Published : 14 Aug 2019 01:01 PM
Last Updated : 14 Aug 2019 01:01 PM
வி.ராம்ஜி
பாரதிராஜாவின் ‘புதியவார்ப்புகள்’ படத்தில், வில்லனாக நடிக்க வேண்டியவர், ஸ்பாட்டுக்கு வரத்தாமதமானதால், ஹீரோயின் அப்பாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவரை வில்லனாக்கினோம் என்று இயக்குநர் மனோபாலா தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நடிகரும் இயக்குநருமான மனோபாலா, தனது ‘வேஸ்ட் பேப்பர்’ இணையதள சேனலில், ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநராக இருந்தபோது உண்டான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
எங்கள் டைரக்டர் பாரதிராஜா, ‘புதிய வார்ப்புகள்’ படப்பிடிப்புக்காக வைகை அணை உள்ளிட்ட பகுதிகளைத் தேர்வு செய்திருந்தார். பாரதிராஜா சாருக்கு ஒரு பழக்கம். ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போது, முதலில் பாடல்களைத்தான் ஷூட் செய்வார். ரதி, உஷா (உஷா ராஜேந்தர்), சத்யஸ்ரீ எனும் நடிகை, ஜனகராஜ், புலியூர் சரோஜா, அவரின் கணவர் ஜி.சீனிவாசன் எல்லோரும் அந்த ஊருக்குச் சென்றுவிட்டோம்.
முதல் மூன்று நாட்கள் பாடல்கள் ஷூட் செய்யப்பட்டன. அதுவரை படத்தின் ஹீரோ என்று தெரியாது என்பது சுவாரஸ்யமான விஷயம்.
அதேபோல இன்னொரு சுவாரஸ்யம். படத்தில் நடிக்கவேண்டிய கே.கே.செளந்தர், சென்னையில் இருந்து கிளம்பி, கொடை ரோடு ஸ்டேஷனில் இறங்கி வரவேண்டும். ஆனால் அவர் தூங்கிவிட்டார். மதுரையில்தான் இறங்கினார். அங்கிருந்து கிளம்பி வருவதில் தாமதம்.
படத்தில் ரதியின் அப்பாவாக, நாயனக்காரராக ஜி.சீனிவாசன் நடிப்பதாகவும் பண்ணையார் மாதிரியான பெருந்தனக்கார கேரக்டரில், வில்லன் ரோலில் கே.கே.செளந்தர் நடிப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், கே.கே.செளந்தர் வரவில்லை. ஜி.சீனிவாசன் ரெடியாக இருந்தார்.
அப்போது, டைரக்டர் சார், வில்லன் அறிமுகமாகும் காட்சியை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் வில்லனாக நடிக்கவேண்டிய செளந்தர்தான் வரவில்லையே. அவர் இன்னும் வரவில்லை என்று சொன்னால், டைரக்டர் டென்ஷனாகிவிடுவார் என்று சொல்லவே இல்லை. அப்போது திடீரென ஒரு ஐடியா தோன்றியது. ஜி.சீனிவாசனுக்கு பண்ணையார் கெட் அப் போட்டு ரெடி செய்துவிட்டேன். டைரக்டரிடம் சென்று, ‘ஒரு சின்ன யோசனை சார்’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன்.
‘ஜி.சீனிவாசன் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்துல நாவிதரா நடிச்சார். இப்போ இதுல நாயனக்காரர். ஒரேமாதிரியாயிரும்னு தோணுது சார். அதனால வில்லனுக்கு ஓகே பண்ணின கே.கே.செளந்தரை, நாயனக்காரரா போட்ருவோம். நாயனக்காரரா நடிக்கறதா இருந்த சீனிவாசனை, வில்லனாக்கிருவோம்னு சொன்னேன். உடனே பாரதிராஜா சார், ‘எங்கே மேக்கப் போட்டு கூட்டிட்டு வா’ன்னு சொன்னார். நான் ரெடியா நிப்பாட்டி வைச்சிருந்தேன்.
டைரக்டர் பாத்துட்டு ஓகே சொன்னார். ரதி குடத்துல தண்னி எடுத்துட்டு வரும் போது, வில்லன் ஜி.சீனிவாசன் எதிர்ல வந்து பேசுற சீன் எடுக்கப்பட்டது. அந்த சீன் எடுத்து முடிக்கவும், கே.கே.செளந்தர் ஸ்பாட்டுக்கு வர்றதுக்கும் சரியா இருந்துச்சு.
இவ்வாறு மனோபாலா தன் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார்.