Published : 16 Aug 2019 11:13 AM
Last Updated : 16 Aug 2019 11:13 AM

சமூக வலைதளத்தில் மதரீதியில் கேள்வி: காட்டமாகப் பதிலளித்த மாதவன்

சமூக வலைதளத்தில் மதரீதியில் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு காட்டமாகப் பதிலளித்துள்ளார் மாதவன்

'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார் மாதவன். தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று (ஆகஸ்ட் 15) ஆவணி அவிட்டத்தைத் தனது வீட்டில் கொண்டாடினார் மாதவன். அந்தப் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்தப் புகைப்படத்தில் மாதவன் வீட்டில் இந்துக் கடவுள்கள் புகைப்படத்துடன் சிலுவையும் இருந்தது. அதைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர், "பின்னணியில் ஏன் சிலுவை இருக்கப் போகிறது. அது என்ன கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்துக் கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம்" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மாதவன் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என நம்புகிறேன். உங்களது நோய்க்கு இடையே நீங்கள் அங்கிருந்த பொற்கோயில் படத்தைப் பார்க்காமலேயே சீக்கிய மதத்துக்கு மாறினேனா என்று கேட்டீர்கள்.

எனக்குத் தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. ஏன் உலகின் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. அத்தகைய தலங்களில் இருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்தன, சிலவற்றை நானே வாங்கினேன். எனது வீட்டில் எல்லா மத நம்பிக்கையைச் சேர்ந்தவர்களும் பணியில் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். அனைத்துப் படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர்.

எனது பால்ய பருவத்திலிருந்தே எனக்கு இது கற்பிக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படித் திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துபட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்றுக் கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும்" என்று தெரிவித்துள்ளார் மாதவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x