Published : 21 Aug 2019 02:35 PM
Last Updated : 21 Aug 2019 02:35 PM

’’என்னை நடிகனாக்கியது கே.எஸ்.ரவிகுமார்தான்’’ - மனம் திறந்த மனோபாலா

வி.ராம்ஜி


‘’என்னை நடிக்க வைத்தது, நடிகனாக்கியது கே.எஸ்.ரவிகுமார்தான்’’ என்று இயக்குநரும் நடிகருமான மனோபாலா மனம் திறந்து தெரிவித்தார்.


நடிகரும் இயக்குநருமான மனோபாலா, தன் ‘வேஸ்ட் பேப்பர்’ இணையதளத்தில் தெரிவித்ததாவது:


இயக்குநராக பல படங்களை இயக்கியிருக்கிறேன். ஆனால் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதே இல்லை. விழாக்களின் போது, பேசிக்கொண்டிருப்பேன். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஜாலியாக, கேலியாக, நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருப்பேன். இதையெல்லாம் பார்த்த கே.எஸ்.ரவிகுமார், ‘நீங்க ஏன் நடிக்கக்கூடாது?’ என்று கேட்டார்.


‘அட நீங்க வேற சார். நாம டைரக்டர்தான். நடிக்க வராது.விருப்பமும் இல்லை’ன்னு சொன்னேன்.


அந்த சமயத்துல எனக்குக் கொஞ்சம் உடம்பு முடியாமப் போச்சு. சிகரெட்டுதான் உடல் நலமின்மைக்குக் காரணம். ஒருநாளைக்கு, 250 சிகரெட் குடிச்சிக்கிட்டிருந்தேன். எல்லாரும் ‘சிகரெட்டை நிறுத்துங்க’ன்னு சொன்னாங்க. மருத்துவமனை, சிகிச்சை, அயர்ச்சின்னு கொஞ்சம் தேறி வீட்ல இருந்தேன். அப்பதான் கே.எஸ்.ரவிகுமார் சார், எனக்கு போன் பண்ணினார்.


‘என் படத்துல நீங்க நடிக்கிறீங்க’ன்னு சொன்னார். நான் உடனே சரி சார்னு சொன்னேன். அந்தப் படம்தான் ‘நட்புக்காக’. படம் முழுக்க வர்ற மாதிரி கேரக்டர் கொடுத்தார். அந்தப் படத்துல நான் வித்தியாசமான ஒரு கும்பிடு போடுவேன். அது பெரிய ஹிட்டாச்சு. நான் நடிச்சதும் ஹிட்டாச்சு. அப்போ கே.எஸ்.ரவிகுமார், ‘வர்ற பஸ் எதுவா இருந்தாலும் அதுல ஏறிப் போயிக்கிட்டே இருக்கணும்’னு சொன்னார்.


இந்தப் படத்துக்குப் பிறகு வரிசையா படங்கள் கிடைச்சுச்சு. போலீஸ், மந்திரவாதி, அரசியல்வாதின்னு வரிசையா கேரக்டர்கள் பண்ணினேன். சமீபத்துல கூட, கே.எஸ்.ரவிகுமார் சாரும் நானும் ஒரு படத்துல நடிக்கும் போது சந்திச்சிக்கிட்டோம். ‘எவ்ளோ படம் நடிச்சிருப்பீங்க?’ன்னு கேட்டார். ‘என்ன... 900 படத்துக்கு மேலே நடிச்சிருப்பேன் சார்’னு சொன்னேன். அதிர்ச்சியாயிட்டார்.


ஆக, என்னை நடிக்க வைச்ச கே.எஸ்.ரவிகுமாருக்குத்தான் நன்றி சொல்லணும். எந்தக் கேரக்டர் அது என்ன இது என்னன்னு எதுவுமே கேக்கமாட்டேன். வீட்ல சும்மா உக்கார்ந்துக்கிட்டிருக்கிற நம்மை, வேலை இருக்கு வர்றீங்களான்னு கூப்பிடுறாங்க. ரவிகுமார் சார் சொன்ன மாதிரி, வர்ற பஸ்ல ஏறி போயிட்டே இருக்கணும்.’


இவ்வாறு மனோபாலா தெரிவித்துள்ளார்.

அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x