Published : 16 Aug 2019 08:23 AM
Last Updated : 16 Aug 2019 08:23 AM

திரை விமர்சனம்- கோமாளி

உள்ளூர் சினிமா தொடங்கி, உலக சினிமா வரை புகழ்பெற்றது நினைவுத் தவறிப்போகும் கதாநாயகர்களின் ‘அம்னீஷியா’ கதைக் களம். ‘கோமா’ளியில் ஜெயம் ரவியின் முறை.

விபத்தொன்றில் சிக்கி, கோமாவில் படுத்துவிடுகிறார் பள்ளி மாணவரான ஜெயம் ரவி. பதினாறு வருடங்களுக்குப் பின் நினைவு திரும்புகிறது. அவர் பொம்மைபோல் படுத்திருந்த வருடங் களில், ஊர், உறவு, அறிவியல், தொழில் நுட்பம், என அத்தனையிலும் மாற்றம். உலகம் இத்தனை நவீனமாக மாறிப் போயிருப்பதைக் கண்டு, அதிர்ச்சி கலந்து ஆச்சரியப்படுகிறார். ‘எத்தனை இழந்துவிட்டோம்’ என்ற மன அழுத்தம் இம்சிக்க, இன்றைய காலத்துடன் தன் னைப் பொருத்திக்கொள்ள அல்லாடும் நாயகனின் போராட்டமே பிரதான கதை.

கோமாவால் பதினாறு வருட வாழ்க் கையை இழந்த 34 வயது இளைஞனின் அவஸ்தைகள், தேடலை, நகைச்சுவை கலந்து சொல்ல வந்த இயக்குநர், இடைவேளைக்குப் பின் சிலையை மீட்கும் கதையாக, திடீரென்று தடம்மாறி இடறி விழுகிறார். இதனால் நாயகனின் போராட்டமும் திசை மாறிவிடுகிறது. என்றாலும் முதல்பாதியின் கதையை யோசித்த ஒன்றுக்காகவே அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் கற்பனைக்குக் கைகுலுக்கலாம்.

மூன்று காலகட்டங்களில் பயணிக் கும் திரைக்கதையைக் குழப்பமின்றி நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர். கலை இயக்கம், ஆடைகள் வழியாகக் காலகட்டங்களைப் பிரதிபலிப்பதில் அதிக அக்கறை காட்டாமல், பழக்க வழக் கங்கள், வாழ்க்கைமுறை, வசனங்களை வைத்து அந்தந்த காலகட்டங்களை நச்சென்று சித்தரித்திருக்கிறார். இது நினைவுகளைக் கிளறும் மாயத்தைச் செய்கிறது. அதேநேரம் பள்ளிப் பருவக் காட்சியில் உள்நுழைக்கப்பட்ட ‘டீ கடை’ காட்சி, குடும்ப ரசிகர்கள் மிரண்டு முகம் சுளிக்கும் ‘அடல்ட்’ நகைச்சுவை அட்டாக்!’.

படத்துக்கான தலைப்பை இத்தனை ரசனையுடன் நியாயப்படுத்திய படங்கள் சமீப காலத்தில் வரவில்லை என்றே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு முதன்மைக் கதாபாத்திரத்தின் அவஸ் தைகளை வெடிக்கும் நகைச்சுவை தோரணங்கள் வழியாக முதல்பாதியில் சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

கோமாவிலிருந்து மீண்டவனைத் தவிர, இன்றைய நவீன வாழ்க்கை, மற்ற வர்களை கோமாவில் வைத்திருக்கிறது என்பதையும் அதேநேரம், மனிதம் போற்றும் அடிப்படை உணர்வு மனிதர் களிடம் அப்படியே இருக்கிறது என்ற உண்மையையும் ரவி கதாபாத்திரம் வழியாக சுளீரென்று பேசியிருக்கும் விதத்துக்குத் திருஷ்டி சுற்றிப்போடலாம்.

ஒரு கட்டத்தில், திரையைப் பார்த்து நாயகன் கருத்துப் பரப்புரை செய்வது ரசிக்கத் தகுந்த இம்சையாக இருந்தா லும், மனிதம் காக்க வெள்ளத்தில் போராடுவதும், சிலையைத் திருடப் போடும் திட்டங்களும் பிசுபிசுக்கும் பெரும் நாடகமாகிவிடுகின்றன.

கதாபாத்திரத்தில் கச்சிதமாகத் பொருந்தியிருக்கிறார் ஜெயம் ரவி. பள்ளி மாணவன், 34 வயது இளைஞன் என இரு பரிமாணத்துக்கான வித்தியாசங் களைத் தோற்றம், நடிப்பில் துல்லிய மாகக் காட்டியிருக்கிறார். கிழிந்த பேன்ட் டுடன் வரும் காஜலை கலாய்ப்பது, பள்ளி மாணவியை ரொமான்டிக் செய்ய முற்படுவது, முகநூல் அலப்பறை, அமே சான் டெலிவரிக்காகக் காத்திருப்பது எனத் தலைமுறை மாற்றத்தால் தவிக்கும் நடிப்பை கண்முன்னே கொண்டுவந்து கொட்டியிருக்கிறார். நாயக நடிப்புக்கு நடுவே, தன்னால் நகைச்சுவை, குணச் சித்திரம் இரண்டிலும் குறையில்லாமல் ஸ்கோர் செய்யமுடியும் என்பதைக் காட்டிவிடுகிறார்.

முதன்மை நாயகி காஜலுக்கு நடிப்பை வெளிப்படுத்தப் பெரிதாக வாய்ப்பு இல்லை. அவரைவிட மற்றொரு நாயகி சம்யுக்தாவுக்கு அசத்தலான களம் அமைய, அதை அட்டகாசமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

கதையின் நாயகனாக சோபிக்க முடியாமல் தடுமாறும் யோகிபாபு, கதா நாயகனுடன் இணைந்து பயணிக்கும் கதையில் ஒன் லைனர் நகைச்சுவையாக விளாசுவது அத்தனையும் சிக்ஸர்கள்.

இவர்களோடு அடாவடி அரசியல் வாதியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், மருத்துவராக வரும் தியாகேஷ், ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரும் மனதில் நின்றுவிடுகிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் ‘ஒளியும் ஒலியும்’ பாடல் இன்றைய தலைமுறை மறந்துபோன விளையாட்டுகளை உணர்வுபூர்வமாக நினைவூட்டுகிறது.

பயந்துகொண்டே சண்டைபோடும் கதாபாத்திரத்துக்கான ஆக்‌ஷனை நாய கனுக்குக் கொடுத்து ஆச்சரியப்படுத் தினாலும் எடுத்தாண்ட கதைக் களத்தைத் தொடர்பற்ற திசை மாறுதலில் செலுத்தி மிகை நாடகமாக்கியதில் சறுக்கும் படம், முதல்பாதியின் நேர்த்தி, விரவிக் கிடக்கும் நகைச்சுவைத் தோரணங்கள் ஆகியவற்றால் இந்தக் ‘கோமா’ளியின் அட்டகாசங்களை மனம்விட்டு ரசிக்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x