Published : 30 Jul 2019 05:01 PM
Last Updated : 30 Jul 2019 05:01 PM

சரவணனை மன்னிப்பு கேட்க வைத்த ‘பிக் பாஸ்’

கன்பெஷன் அறையில் சரவணன்

‘காலேஜ் படிக்கும்போது பெண்களை உரசவே பஸ்ஸில் செல்வேன்’ என்ற தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் ‘பிக் பாஸ்’ சரவணன்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சமீபத்திய எபிஸோடு ஒன்றில், பஸ்ஸில் கூட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் உரசுவது குறித்து பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் உரையாடினார் கமல்ஹாசன். அப்போது, ‘சிலர் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் வருவார்கள்’ என்றார்.

அந்த சமயத்தில் கையை உயர்த்திய போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், ‘காலேஜ் படிக்கும்போது நான் இப்படி பண்ணிருக்கேன் சார்’ என்று கமல்ஹாசனிடம் சொன்னார். அதைக்கேட்டு, பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களும் சிரித்தனர்.
சரவணனின் இந்தக் கருத்துக்கு, கடுமையான விமர்சனம் எழுந்தது. சின்மயி உள்ளிட்டவர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

“நடிகர் சரவணன் பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே ஏறியதாகக் கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கு அது நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காகப் பெண்களும் கைதட்டுகிறார்கள்” என ட்விட்டரில் பதிவிட்டார் சின்மயி.

இப்படி எதிர் விமர்சனங்கள் கடுமையான நிலையில், நேற்று (ஜூலை 29) ஒளிபரப்பான நிகழ்ச்சியில், தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்ததுடன், மன்னிப்பும் கேட்டுள்ளார் சரவணன்.

சரவணனை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ், ‘இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் சேனல், எந்த வகையிலும் பெண்களை இழிவுபடுத்துவதையோ, அவமரியாதை செய்வதையோ ஏற்றுக் கொள்ளாது. நீங்கள் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சி) கமல் சார் எபிஸோடில் சொன்ன கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்கிறார்.

அதற்குப் பதிலளித்த சரவணன், “இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் எல்லா மக்களுக்கும் நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். கமல் சார் சொன்னபோது, ‘நானும் இதுமாதிரி செய்திருக்கேன் சார்’ என அவசரமாகக் கைதூக்கினேன்.

நான் காலேஜ் படிக்கும்போது நிறைய தவறுகள் செய்துள்ளேன். எல்லா மாணவர்களும் செய்கிற சின்னச் சின்ன தவறுகள். ‘யாருமே அதைப் பண்ணாதீங்க’ என்று சொல்வதற்காகத்தான் நான் அதைச் சொன்னேன். அதற்குள் கட் ஆனதால் சொல்ல முடியாமல் போய்விட்டது. 
யாரும் மன வருத்தப்பட வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. சிறுவயதில் தவறுதலாகச் செய்துவிட்டேன். இப்போது சின்ன வயதில் இருப்பவர்கள் இதைச் செய்யாதீர்கள் என்று சொல்லத்தான் வந்தேன். ‘என்னை மாதிரி யாரும் தப்பு பண்ணாதீங்க. தப்பு பண்ணா தண்டனை இருக்கிறது என்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன். 

நான் இப்படிச் சொன்னதால் யாருக்காவது மன வருத்தம் ஏற்பட்டிருந்தால், தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். யாருமே இப்படிச் செய்யக்கூடாது என்பதை சொல்வதற்காகத்தான் நான் கைதூக்கினேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x