்வும் பாரதிராஜா ஸ்பெஷல்.


பாரதிராஜாவின் படமென்றால், பூக்கள் கூட தனி குஷியாகிவிடும். கடலின் அலைகள் கூட, காதலாகி கசிந்துருகும். கோயிலின் மணி கூட, பக்தியுடன் சேர்த்து காதலின் அன்பையும் பறையறிவிக்கும். அந்தத் தெருக்களின் புழுதிகள் கூட, ஜாதி வெறியைத் தூற்றிச் செல்லும். காற்றின் ஓசை கூட, மனிதத்தை ஓதிவிட்டுப் போகும். ‘ஏதோ படமெடுக்கணும்’ என்று எடுத்தவரில்லை இந்த இயக்குநர். ‘ஏதேனும் விதைக்கவேண்டும், மனதுக்குள்’ என்பதாகவே உணர்ந்து சிலிர்த்து படமெடுத்தார். நம்மையும் உணரச் செய்தார். சிலிர்க்கப் பண்ணினார். அதனால் பாரதிராஜாவை, ‘இயக்குநர் இமயம்’ என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


அண்ணன், தங்கைப் பாசத்துடன், வீரத்தையும் கோபத்தையும் துவேஷத்தையும் வன்மத்தையும் ரத்தவெறி கொண்ட குரூரத்தையும் காட்டுவார். பிள்ளைப் பாசத்துக்கு ஏங்கும் கிராமத்து அம்மாவை, அச்சு அசலாக்கி, ராதிகாவின் மூலம் திரைக்குள் இறக்கி, நம் மனதுக்குள் ஏற்றிவிடுவார். ஊர்ப்பெரியவரை மதித்து நேசித்து காதலாகிக் கசிந்துருகுகிற குயிலின் குக்கூவை, கவிதை போல் தந்து, ஓர் புல்லாங்குழலின் சோக கீதத்தை இசைக்க, பாரதிராஜாவால்தான் முடியும்.


‘என் இனிய தமிழ் மக்களே’ என்றொரு கரகர குரலில், நம்மைக் கைத்தட்டச் செய்கிற சினிமாவின் இலக்கணங்களை அறிந்தவரும் இலக்கணங்களை மீறியவரும் பாரதிராஜாவாகத்தான் இருக்கும். கிராமத்து சப்ஜெக்ட் என்றாலே சி சென்டர் ஆடியன்ஸ்க்கான கதை என்பதையெல்லாம் மாற்றி, ஏ சென்டர் ஆடியன்ஸை கிராமத்துக்குள்ளேயும் சி சென்டர் மக்களை ஹைக்ளாஸ் படத்தினுள்ளேயும் கைபிடித்து அழைத்து வந்த செப்படிவித்தைக்காரர் பாரதிராஜா என்று பாலசந்தர் உட்பட பலரும் கொண்டாடினார்கள்.


‘இவர்பாட்டுக்கு படமெடுப்பார்’. அதேசமயம் இவரின் பாடல்கள் எல்லாமே கவிதையான காட்சிப்படுத்துதலாக இருக்கும். தண்ணீரில் மிதக்கிற குடத்தை ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் காட்டுவார். பார்க்கும் போது நமக்கே காதல் மனதுள் நிறைந்திருக்கும். தூக்கி வீசிய புல்லாங்குழலுக்கு ஷாட் வைத்திருப்பார் ‘முதல் மரியாதை’ படத்தில். குழல் வாசித்தவனுக்கு நேர்கிற துக்கம், நம் அடிமனசைப் பிசையும். சினிமா எனும் காட்சி மொழியை, கவிதையாக, ரசனையாக, மிரட்டலாக, மென்மையாகச் சொன்னதுதான் பாரதிராஜா ஸ்டைல் என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இன்றைக்கும் ஏதேனும் ஓர் வாரத்தில், கிராமத்துப் படங்கள் வந்தால், ‘பாரதிராஜா படம் மாதிரி இல்லப்பா’ என்றோ ‘பாரதிராஜா படம் மாதிரி எடுக்க ட்ரை பண்ணிருக்காங்க’ என்றோ சொல்லுவதைக் கேட்கலாம். நாமே கூட சொல்லலாம். இங்கே, தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான ‘ஸ்கேல்’களில், பாரதிராஜா ஸ்கேலும் ஒன்று.


உள்ளுக்குள் எப்போதும் கிராமத்தான். ஆனால் நுனி நாக்கு ஆங்கிலத்திலும் ஜீன்ஸ் டிஷர்ட்டிலும் என புதுமைக்குள்ளும் புகுந்து இளமை காட்டுகிற பாரதிராஜா... எல்லைகளே இல்லாத கலைஞன்.


எல்லையற்ற கலைஞன் பாரதிராஜாவுக்கு இன்று (23.8.19) பிறந்தநாள். அவரை வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x