Last Updated : 15 Aug, 2019 01:41 PM

 

Published : 15 Aug 2019 01:41 PM
Last Updated : 15 Aug 2019 01:41 PM

முதல் பார்வை: கோமாளி

ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றவருக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு திரும்பினால், அவர் இழந்தவற்றை மீட்க நினைத்தால் அதுவே 'கோமாளி'.

பிளஸ் 2 படிக்கும் ஜெயம் ரவி, தன் வகுப்புத் தோழி சம்யுக்தா ஹெக்டேவுக்கு காதலைச் சொல்ல அவர் ஏரியாவுக்குச் செல்கிறார். தன் குடும்பத்துப் பாரம்பரிய சிலையைப் பரிசளித்து காதலை வாழ்த்து மடலில் தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் ஏரியா ரவுடி பொன்னம்பலத்தைக் கொலை செய்துவிட்டு கே.எஸ்.ரவிகுமார் அண்ட் கோ அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறது. பொதுமக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சம்யுக்தா ஹெக்டேவின் கழுத்தில் கே.எஸ்.ரவிகுமார் ஆயுதம் வைத்து தப்பிக்கிறார். காதலியைக் காப்பாற்ற ஜெயம் ரவி முயல, விபத்தில் சிக்குகிறார். 16 வருடங்கள் சுயநினைவு இல்லாமல் படுக்கையில் கிடக்கிறார்.

சுய நினைவு வந்த பிறகு என்ன செய்கிறார், காதலி என்ன ஆனார், சென்னையின் வளர்ச்சியும் தொழில்நுட்பப் புரட்சியும் அவரை எப்படி மிரட்சிக்குள்ளாக்குகிறது, சிகிச்சை பணத்துக்காக வீட்டை அடமானம் வைத்த சூழலில் அதை மீட்க முடிந்ததா, பிளஸ் 2 முடிக்காத அவருக்கு வேலை கிடைத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

16 ஆண்டுகள் கோமாவில் இருந்துவிட்டு நினைவு திரும்பியவர் இந்த உலகை, நகரத்து வாழ்க்கையை, நவீனத்தை எப்படிப் பார்க்கிறார் என்ற ஒன்லைனில் சுவாரஸ்யம் சேர்த்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதை முழுமையாகப் பதிவு செய்யவில்லை.

ஜெயம் ரவி நினைவு தப்பியவராகவும், சுய நினைவுக்குப் பிறகு 17 வயது பள்ளி மாணவனின் இயல்பை அப்படியே பிரதி எடுத்த விதத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது, தங்கையின் அவமானத்தை ஏற்று பக்குவம் காட்டுவது, வேலை கேட்டு அலைவது, சாதிக்க நினைத்து எதுவும் செய்ய முடியாத இயலாமையை வெளிப்படுத்துவது, ட்ரெண்டுக்கு மாறுகிறேன் என்று மாட்டிக்கொண்டு முழிப்பது, எமோஷனையும் மனிதத்தையும் விழாமல் பிடிப்பது என்று தேர்ந்த நடிப்பில் மின்னுகிறார்.

ஜெயம் ரவி- காஜலுக்கான காதல் காட்சிகளில் எந்த ஈர்ப்பும் புதுமையும் இல்லை. ஆனால், சம்யுக்தா ஹெக்டேவுடனான காட்சிகளில் கொஞ்சம் காதலும் கொஞ்சம் நகைச்சுவையும் எடுபடுகிறது.

யோகி பாபுவின் ஒன்லைனர் வசனங்களுக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகி பாபு அசால்ட் நடிப்பை அள்ளிக் கொடுத்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் ரவுடி எம்எல்ஏவாக தேர்ந்த நடிப்பில் மனதில் நிறைகிறார். ஷாரா, ஆர்.ஜே.ஆனந்தி, ராமர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ரிச்சர்ட் எம்.நாதன் 1990 காலகட்டத்தையும் 2016 காலகட்டத்தையும் வித்தியாசப்படுத்தியுள்ளார். மழை வெள்ளத்தை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் ஒலியும் ஒளியும் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். பிரதீப் ராகவ் எடிட்டிங்கில் நேர்த்தி பளிச்சிடுகிறது.

ஜவ்வு மிட்டாய், ஹவர் சைக்கிள், நிலாச்சோறு, பம்பரம் விளையாடுதல் என்று 90களின் குழந்தைப் பருவ விளையாட்டுகளை இயக்குநர் நினைவூட்டுவது ரசிக்க வைக்கிறது. செல்போன், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிமையான நாம் பக்கத்திலிருக்கும் உறவுகளுக்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை என்ற மெசேஜை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். எல்லாம் மாறினாலும் எமோஷன் மாறாது, எதைப் பிரிக்க நினைத்தாலும் மனிதம் ஒன்றுசேர்க்கும், பிரச்சினையின் போது மட்டும் சேராமல் எப்போதும் சேர்ந்தே இருப்போம் என்கிறார். அவரின் கருத்து அவசியமானதுதான். வரவேற்க வேண்டியதும் கூட.

ஆனால், அதற்காக சென்னை மழை வெள்ளத்தைப் பயன்படுத்தியிருப்பது உணர்வுபூர்வமான காட்சியாக இல்லாமல் டெம்ப்ளேட்டாக உள்ளது. யூடியூப் பிரபலம் என்று சொல்வதும் நம்பும்படியாகக் காட்சிப்படுத்தவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் பொழுதுபோக்கு அம்சத்துக்காக 'கோமாளி'யை ரசிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x