Published : 11 Aug 2019 06:43 PM
Last Updated : 11 Aug 2019 06:43 PM
'மகாநடி' படத்துக்காக எனக்குக் கிடைத்த சிறந்த நடிகைக்கான தேசிய விருதை, எனது தாய்க்கும், எனது குரு பிரியதர்ஷன், நண்பர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன் என கீர்த்தி சுரேஷ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாராகும் படங்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2018-ம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள், சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
அதில், தெலுங்கில் 'மகாநடி' (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து தான் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்த விருதை தனது தாய்க்கு அர்ப்பணிப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், நடிகர்களுக்கு நன்றி தெரிவித்து கீர்த்தி சுரேஷ் கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து முதலில் நன்றி தெரிவிக்கிறேன். நான் பணியாற்றிய, நடித்த ‘மகாநடி’ படத்துக்கு தொடக்கத்தில் இருந்தே பரவலான பாராட்டுகளும், ஊக்கப்படுத்தும் கருத்துகளும், சாதகமான விமர்சனங்களும் வந்ததால் மிகப்பெரிய கவுரவத்தை நிச்சயம் இந்தப் படம் பெறும் என்று நம்பினோம்.
தயாரிப்பாளர்கள் அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத், இயக்குநர் நாக் அஸ்வின், இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர், ஒளிப்பதிவாளர் டேனி சான்ஸே லோபஸ், கலை இயக்குநர் கோலா அவிநாஷ் உள்ளிட்ட இந்தப் படத்தில் வியர்வை சிந்தி, சிறப்பாக வருவதற்குப் பணியாற்றிய அனைத்து துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் நடித்த சக நடிகர்கள் ராஜேந்திர பிரசாத், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலர் இல்லாமல் ‘மகாநடி’ படம் முழுமை அடையாது. தொழி்ல்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் என்னை உலகின் சிறந்த நடிகையான சாவித்ரியைப் போல் மாற்றி இருக்கிறார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தால்தான் நானும், எனது குழுவும் சிறப்பாகப் பணியாற்றினோம் என்று நம்புகிறேன். இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த விருதை, நான் எனது தாய்க்கும், குரு பிரியதர்ஷன், நண்பர்கள், நலம் விரும்பிகள், ஆதரவு அளித்த அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இந்தப் படம் விருதுபெற முக்கியக் காரணமாக இருந்த ஆடை வடிவமைப்பாளர்கள் கவுரங் ஷா, அர்ச்சனா ராவ், காஸ்டியூம் ஸ்டைலிஸ்ட் இந்திரகாசி பட்நாயக் மாலிக் ஆகியோருக்கு வாழ்த்துகள். இவர்களின் ஆழமான ஆய்வும் வடிவமைப்பும் என்னுடைய கதாபாத்திரத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தத்ரூபமாக வெளிப்படுத்தின.
தேசிய விருது வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘மகாநடி’ படத்துக்கு 3 விருதுகள் அளித்த தேர்வுக்குழுவினருக்கும் எனது மனதார நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.