Published : 01 Aug 2019 12:01 PM
Last Updated : 01 Aug 2019 12:01 PM

விஜய் சேதுபதி ஆலோசனையால் பிக்பாஸ் வந்தேன்: சேரன் உருக்கம்

நடிகர் விஜய் சேதுபதியின் ஆலோசனையின் பேரில்தான் பிக்பாஸ் போட்டியில் பங்கெடுத்துக்கொண்டதாக இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதன்கிழமை ஒளிபரப்பான பகுதியில், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மொட்டைக் கடிதம் போட்டு கேள்வி கேட்கும்படி பணிக்கப்பட்டனர். இதில், தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள சேரன் ஏன் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்? இதிலிருந்து அவருக்கு என்ன புகழ் கூடுதலாகக் கிடைக்கப் போகிறது, இது எதை நோக்கிய பயணம்? என்கிற ரீதியில் நடிகர் சரவணன் கேள்வி கேட்டிருந்தார்.

கேட்டது சரவணன் என்பது தெரியாதென்றாலும் சேரன் பதில் சொல்ல வேண்டிய நிலை. இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லுகையில், "துறையில் நுழைந்ததிலிருந்து பெயரும் புகழும் விருதும் கிடைத்தது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவற்றை அவ்வளவு சுலபமாக பெற்றுவிடவில்லை. அதே நேரத்தில் அவற்றைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டம் பெரியதாக இருக்கிறது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு நானே கை ஊன்றி எல்லாவற்றையும் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். நான் இயக்குநரானதற்குப் பிறகும் கூட எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்கள் துயரங்கள் இருக்கின்றன. ஆட்டோகிராஃப் வெற்றிதான் நான் அனுபவித்த கடைசி வெற்றி. அதன் பிறகு எனது அனைத்து படங்களுமே பெரும் போராட்டங்களுக்கு நடுவில் செய்தவை தான்.

அந்த இடத்தை விட்டு என்னால் விலகவும் முடியாத நிலை ஏனென்றால் எனக்கு சினிமாவைத் தவிர வேறெதுவும் தெரியாது. என் வீட்டிலும் பிக்பாஸ் செல்வதால் உங்களுக்கு என்ன மீண்டும் பெயரும், புகழும் வந்துவிடப்போகிறது என்று கேட்டார்கள். பெரிய குழப்பம் நிலவியது. இதில் வருமானம் வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

ஆனால் என் படம் வந்து 4 வருடங்கள் இடைவெளி ஆகிவிட்டது. மறுபடியும் என் முகத்தை மக்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும். இது நான் பங்குபெற ஒரு காரணம். இன்னொரு காரணம், நடிகர் விஜய் சேதுபதி தான் என்னை இதில் பங்குபெறுங்கள் என்று இந்த இடத்துக்கு ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தது. அவரிடம் பேசும்போது, 'சார் நான்கு வருடம் இடைவெளி விட்டுவிட்டீர்கள். இங்கிருக்கும் அடுத்த தலைமுறைக்கு உங்களைத் தெரிய வேண்டும். அதற்காக நீங்கள் செல்லுங்கள். 

மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எல்லா இடங்களிலும் பார்க்கிறார்கள். நீங்கள் இந்த 35 வருடங்கள் விழுந்து விழுந்து மீண்டெழுந்த அனுபவத்தை அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் அனுபவம் அவர்களுக்குப் பாடமாக இருக்கும். அவர்களுக்கு எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் பகிரும் வாழ்க்கை அனுபவம் உதவும். நீங்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டே இருங்கள். 

அந்த அனுபவங்களைப் பகிர்வதே இந்த மக்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியம். குடும்ப உறவுகள், கடன் பிரச்சினைகள் என எல்லா விதத்திலும் மீள உங்கள் அனுபவம் உதவும். அதைப் பயன்படுத்துங்கள்' என்றார். அதனால்தான் நான் இங்கு வந்தேன்" என்று உணர்ச்சிகரமாக பேசி முடித்தார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x