Published : 27 Jul 2019 05:08 PM
Last Updated : 27 Jul 2019 05:08 PM

அரசியல்வாதிகளுக்கு சமூக அக்கறை கிடையாது; ஊழலில் திளைக்கிறார்கள்: பாரதிராஜா

அரசியல்வாதிகளுக்கு சமூகப் பொறுப்பு கிடையாது. ஊழலில் திளைக்கிறார்கள் என்று 'கென்னடி கிளப்' இசை வெளியீட்டு விழாவில்  பாரதிராஜா பேசினார்.

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோருடன் பல்வேறு கபடி வீராங்கனைகள் இணைந்து நடித்துள்ள படம் 'கென்னடி கிளப்'. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது.

இதில் படக்குழுவினரோடு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது: 

"நல்ல கலைஞர்களை வளர்கின்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தவில்லை என்றால் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இந்தப் படத்தில் ஒரு குடும்பத்துடன் வாழ்ந்தேன் என்று தான் சொல்வேன். ஒரு இயக்குநர், நடிகர் என்ற எண்ணமே வரவில்லை. 

சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுசாமி கொடுத்து வைத்தவர். சினிமா கலைஞர்கள் எப்போதுமே கொடுத்து வைத்தவர்கள். எனக்கு அம்பானி போல் வசதியாக வாழ விருப்பமில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த கபடி வீராங்கனைகள் நடித்ததாகவே தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் முதலில் சல்யூட் அடிக்க வேண்டும். 

நல்லுசாமி கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். இந்த மண்ணின் விளையாட்டான கபடியை 50 ஆண்டுகள் பொத்தி பொத்திப் பாதுகாத்தவர் சுசீந்திரனின் அப்பா நல்லுசாமி. ஆனால், அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். இது சினிமா அல்ல, தெற்கு மண்ணின் வாழ்க்கை. கபடி இன்று உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பங்கு நல்லுச்சாமிக்கு இருக்கிறது. 

சசிகுமாரைப் பார்த்தாலே ஒரு குழந்தை முகம் இருக்கும். நடிப்பதே தெரியாமல் நடிப்பவன் தான் நடிகன். அது சசிகுமார் தான். நான் கூட இந்தப் படத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தான். நானும் டி.இமானும் ஒரு படத்திற்கு இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அப்படம் நின்று விட்டது. அவர் உடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார். படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பல படங்கள் பார்த்திருக்கிறேன். மிகவும் திறமையானவர். 

இங்கு எடிட்டர் லெனின் பேசும்போது குறைத்துப் பேசினார். பேசினால் பிரச்சினை வரும் என்றார். நிறைய பேச வேண்டும், பேசினால் தான் பிரச்சினைக்கு தீர்வு வரும். சமீபத்தில் நீங்கள் பேசிய பேச்சு அற்புதம். ’மாணவர்கள் பிரச்சினை செய்ததற்காக காவல்துறையினர் மாணவர்கள் கையை உடைத்தார்கள். அதையே சினிமாவில் வைத்தால் இயக்குநருடைய கையை, நடிகர்களுடைய கையை உடைப்பாயா’ என்று கேட்டார்.

அற்புதமான கேள்வி அது. அவருக்குத் தலைவணங்குகிறேன். சினிமாவில் ஒரு அளவுக்கு தான் வன்முறை இருக்க வேண்டும். பார்ப்பவர்களைத் தூண்டி விடக்கூடாது. ஆகவே லெனின் நீ பேசு. பயப்படாதே. நாங்கள் எல்லாம் பின்னால் இருக்கிறோம். 

சினிமாவுக்கு நீங்கள் எல்லாம் வருவதற்கு முன்பு வந்துவிட்டேன். 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அனைவரும் சினிமாவுக்கு நல்லது செய்வோம். சினிமாக்காரர்களுக்குதான் இந்த சமூகத்தில் மிகப்பெரிய சமூகப் பொறுப்பு இருக்கிறது. வேறு யாருக்கும் அது இல்லை. அரசியல்வாதிகளுக்குக் கூட கிடையாது. அவர்கள் ஏற்கெனவே ஊழலில் திளைக்கிறார்கள். சினிமாக்காரர்கள் கற்பனைகளைச் சுமந்திருப்பவர்கள். எதிர்கால சமுதாயம் கெட்டுப் போகாத அளவுக்கு நல்ல படங்களைக் கொடுப்போம்".

இவ்வாறு பாரதிராஜா பேசினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x