Published : 21 Aug 2019 10:32 AM
Last Updated : 21 Aug 2019 10:32 AM

பாஞ்சாலி, சித்தி, செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி... ராதிகா! 

வி.ராம்ஜி
- நடிகை ராதிகா பிறந்தநாள் இன்று

‘அந்த நடிகை, பணக்காரக் கேரக்டருக்கு சரியாக இருப்பார்’ என்று சிலரைச் சொல்லுவார்கள். இன்னும் சிலரை, ‘கல்லூரி மாணவி கேரக்டர்’, ‘ஏழைப் பெண் கதாபாத்திரம்’, ‘வாயாடி கேரக்டர்’, ‘அப்பாவி கதாபாத்திரம்’ என்றெல்லாம் வகைவகையாகப் பிரித்துச் சொல்லுவார்கள். அவர், இப்படி நடித்தால் ரசிகர்களுக்குப் பிடிக்காது. இவர், அப்படியாக நடித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், எப்படி நடித்தாலும் இவர், பொருந்திப்போய்விடுவார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுவார். அவர்... ராதிகா.


தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைமிக்க நடிகரான எம்.ஆர்.ராதாவின் மகள். ஆனால், இந்த சர்டிபிக்கேட்டைக் காட்டியெல்லாம் சினிமாவுக்குள் நுழையவில்லை. அந்தக் கண்களும் துறுதுறு பார்வையும் வெள்ளந்திச் சிரிப்பும் அசால்ட்டான உடல்மொழியும் இயக்குநர் பாரதிராஜாவைக் கவர்ந்தது. தன் கற்பனையான பாஞ்சாலிக்கு இவரே உயிரூட்டக்கூடியவர் என்று புரிந்துகொண்டார். ராதிகாவை பாஞ்சாலியாக்கினார். ‘கிழக்கே போகும் ரயிலில்’ ஏற்றிவிட்டார். அப்போது ஆரம்பித்த ராதிகாவின் ரயில் பயணம்... விடியலை நோக்கியே பயணப்பட்டது. இன்னமும் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த நீண்ட நெடிய வெற்றிப் பயணத்துக்குப் பின்னே இருப்பது... ராதிகா எனும் திறமை மிக்க நடிகையும் அவரின் கடும் உழைப்பும்தான்!


’நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் வேறொரு காதல். பணக்காரக் குடும்பம். அடுத்து கே.பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’ படத்தில் கலகலப்பான கேரக்டர். இந்த இரண்டு படங்களிலும் ராதிகாவுக்கு பேரும் புகழும் கிடைத்தன. ஏவிஎம்மின் ‘போக்கிரிராஜா’, சத்யா மூவிஸின் ‘மூன்று முகம்’, ‘ஊர்க்காவலன்’ என கிழக்கே போகும் ரயில் வேகமெடுத்தது.


விஜயகாந்துடன் ‘பூந்தோட்ட காவல்காரன்’. அப்படியே நேர்மாறாக, பாலுமகேந்திராவின் ‘ரெட்டைவால் குருவி’யில் வலிக்கவலிக்கச் சிரிக்கவைத்தார். பாக்யராஜுடன் ‘தாவணிக்கனவுகள்’, ’பொய் சாட்சி’, ரஜினியுடன் ‘நல்லவனுக்கு நல்லவன்’, பிரபுவுடன் ‘நினைவுச்சின்னம்’ என வலம் வந்தார். தன் நடிப்பின் அசுரபலத்தைக் காட்டினார்.


ராதிகா, எந்தக் கதாபாத்திரத்தில் வந்தாலும் மக்கள் ரசித்தார்கள். அப்படி ரசிக்கும்படியாக செய்யும் செப்படிவித்தை ராதிகாவுக்கு கைவந்தகலையாக இருந்தது. செட்டிநாட்டு பாஷை பேசி, கமலுடன் ‘பேர் சொல்லும் பிள்ளை’, தெலுங்கில் ‘சுவாதி முத்யம்’ (தமிழில் ‘சிப்பிக்குள் முத்து), மோகனுடன் ‘பிள்ளைநிலா’ என விதம்விதமான கதாபாத்திரங்களில் மிரட்டியெடுத்தார் ராதிகா.


சிவகுமாருக்கு தங்கையாக உருகுவார். இன்னொரு படத்தில் அவரின் மனைவியாக பாந்தம் காட்டுவார். நாகரீகப் பெண்ணாக ஸ்டைல் பண்ணுவார். கிராமத்துப் பெண்ணாக, வெள்ளந்திச் சிரிப்பால் மயக்குவார். எப்படியும் நடிக்கிற அசாத்தியம், எந்த வேடமானாலும் பொருந்திப் போகிற ராதிகா, எல்லா இயக்குநர்களுக்கும் பிடித்தமான நடிகை. எல்லா ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகை. அதுதான் ராதிகாவின் தனித்திறன்!


சினிமாவில் புகழுடன் வலம் வந்துகொண்டிருக்கும் போதே, தொலைக்காட்சிகளின் அசுர வளர்ச்சியைக் கண்டுணர்ந்தார். ‘ராடன்’ நிறுவனத்தைத் தொடங்கினார். ‘சித்தி’ எனும் மெகா சீரியலை எடுத்தார்; நடித்தார். அன்று முதல், தமிழகத்தின் வீடுகளுக்குள்ளும் மனங்களிலும் சித்தியாக உறவாடத் தொடங்கினார்.


பிரபல தொலைக்காட்சியின், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக, ‘பிரைம் டைம்’ எனப்படும் முக்கியமான நேரத்துக்குள் ரசிகர்களையும் நேயர்களையும் கட்டிப்போட்டார். ’சித்தி’, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ’செல்லமே’, ‘வாணிராணி’ என்று புதுப்புது அவதாரமெடுத்து அசத்திய ராதிகாவின் சமீபத்திய பாய்ச்சல்... ‘சந்திரகுமாரி’.


இதனிடையே, சரத்குமாருடன் ‘சூரியவம்சம்’, எஸ்பிபியுடன் ‘கேளடி கண்மணி’, நாசருடன் ‘ஜீன்ஸ்’, விஜயகுமாருடன் ‘கிழக்குச்சீமையிலே’, சிவகுமாருடன் ‘பசும்பொன்’, கார்த்தியுடன் ‘சகுனி’ என ரகளை பண்ணினார். தன் பிரமாண்ட நடிப்பை, பிய்த்துப்பிய்த்துக் கொடுத்தார்.
‘நல்ல நடிகை’ என்று பெயரெடுத்து, இன்று வரை புகழுடன் இருப்பதே ஆகப்பெருஞ்சாதனை. அந்த சாதனை நாயகி ராதிகாவுக்கு இன்று ஆகஸ்ட் 21ம் தேதி பிறந்தநாள்.


ரயிலேறி வந்து, ஜெட் வேகத்தில் முன்னேறிப் பறந்துகொண்டிருக்கும் பாஞ்சாலி என்கிற சித்தி சந்திரகுமாரி ராதிகாவுக்கு வாழ்த்துகளைச் சொல்லுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x