Published : 12 Aug 2019 02:03 PM
Last Updated : 12 Aug 2019 02:03 PM

கதை சர்ச்சையில் 'கோமாளி': விரைவில் முடிவுக்கு வரும்; பாக்யராஜ் தகவல்

'கோமாளி' கதை சர்ச்சை விரைவில் முடிவுக்கு வரும் என '100% காதல்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

எழுத்தாளர் சங்கத்துக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைவராக வந்ததிலிருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் 'சர்கார்' திரைப்படம் கதை சர்ச்சையில் சிக்கியது. ராஜேந்திரன் என்பவர் தனது 'செங்கோல்' கதையைத் தான் 'சர்கார்' என எடுத்திருக்கிறார்கள் என சர்ச்சையை உருவாக்கினார். இரண்டு கதையையும் வைத்து, ராஜேந்திரனின் கதை தான். அவருக்குப் படத்தின் டைட்டிலில் இடமளிக்க வேண்டும் என்று தெரிவித்தார் கே.பாக்யராஜ்.

அதைப் போலவே, தற்போது 'கோமாளி' படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தப் படத்தின் டீஸரைப் பார்த்துவிட்டு, இது தன் கதை போல உள்ளது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார் கிருஷ்ணமூர்த்தி. இது தொடர்பாக 'கோமாளி' இயக்குநர் ப்ரதீப்பிடம் கதையை அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டது. இரண்டு கதையையும் ஒப்பிட்ட போது, ஒற்றுமை இருப்பது தெரியவந்துள்ளது.

'கோமாளி' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இவருடைய தலைமையில் தான் கே.பாக்யராஜ் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகப் போட்டியிட்டார். தற்போது தனக்கு உதவிகரமாக இருந்தவரின் படத்துக்கும் நேர்மையாகவே விசாரணையை மேற்கொண்டிருக்கிறார் கே.பாக்யராஜ்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக '100% காதல்' இசை வெளியீடு விழாவில் கே.பாக்யராஜ் பேசும் போது, "'கோமாளி' படத்தின் கதை இன்னும் பிரச்சினையில் தான் இருக்கிறது. என் கதை என்று ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அந்தக் கதை தொடர்பாக இயக்குநரிடம் கேட்டதற்கு முழுக்கதையையும் பாருங்கள் என்றார். அப்படியல்ல, சாராம்சம் இருந்தால் போதும் என்று கூறினேன்.

முழுப்படத்தைக் கூடக் காட்டுகிறேன் என்று இயக்குநர் தெரிவித்தார். அது இல்ல, இது இல்ல என்று சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் ஒரு தீர்மானத்துக்கு வர இயலவில்லை. தயாரிப்பாளரோ, சங்கத்திலிருந்து வந்திருப்பதால் இயக்குநரிடம் பேசிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார்.

எழுத்தாளர் சங்கத்தில் தலைவராக வந்தவுடன் நிறைய பிரச்சினைகள் வந்துவிட்டன. ஒவ்வொருவரும் அவர் தரப்பு நியாயங்களைச் சொல்கிறார்கள். 'கோமாளி' பிரச்சினை இன்னும் தீரவில்லை. ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என நினைக்கிறேன்" என்றார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x