Published : 12 Aug 2019 12:33 PM
Last Updated : 12 Aug 2019 12:33 PM

'Mr.லோக்கல்' தோல்வி: 'கோமாளி' படத்துக்குச் சிக்கல்

'Mr.லோக்கல்' படத்தின் தோல்வியால். 'கோமாளி' படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'Mr.லோக்கல்'. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதில் முதலீடு செய்த பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டது. குறிப்பாக சில விநியோகஸ்தர்கள் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்கினார்கள். (மினிமம் கியாரண்டி முறை என்றால், ஒட்டுமொத்தமாக ஒரு தொகையை கொடுத்துவிட வேண்டும். நஷ்டம் வந்தால் தயாரிப்பாளரிடம் கேட்கக் கூடாது. லாபம் வந்தால் தயாரிப்பாளரும் கேட்கக் கூடாது)

எம்.ஜி. (மினிமம் கியாரண்டி) முறையில் 'Mr.லோக்கல்' படத்தை வாங்கிய திருச்சி விநியோகஸ்தருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனை தனக்கு சரி செய்து தர வேண்டும் என்று 'கோமாளி' படத்துக்கு திருச்சி ஏரியாவில் தடை விதித்திருக்கிறார்கள். ஏனென்றால் 'Mr.லோக்கல்' படத்தை தமிழகம் முழுக்க விநியோகம் செய்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தான், 'கோமாளி' படத்தை வெளியிடுகிறது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை '100% காதல்' பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் வெளிப்படையாகத் தெரிவித்தார். இது தொடர்பாக, "'கோமாளி' படம் வரும் வாரம் வெளியாகவுள்ளது. இதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இதை வெளியிடுபவர் சக்தி பிலிம் பேக்டரி. சம்பந்தமே இல்லாமல் இந்தப் படத்துக்குத் தடை விதிக்கிறோம், வெளியிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 2 - 3 நாட்களாக இந்தப் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் ஏதேனும் பாக்கி வைத்துள்ளாரா? என்ன பிரச்சினை என்று கேட்டால், ஒருபுதுவிதமான செய்தி வெளியே வந்தது. ஞானவேல்ராஜா 'Mr.லோக்கல்' என்ற படத்தைத் தயாரித்தார். அதை சக்தி பிலிம் பேக்டரி தான் வெளியிட்டது. அதன் திருச்சி ஏரியா உரிமையை வேறொருவர் கேட்டார் என்பதால், சக்தி உடனிருந்து வாங்கிக் கொடுத்துள்ளார். அதுவும் எம்.ஜி. அடிப்படையில் தான் படத்தை வாங்கியுள்ளனர். அந்தப் படம் ஓடவில்லை. அதை உட்கார்ந்து பேசி, எங்களுக்கு அடுத்த படத்தில் சரி பண்ணிக் கொடுங்கள் என்று கேட்கலாம்.

ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் நாங்கள் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தருக்கு டெபாசிட் தொகை கொடுத்துள்ளோம். ஆகையால் அந்தத் தொகையை சக்தி பிலிம் பேக்டரியிடமிருந்து வசூலிக்க, அவர் வெளியிடும் 'கோமாளி' படத்தை நிறுத்தி அதன் தயாரிப்பாளரிடம் வாங்கப் போகிறோம் என்கிறார்கள். இது என்ன புதுவிதமாக இருக்கு என்று எடுத்துச் சொன்னோம். ஆனால், கட்டப் பஞ்சாயத்து முறையில் இந்தப் படத்தை வெளியிட மாட்டோம் என்று திருச்சி திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர் சங்கமும் சொல்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு அராஜகச் செயல். அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது" என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x