

பந்தயங்களில் ஜெயிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட அமலாபால், ஒருநாள் இரவு முழுக்க நிர்வாணத்துடன் அலுவலகக் கட்டிடத்தில் தனியாக இருப்பதாக பெட் (பந்தயம்) கட்டினால் அதனால் ஆபத்துகள் ஏற்பட்டால் அதுவே 'ஆடை'.
தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் அமலாபால், குறும்புத்தனமான, விளையாட்டுத்தனமான செயல்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் ஃப்ராங்க் ஷோவில் நடிக்கிறார். இயல்பாகவே பந்தயங்களின் மீதான ஆர்வத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பெட் கட்டி விளையாடி, அதில் வெற்றியும் பெறுகிறார். கேமராவை ஒளித்து வைத்து த்ரில் என்கிற பெயரில் இப்படி விளையாடுவதைக் காட்டிலும் செய்தி வாசிப்பது சிரமம் என்கிறார் தோழி ரம்யா. உடனே ரம்யாவின் சவாலையும் அமலாபால் சந்திக்கத் தயார் ஆகிறார். வெளிநாட்டில் ஆடை இல்லாமல் செய்தி வாசிப்பதும் நடக்கிறது. அதை வேண்டுமானாலும் முயற்சி செய் என்கிறார் ரம்யா.
அமலாபால் தன் பிறந்த நாள் அன்று நண்பர்களுடன் மது அருந்துகிறார். அப்போது விளையாட்டுத்தனமாக ஆடைகளைக் கழற்றி செய்தி வாசிப்பது போல் பாவனை காட்டுகிறார். அன்று இரவு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. விடிந்தவுடன் தான் நிர்வாணக் கோலத்தில் இருப்பதைப் பார்த்துப் பதறுகிறார். தன் உடலை மறைக்க ஆடை தேடி அலைகிறார். அங்கே எதிர்பாராவிதமாக ஒரு கொலை நடந்ததாக போலீஸார் வருகின்றனர். ஒரு தெருநாய் துரத்திக்கொண்டே வருகிறது. பக்கத்து அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர், அமலாபாலின் நிலை அறிந்து பார்க்க வருகிறார்.
அமலாபால் நிர்வாணத்தில் இருக்க யார் காரணம்? ஏன் அந்த நிலைக்கு ஆளானார்? அவரது நண்பர்களின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
குறும்பு வீடியோக்களின் விளைவு, சுதந்திரமாக இருக்க நினைக்கும் பெண்ணுக்கு ஏற்படும் நிலை ஆகியவற்றை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். சமரசமில்லாமல் கதையின் களத்துக்கு ஏற்ப நேர்மையான படைப்பைக் கொடுத்ததற்காக அவருக்கு வாழ்த்துகள்.
படத்தை ஒட்டுமொத்தமாகத் தாங்கி நிற்கிறார் அமலாபால். குறும்புத்தனம், பெட் கட்டுவது, பைக் ரேஸில் முந்துவது, புடவை கட்டியது போன்ற கனவை கெட்ட கனவு என்று சொல்வது, உடன் பணிபுரியும் நண்பன் காதலைச் சொல்லும்போது திட்டுவது, சவால்களை சாதாரணமாக சந்திப்பது, தன் நிர்வாணத்துக்கு யார் காரணம் என்று தெரிந்து பழிவாங்குவேன் என்று கோபத்தைக் கொப்பளிப்பது என காமினி கதாபாத்திரமாகவே பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். இரண்டாம் பாதி முழுக்க ஆடையில்லாமல் நடித்திருக்கும் அமலாபாலின் துணிச்சல் பாராட்டுக்குரியது. துளி விரசம் இல்லாத, பதைபதைப்பான நடிப்பில் மனதில் நிற்கிறார்.
விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி, வி.ஜே.ரம்யா, சரித்திரன், ரோஹித் நந்தகுமார் ஆகியோர் உறுதுணை நடிப்பை நிறைவாக வழங்கியுள்ளனர்.
விஜய் கார்த்திக் கண்ணனுக்கு ஒரு ராயல் சல்யூட். துளி ஆபாசம் இல்லாமல், சலனப்படுத்தாமல் எல்லை அறிந்து மிக நேர்த்தியான ஒளிப்பதிவில் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறார். அவரின் மெனக்கிடல் மெச்சத்தகுந்தது. ஊர்கா பேண்ட் பிரதீப் குமாரின் இசையில் நீ வானவில்லா பாடல் அடர்த்தியின் அடையாளம். பின்னணி இசைபடத்துக்கு வலு சேர்க்கிறது. ஷஃபிக் முஹம்மது அலியின் எடிட்டிங்கில் நேர்த்தி மிளிர்கிறது.
படத்தை எந்தத் தொய்வும் இல்லாமல் அழகாக காட்சிகளுக்குள் ஒன்றச் செய்கிறார் இயக்குநர் ரத்னகுமார். ஃப்ராங்க் ஷோ நீளத்தைக் கொஞ்சம் குறைத்து நேராக பிரதான களத்துக்கு வந்திருந்தால் இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும். பெண்ணியம் பேசும் பெண் தனக்கு நேர்ந்த நிலையைக் கண்டு பிற்போக்காகவே நடந்துகொள்வதுதான் நெருடல். தெருநாய், போலீஸ் மீண்டும் வந்து தேடுவது, பக்கத்து அலுவலக இளைஞர் நோட்டம் விடுவது என பரபரப்புக்காவும் பதைபதைப்புக்காகவுமே சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
அமலாபாலின் நிலைக்குக் காரணம் யார் என்பதை விளையாட்டுத்தனமாக அணுகியிருந்தால் படத்தின் தளமே மாறியிருக்கும். அத்தகைய மோசடியைச் செய்யாமல் நேர்மையான அணுகுமுறையில் இயக்குநர் ரத்னகுமார் வெற்றி பெற்றுள்ளார். அமலாபால் ஆடையில்லாமல் இருக்கும் நிலைக்கான காரணம் குறித்தும் பின்னணி குறித்தும் கூறிய விதம் ஏற்புடையதாக உள்ளது. மீ டூ சர்ச்சை பற்றி தைரியமாக சொன்ன ரத்னகுமாருக்கு வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும். மொத்தத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் 'ஆடை' வசீகரிக்கிறது.