Published : 16 Aug 2019 06:12 PM
Last Updated : 16 Aug 2019 06:12 PM

40 ஆண்டுகளாக ரஜினியின் 'தர்பார்’!  - ரஜினி எனும் அபூர்வ ராகம்

வி.ராம்ஜி
1975ம் வருடம். ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி. இந்தநாளைச் சொல்லி என்ன விசேஷம் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் ரஜினியிடம் என்ன விசேஷம் என்று கேட்டால்... தமிழ்த் திரையுலகமும் ரசிகர் கூட்டமும் பளிச்சென்று சொல்லும்... ரஜினியே விசேஷம்தான் என்று! அப்பேர்ப்பட்ட ஸ்பெஷல் ஹீரோ ரஜினியின் அவதார நாள்தான் 1975, ஆகஸ்ட் 18ம் தேதி.


இதற்கு முந்தைய நாளான 17ம் தேதி வரை அவர் சிவாஜி ராவ். இதன் பின்னர், ஓட்டுமொத்த தமிழகமும் இந்த காந்தத்தின் ஈர்ப்பில் ஒட்டிக்கொண்டது. ‘ரஜினி ரஜினி ரஜினி’ என்று கொண்டாடத் தொடங்கியது.


இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று சர்சர்ரென எழுத்துகள் வரும்போதே, கைத்தட்டலும் விசிலும் தியேட்டரை அதிரவைக்கிற நிலை. ஆனால் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில், அறிமுகம் ரஜனிகாந்த் என்று டைட்டில் போடும்போது, அதை எவரும் கவனித்தார்களா தெரியவில்லை.
படம் போட்டதுமே ரஜினி எப்போ வருவார், எப்படி வருவார்... என்று பிபி எகிறிப் பார்க்கிற ரசிகர்கள் இன்றைக்கு.

ஆனால் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில், ஒன்றரை மணி நேரம் கழித்து எண்ட்ரி ஆவார் ரஜினி. எண்ட்ரி ஆகவேண்டும் என்றால் கதவு திறக்கவேண்டும் அல்லவா... இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வழியைக் காட்ட... கதவைத் திறந்துகொண்டு வருவதுதான் ரஜினியின் அறிமுகக் காட்சி. இன்றைக்கு குறியீடு குறியீடு என்கிறோமே. இதுதான்... இப்படிக் கதவைத் திறந்ததுதான் அன்றைய, அப்போதைய குறியீடு.


படத்தின் ஒவ்வொரு கேரக்டர் அறிமுகமாகும் போது ஒவ்வொரு டைட்டில் போடுவார் பாலசந்தர். அதுவும் ராகம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ரஜினி வரும் போது போடப்படும் டைட்டில்... சுருதி பேதம். ஆனால், வயது வர்க்க பேதங்களின்றி பின்னாளில் ரஜினியை ஆராதித்தார்கள்; இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


’அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினியின் பெயர் பாண்டியன். பின்னாளில் அலெக்ஸ் பாண்டியன் என மூன்று முகம் காட்டி மாஸ் ஹீரோவானார். பிறகு பாண்டியன் என்ற படத்திலும் நடித்தார். கிழிந்த கோட்டும் களையிழந்த முகமுமாக வந்தார்... நோயாளியாய்! ஆனால் அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா என இவர் போட்ட கோட்டும்சூட்டும் கூட புது ஸ்டைல் காட்டின. அதுமட்டுமா? தமிழ் சினிமாவின் ஆயுள் நீட்டிக்கும் ஆயுர்வேத வசூல் மருந்து ரஜினிதான் என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்!
இளம் வயதில், ரஜினி பார்த்த முதல் தமிழ்ப்படம் ‘பாதாள பைரவி’யாம். அவரே சொல்லியிருக்கிறார். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ஸ்ரீவித்யாவின் கேரக்டர் பெயர்... பைரவி.


அதுமட்டுமா? ஒருகட்டம் வரை, இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து வந்தார் ரஜினி. அப்படி நடித்தாலும் ரஜினிதான் கெட்டவன்; அவர்தான் வில்லன். ஆனால் ஒற்றை ஹீரோவாக, தனி ராஜாவாக இவர் நடித்த படம் ‘பைரவி’. இப்படி பைரவி ரகசியம் சொல்லும் ரஜினி, கூடவே... ‘நம்மை மீறி ஏதோவொரு சக்தி நம்மை இயக்குகிறது’ என்றுதான் சொல்லவேண்டும் என வானத்தை நோக்கி கைகாட்டுகிறார்.


1975ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி... அபூர்வ ராகங்கள் ரிலீஸ். 44 வருடங்களாகிவிட்டன. 45ம் ஆண்டு தொடங்குகிறது. கிட்டத்தட்ட... கடந்த 40 வருடங்களாக... தமிழ் சினிமாவில் ரஜினிதான் வேட்டையன். வசூல் வேட்டையன். ரஜினியின் தர்பார்தான் நடந்து கொண்டிருக்கிறது.


வாழ்த்துகள் ரஜினி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x