Published : 18 Jul 2019 09:15 PM
Last Updated : 18 Jul 2019 09:15 PM

பிக்பாஸ் வீட்டில்   புகைப்பிடிக்கும் அறை ‘சட்ட விரோதம்’: புகையிலை கண்காணிப்பு குழு புகார்

பிக்பாஸ் 3ம் அத்தியாயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் தொடங்கியது முதல் அந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்நிலையில் புகையிலை கண்காணிப்புக் குழு பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் புகைப்பிடிக்கும் அறை, அங்கு புகைப்பிடிப்பது காட்சிப்படுத்தப்படுவது குறித்து மாநில, மத்திய அரசுகளுக்கு புகார் அனுப்பியுள்ளது. 

ஸ்டார் விஜய் சேனலுக்கு எதிராகவும் புகார் எழுப்பப்பட்டுள்ளது.  சீசன் ஒன்று முதல் ஸ்மோக்கிங் அறை பிக் பாஸ் நிகழ்ச்சி வீட்டில் இருந்து வருகிறது. இந்த ஸ்மோக்கிங் அறையில் போட்டியாளர்கள் சுதந்திரமாகச் செயல்படலாம்.  சீசன் 3இல் புகைப்பிடிக்கும் அறை சிறியதாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேமராக்கள் இல்லை போல் தெரிகிறது. 

3 சீசன்களிலும் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர் உட்பட புகைப்பிடிப்பது நிகழ்ந்து வருகிறது, ஓவியா புகைப்பிடித்தது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள்மத்தியிலும் ஆன்லைன் நேயர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. 

இந்த தனியான புகைப்பிடிக்கும் அறையை தடை செய்ய முடியுமா என்று தமிழ்நாடு புகையிலைப் பொருள் கட்டுப்பாட்டு மக்கள் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர் கூறும்போது, “சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம் 2003-ன் படி யாரும் பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது. 30 அறைகள் கொண்ட ஹோட்டல்கள், 30 நபர்கள் அமரக்கூடிய உணவு மையங்கள், விமானநிலையங்கள், ஆகிய இடங்களில்தான் புகைப்பிடிக்க தனியான இடங்கள் ஒதுக்கப்பட முடியும், ஆனால் மற்ற இடங்களில் தனித்த புகைப்பிடிக்கும் அறைகளுக்கு அனுமதியில்லை. அதுவும் இந்த ஷோ உலகம் முழுதும் பார்க்கப்படுகிறது,குழந்தைகள் பார்க்கின்றனர் இது அவர்களிடையே ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் பொது இடத்தில் புகைப்பிடித்தார், இது தொடர்பாகவும் அவருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்கிறார் அலெக்ஸாண்டர். 

பிக்பாஸ் இதுவரை பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது, தற்போது தனித்த புகைபிடிப்பு அறை சர்ச்சை உருவாகியுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x