Published : 03 Aug 2019 04:25 PM
Last Updated : 03 Aug 2019 04:25 PM

தமிழகத்தில் இசை அருங்காட்சியகம்: ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

ஏ.ஆர்.ரஹ்மான் | கோப்புப் படம்

தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகமெங்கும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிகழ்ச்சி தொடர்பாக சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 2) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர், “சென்னையில் நிகழ்ச்சி நடத்துவதற்கு மட்டும் தனி எனர்ஜி வருகிறது. உலகம் முழுக்க சுற்றியாச்சு. ஆனால், சென்னையில் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூடுதலாக உழைத்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் தமிழ்ப் பாடல்கள் தான். கொஞ்சம் இந்திப் பாடலும் கேட்டிருக்கிறார்கள்” என்று பேசினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளும், ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்களும் வருமாறு:

சென்னையில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் மற்ற நாடுகளில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

சொல்ல வேண்டுமா என்ன? சென்னை என்பது வீடு மாதிரி. அன்பு, உத்வேகம் அதிகம். இதற்கு முன்பு நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளைவிட இங்கு இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

ஊர்வசி ஊர்வசி பாடல் மாற்றம் குறித்து?

4 வருடங்களுக்கு முன்பு அப்பாடலில் சில வரிகளை மாற்றினோம். இப்போது அதுவும் பழசாகிவிட்டது. அப்பாடலுக்கான வரிகளை ரசிகர்கள் இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதில் நான்கைந்து பிடித்திருந்தது. இன்னும் பார்க்க வேண்டியது நிறையவுள்ளது.

'பிகில்' படத்திலிருந்து ஏதேனும் பாடல்கள் பாடவுள்ளீர்களா?

ஒரு பாடல் பாடவுள்ளேன்.

மகன் பாடவுள்ளாரா?

இல்லை

உங்களை மாதிரியே உங்கள் மகனும் சிறுவயதில் மியூசிக் ஆல்பம், இசை என  வருகிறார். அதைப் பற்றி.. அவருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?

அவருக்கு அட்வைஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். பிள்ளைகளுக்கு எல்லாம் இப்போது பாடமே படிக்க வேண்டியதில்லை. கூகுள் செய்தாலே அனைத்தும் தெரிகிறது. அவர்களுக்கே நல்லது, கெட்டது தெரிகிறது. நல்லது பண்ணினால் நல்லது நடக்கும், கெட்டது பண்ணினால் திரும்ப நமக்கே நடக்கும் என அவர்களுக்குத்  தெரியும். 

லிடியன் வருகிறாரா?

ஆம். எனக்கு பிடித்த மாணவர். 

99 சாங்ஸ் பாடல்கள் குறித்து சொல்றேன் என கூறியிருந்தீர்கள். இப்போது முடியுமா?

அதுவொரு புது முயற்சி. புதுமுகங்கள், புதுமையான கதை. புது இயக்குநர். ஆனால் படத்தின் பட்ஜெட் புதுமுகங்களுக்கான படத்தை விட 3 மடங்கு அதிகம். அதனால் விநியோக உரிமைக்கு கொஞ்சம் நேரம் எடுத்து பண்ணவுள்ளோம். 

இந்த இசை நிகழ்ச்சி எவ்வளவு நேரம்?

3 மணி நேரத்துக்கும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். எனது இசை நிகழ்ச்சியே ஒரு பயணம் மாதிரி வடிவமைத்திருப்போம். சென்னை இசை நிகழ்ச்சியில் பண்ணுவதை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது.

இசைக் கலைஞர்களை உலக நாடுகளில் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் எம்.எஸ்.வி, ராமமூர்த்தி, டி.எம்.எஸ், பாடலாசிரியர் வாலி என பல மேதைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரு நினைவுச் சின்னமோ, ஒரு தெருவுக்குப் பெயரோ என எதுவுமே இல்லை. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இசை அருங்காட்சியகம் அமைத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் பெங்களூருவில் அதை செய்துள்ளார்கள். அதை தமிழ்நாட்டில் செய்வது நல்ல விஷயம். யோசித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படும். 

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x