

'டூலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் நடிக்கும் புதிய படத்துக்கு 'வட்டார வழக்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஓர் இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை ‘டூலெட்’என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் 'டூலெட்' படத்தின் கதை. சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா, தருண் இப்படம் பல்வேறு விருதுகளை வென்றது. பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தன்னை நிரூபிக்கப் போராடும் உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் சந்தோஷ் கச்சிதமாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளினார்.
இந்நிலையில் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கண்ணுசாமி ராமச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் நாயகனாக நடிக்கிறார். 'ஒரு கிடாயின் கருனை மனு' படத்தின் நாயகி ரவீணா இதில் சந்தோஷ் நம்பிராஜனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சுரேஷ் மணியன் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜ் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தை K.S.ஸ்டுடியோ சங்கர் மதுரா டாக்கீஸ் சார்பாக தயாரிக்கிறார்.
மதுரை கிராமத்து மண் சார்ந்த உண்மைச் சம்பவத்தையும் மனிதநேயத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்துக்கு வட்டார வழக்கு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தோடனேரி, சமயநல்லூர், சித்தாலங்குடி பகுதியில் 52 நாட்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.