Published : 12 Aug 2019 12:00 PM
Last Updated : 12 Aug 2019 12:00 PM

புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள்: ட்விட்டரை விட்டு வெளியேறிய இயக்குநர் அனுராக் காஷ்யப்

அனுரக் கஷ்யாப்: கோப்புப்படம்

தன் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், ட்விட்டரில் இருந்து வெளியேறினார்.

பாலிவுட் பிரபலங்களில், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், பொது தளங்களிலும் இயக்குநர் அனுராக் காஷ்யப் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். இந்நிலையில், கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகைகள் ரேவதி, கொங்கனா சென் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு ஜூலை மாத இறுதியில் கடிதம் எழுதினர். அக்கடிதத்தில், இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில், நடிகை கங்கணா ரணாவத் உள்ளிட்ட திரை பிரபலங்கள், இக்கடிதம் அரசியல் சார்பும், தனிப்பட்ட முறையிலான நோக்கத்தையும் கொண்டிருப்பதாக பதில் கடிதமொன்றை, பிரதமர் மோடிக்கு எழுதினர்.

இந்நிலையில், கும்பல் வன்முறைகளுக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்ட இயக்குநர் அனுராக் காஷ்யப், தன் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாகவும், அதனால், தான் ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கடைசி சில பதிவுகளை இட்ட அவர், "உங்கள் பெற்றோர் போன் கால்கள் மூலம் மிரட்டலுக்கு ஆளாவது, உங்கள் மகளுக்கு இணையவழி மிரட்டல்கள் வருவது குறித்து யாரும் பேச விரும்ப மாட்டார்கள். இதற்கு எந்தவொரு காரணமும் இருக்கப்போவதில்லை. குண்டர்களே ஆளப்போகிறார்கள். குண்டர் தாக்குதலே புதிய வாழ்க்கை முறையாக இருக்கும். புதிய இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என நம்புகிறேன்", எனப் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், "நீங்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நான் ட்விட்டரை விட்டு வெளியேறுவதால் இதுவே என் கடைசி ட்வீட்டாக இருக்கும். நான் பயமின்றி என் மனதில் தோன்றியதைப் பேச அனுமதிக்கப்படாதபோது, நான் பேசாமலே இருக்கிறேன். விடைபெறுகின்றேன்", எனப் பதிவிட்டுள்ளார்.

அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறியதை அடுத்து, அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் அவர் மீண்டும் ட்விட்டர் தளத்துக்குத் திரும்ப வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். அவரது கடைசி ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x