முதல் பார்வை: டியர் காம்ரேட்

முதல் பார்வை: டியர் காம்ரேட்
Updated on
2 min read

மாணவர்களின் பிரச்சினைகளுக்காகப் போராடும் இளைஞன், தன் காதலியின் பிரச்சினைக்காகத் தீவிரமாகப் போராடினால் அவனே 'டியர் காம்ரேட்'.

கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா மாணவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் போராடுகிறார். இதனால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் பகைக்கு ஆளாகிறார். பக்கத்து வீட்டுக்கு விருந்தினராக வரும் ராஷ்மிகாவும் விஜய்யும் ஒரு விபத்தின் போது அறிமுகம் ஆகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டின் போது ராஷ்மிகாவின் அபார ஆட்டத்தால் விஜய் டீம் வெல்கிறது. ராஷ்மிகா மாநில அளவில் விளையாடும் கிரிக்கெட் வீராங்கனை என்பது தெரியவந்த பிறகு, விஜய் அவரைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறுகிறது. காதலில் விழுகிறார். ராஷ்மிகாவும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். காதலும் மகிழ்ச்சியும் கரை புரண்டு ஓட, மீண்டும் ஒரு பிரச்சினையில் விஜய் அடிதடியில் இறங்குகிறார். இதனால் அஞ்சும் ராஷ்மிகா விஜய் மீதான காதலை முறித்துக் கொள்கிறார். 

3 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளும் பயணம் விஜய்யை மொத்தமாக மாற்றுகிறது. சவுண்ட் டிசைனிங்கில் கவனம் செலுத்தும் அவர் திடீரென்று ஒரு மருத்துவமனையில் ராஷ்மிகாவின் சகோதரி ஸ்ருதியைப் பார்க்கிறார். ராஷ்மிகா மனநல சிகிச்சையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். ராஷ்மிகா ஏன் மனநல சிகிச்சை பெறுகிறார்? அவருக்கு நடந்தது என்ன? ஏன் கிரிக்கெட் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்? ராஷ்மிகாவுக்காக விஜய் என்ன செய்கிறார்? இவர்களின் காதல் சேர்ந்ததா? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. 

காதலையும் போராட்டத்தையும் இரண்டறக் கலந்து கொடுத்த விதத்தில் இயக்குநர் பரத் கம்மா முழுமையான படத்தில் முத்திரை பதிக்கிறார். 

படம் முழுக்க விஜய் தேவரகொண்டாவின் ராஜ்ஜியம்தான். தற்கொலைக்கு முயன்ற தோழிக்கு அறிவுரை சொல்வது, பயம் இல்லாமல் துணிச்சலாக யாரையும் எதிர்கொள்வது, அநியாயம் கொண்டு பொங்குவது, பிறர் நலனுக்காகப் போராடுவது என நடிப்புக் களத்தில் களம் இறங்கி அப்ளாஸ் அள்ளுகிறார். காதலின் பிரிவிலும் பயணத்தின் பாதையிலும் மாற்றத்தை உணர்த்துகிறார். நீதி வேண்டிப் போராடும் இடத்தில் மனதில் நிறைகிறார். 

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் நல்வரவு. கிரிக்கெட் பிளேயர், அன்பான தங்கை, டீஸ் செய்யும் சின்னப் பெண், காதலி, வருத்தங்களையும் வலிகளையும் சுமக்கும் பாதிக்கப்பட்ட பெண் என்று எல்லா கோணங்களில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். இரண்டாம் பாதி முழுக்க அவரை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அதற்கான நியாயத்தை அவர் சிறப்பாகவே செய்துள்ளார்.

சாருஹாசன், ஸ்ருதி ராமச்சந்திரன், கல்யாணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார்கள்.  

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கேரளாவின் நிலப்பகுதியை நினைவூட்டும் அளவுக்கு ரம்மியமான காட்சிகளைக் கண்களுக்குள் கடத்துகிறது. ஜஸ்டின் பிரபாகரின் இசையில் ஆகாச வீடும், புலராத பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. படத்துக்குப் பொருத்தமான பின்னணி இசையில் ஜஸ்டின் திறமை காட்டியுள்ளார். படத்தின் நீளம்தான் கொஞ்சம் அதிகம். ஸ்ரீஜித் சாரங் அதைக் கொஞ்சம் கவனித்து செதுக்கியிருக்கலாம். 

வரும்போது சந்தோஷத்தைக் கொடுக்குற காதல், போகும்போது ஏன் வருத்தத்தைக் கொடுக்குது, ஒரு காம்ரேட் போராடுனா அந்தப் போராட்டம் அவனுக்கு நிம்மதியைக் கொடுக்கணும் சுதந்திரத்தை கொடுக்கணும், தைரியமா இருக்குறது தப்பில்லை... இந்தப் பிரச்சினையில ஏதாவது இழந்தா நீ ரொம்ப வருத்தப்படுவ, என்னை பயமுறுத்துறதா நினைச்சுக்கிட்டு நீங்கதான் பயப்படுறீங்க போன்ற வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன. 

காதல் படமா, பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் பேசும் படமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. முதல் பாதி முழுக்க காதலில் பயணிக்கும் படம் போராட்டத்திற்கான பின்னணியை உட்கூறாகப் பதிவு செய்திருப்பது சிறப்பு. உணர்ச்சிவசப்பட்டு சண்டை போடும் நாயகன் பின்பு தீவிரமாகப் போராடுவதன் அவசியத்தையும் உணர்த்தும் விதம் இயக்குநர் பரத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. சில காட்சிகள் எங்கு நடக்கின்றன என்றே புரியாத அளவுக்கு குழப்பங்கள், சில லாஜிக் பிரச்சினைகளைத் தாண்டி காதலிக்கும் ஒரு விஷயத்துக்காக கடைசி வரை தைரியமாகப் போராட வேண்டும் என்ற கருத்தை மிக அழகாகச் சொன்ன விதத்தில் 'டியர் காம்ரேட்' வசீகரிக்கிறார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in