Published : 03 Aug 2019 08:16 PM
Last Updated : 03 Aug 2019 08:16 PM

விஜய் ஆண்டனிக்கு நாயகியாக காவ்யா தாபர் ஒப்பந்தம்

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு காவ்யா தாபர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'மெட்ரோ' படத்தைத் தொடர்ந்து, 'ஆக்ஸிஜன்' எனும் படத்தை இயக்கினார் ஆனந்த கிருஷ்ணா. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வந்த இந்தப் படம் பைனான்ஸ் பிரச்சினையால் நிற்கிறது. அதனைத் தொடர்ந்து தன் புதிய படத்துக்கான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஆனந்த கிருஷ்ணன்.

அந்தப் புதிய கதையில் விஜய் ஆண்டனி நடிக்க சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அரசியல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தை டி.டி.ராஜா தயாரிக்கவுள்ளார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு நாயகியாக காவ்யா தாபர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சரண் இயக்கத்தில் ஆரவ் நடித்து வரும் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் காவ்யா தாபர். அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி - ஆனந்த கிருஷ்ணன் படத்துக்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவாளராகவும், நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'அக்னி சிறகுகள்', 'தமிழரசன்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்தப் படங்களை முடித்துவிட்டு ஆனந்த கிருஷ்ணன் படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x