Published : 27 Jul 2019 04:13 PM
Last Updated : 27 Jul 2019 04:13 PM

'விஸ்வாசம்' வசூல் ரூ.100 கோடி; அதில் ரூ.50 கோடி இமானுக்குத்தான் - டி.சிவா புகழாரம்

இமான் | படம்: அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து...

'விஸ்வாசம்' வசூல் 100 கோடி ரூபாய். அதில் 50 கோடி ரூபாய் இமானுக்குத்தான்  என்று 'கென்னடி கிளப்' இசை வெளியீட்டு விழாவில் டி.சிவா புகழாரம் சூட்டினார்.

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோருடன்  கபடி வீராங்கனைகள் இணைந்து நடித்துள்ள படம் 'கென்னடி கிளப்'. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது.

இதில் படக்குழுவினரோடு பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, “சுசீந்திரனின் பெருமையைச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கிறது. அப்பாவுக்கு மரியாதை 'நல்லுசாமி பிக்சர்ஸ்', அம்மாவுக்கு மரியாதை 'தாய் சரவணன்' என சொல்லிக் கொண்டே இருக்கலாம். தமிழ் சினிமாவின் பொக்கிஷமான பாரதிராஜா சாருக்கு இதில் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்.

கபடி விளையாட்டை மையப்படுத்திய கதை. பண்பாடு, பாசம், குடும்பம் என தன் கதைகளை எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல இயக்குநர் சுசீந்திரன். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும். ஏராளமான சோதனைகளுக்கு நடுவில் சாதனைகளை செய்து கொண்டே இருப்பவர் தான் சசிகுமார் சார். அவரது வெற்றி கண்டிப்பாக போராளிகளின் வெற்றியாக இருக்கும். அவர் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை என்றால் அது இமானைத் தான் சொல்ல வேண்டும். யாரையும் ஒரு துளிகூட சங்கப்படுத்தாத ஒரு பழக்கம் கொண்டவர். அன்பு, எளிமை அவருக்குச் சொந்தம். அவர் பண்ணிக் கொண்டிருக்கிற சாதனைகள் எல்லாம் சத்தமில்லாமல் இருக்கும்.

'விஸ்வாசம்' வசூலித்த 100 கோடி ரூபாயில், 'கண்ணான கண்ணே' பாடலுக்காக இமானுக்கு 50 கோடி ரூபாய் கொடுத்துவிடலாம். அப்படியொரு வெற்றிக்குச் சொந்தக்காரர். மனதுக்குள் புகுந்துவிடுகிற பாடல்களை எப்போதாவது தான் கேட்கிறோம். அதுவும் இமானிடம் மட்டுமே கேட்கிறோம். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த இன்னொரு இசை பொக்கிஷம் இமான். 

கபடி விளையாட்டு வீராங்கனைகளைப் பார்ப்பதற்கே பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு இந்தப் படத்தின் மூலம் பெருமை சேர்த்த சுசீந்திரனுக்கு நன்றி” என தயாரிப்பாளர் டி.சிவா பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் இமான், “சிவா சாருடைய வார்த்தைகளுக்கு நன்றி. இன்னும் மெருகேற்ற வேண்டிய விஷயங்கள், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய  உள்ளன. அதற்கு உண்டான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய வேலை செய்யத்தான் உடம்பையும் குறைத்துள்ளேன்” என்று பேசினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x