Published : 20 Aug 2019 06:56 PM
Last Updated : 20 Aug 2019 06:56 PM

சாதாரண காய்ச்சலுக்கு 1 லட்ச ரூபாய் பில்: தனியார் மருத்துவமனையைச் சாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்

'மெய்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தனியார் மருத்துவமனையை சாடிப் பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ்

எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மெய்'. சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதனை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:

"மருத்துவத்துறையில் நடக்கும் குற்றங்களும், மறைக்கப்படும் பல விஷயங்களுமே இந்தப் படத்தின் கதை. முதலில் இந்தப் படத்துக்காக என்னை அணுகியபோது, புதுமுகமாக இருக்கிறதே வேண்டாம் என்று தான் நினைத்தேன்.

தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சினை வேறு இருந்தது. ஆனால், கதையைக் கேட்ட பின், அதில் வரும் சம்பவங்கள், அனுபவங்கள் எனக்கே நடந்துள்ளது. ஆகையால் உடனே ஒப்புக்கொண்டேன்.

ஒரு முறை சாதாரண காய்ச்சலுக்காக சிகிச்சை பெற, தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். உடனடியாக அட்மிட் பண்ணி, ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்தனர். காய்ச்சலுக்காக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எல்லாம் செய்தனர். இரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பி, இசிஜி எடுத்தனர்.

ஒரு சாதாரண காய்ச்சலுக்கு இத்தனை பரிசோதனைகளா? என்று அதிர்ந்துபோய் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன். அந்தப் பரிசோதனைகளுக்காக ஒரு லட்ச ரூபாய் பில் போட்டார்கள். ஆனால், எனக்குக் கொடுத்ததோ, ஒரு சாதாரண காய்ச்சல் மாத்திரை தான். இந்த அனுபவம் போலப் பலருக்கு அவர்களது வாழ்வில் ஏற்பட்டிருக்கும். இதைத்தான் இந்தப் படத்தின் கதை பேசுகிறது".

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, அது எந்த மருத்துவமனை என்று பலரும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேள்வி எழுப்பினர். மருத்துவமனையின் பெயரைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x