Published : 22 Jul 2019 10:10 AM
Last Updated : 22 Jul 2019 10:10 AM

’’வேலுநாயக்கர் போதைலேருந்து இன்னும் தெளியலைன்னு ரஜினி சொன்னார்’’ -  இயக்குநர் பி.வாசு ப்ளாஷ்பேக்

வி.ராம்ஜி

’’வேலுநாயக்கர் போதைலேருந்து நான் இன்னும் தெளியலைன்னு ரஜினின்னு சொன்னார்’’ என்று இயக்குநர் பி.வாசு தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ இணையதளத்துக்காக இயக்குநர் பி.வாசுவை பேட்டி எடுத்தார். 
அதில் அவர் கூறியதாவது:
ரஜினி சார் ஆரம்ப காலத்திலிருந்தே நல்ல பழக்கம். சத்யா மூவீஸ் ரஜினியிடம் சென்று படம் பண்ணக் கேட்டதற்கு, ‘பி.வாசுவை டைரக்டராப் போடுங்க’ என்று ரஜினிதான் சொன்னார். மேலும் பிரபு என் மேல் இருந்த பிரியத்தால், ரஜினியிடம் ‘பி.வாசு கூட சேர்ந்து படம் பண்ணுங்க. ரொம்ப நல்லாருக்கும்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். இத்தனைக்கும் ‘சின்னதம்பி’யெல்லாம் அப்போது வரவே இல்லை. ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்தில்தான் பிரபு என்னுடன் பணியாற்றியிருந்தார். 
 இதனால் சத்யா மூவீஸ் நிறுவனத்துக்கு கதை சொல்லச் சென்றேன். ஆர்.எம்.வீரப்பன் அவர்களிடம் கதை சொன்னேன். எம்ஜிஆருக்காக எத்தனையோ கதைகள் பண்ணியவர் அவர். அவருக்குப் பிடித்துப் போனது. பிறகு ரஜினி சாரிடம் கதை சொன்னேன். ‘அவருக்கே பிடிச்சிருச்சுல்ல... அப்புறம் என்ன... ஓகேதான்’ என்றார். அந்தப் படம்தான் ‘பணக்காரன்’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து ரஜினி சாரும் நானும் அடிக்கடி மனம் விட்டுப் பேசிக்கொள்வோம். நிறைய விஷயங்கள் பேசுவார். ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது, ‘நாயகன்’ பிரமாதமான படம். கமல் சாரோட நடிப்பு, மணிரத்னம் சாரோட டைரக்‌ஷன், படத்தோட மேக்கிங் எல்லாமே மிரட்டலா இருக்கு. நீங்க ‘நாயகன்’ மாதிரி ஒரு படம் பண்ணவே இல்ல சார்’ என்றேன். அவரும் ‘ஆமாம்’ என்று ஒத்துக்கொண்டார்.
பிறகு ஒருநாள், ‘இன்னும் வேலுநாயக்கர்தான் மனசுலதான் இருக்காரு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதன் பின்னர், கமல் சாருக்கு போன் போட்டார். ‘கமல்... படம் பாத்து இவ்ளோ நாளாச்சு. இன்னும் ‘வேலுநாயக்கர்’ போதைலேருந்து நான் மீண்டு வரவே இல்ல. சூப்பர். பிரமாதப்படுத்திட்டீங்க’ என்று  பாராட்டினார். 
இவ்வாறு பி.வாசு தெரிவித்தார். 
 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x