Published : 30 Jul 2019 06:05 PM
Last Updated : 30 Jul 2019 06:05 PM

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்: இந்திய ட்ரெண்டிங்கில் இடம் 

கோவையில் நடந்த 45-வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்துகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் அஜித் இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார். 

நடிகர் என்பதைத் தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்படக் கலை ஆகிய துறைகளில் தடம் பதித்தவர் அஜித். இந்தியாவிலேயே பைலட் உரிமம் பெற்ற நடிகர். கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித். அதன் மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். அஜித்தின் வழிகாட்டுதலில் 'தக்‌ஷா' அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தக்‌ஷா அணி வெற்றி வாகை சூடியது.

இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் குறித்து அஜித் தீவிரப் பயிற்சி எடுத்துவந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகப் பரவின. அதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. கோவையில் 45-வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை  நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை ரைஃபிள் கிளப் சார்பில் கடந்த 2 மாதங்களாக தீவிரப் பயிற்சி எடுத்து வந்தார் அஜித். 

இப்போட்டியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், அஜித்தும் கலந்துகொண்டார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அஜித் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே #ThalaAJITHatRifleChampionship என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது கவனிக்கத்தக்கது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x