Last Updated : 18 Jul, 2019 11:41 AM

 

Published : 18 Jul 2019 11:41 AM
Last Updated : 18 Jul 2019 11:41 AM

38 வருடங்கள் கழித்தும்... ‘அலைகள் ஓய்வதில்லை’ - அப்பவே அப்படி கதை

வி.ராம்ஜி 
கருப்பு வெள்ளை திரைப்படக் காலத்தில் இருந்தே கலர்கலரான காதல் கதைகள் உண்டு. ‘தேவதாஸ்’ கூட காதலின் ஆழம் சொன்ன கதைதான். 'கல்யாணப்பரிசு’ கூட காதலின் கனம் சொன்ன காவியம்தான். தவிர, குடும்ப, க்ரைம் கதைகளுக்குள்ளே கூட காதல் போர்ஷன் வைத்து, கதையை நகர்த்தி ஜெயித்த இயக்குநர்கள் உண்டு. அதேசமயத்தில், விடலைப் பருவத்தில், பள்ளி முடித்த கையுடன் காதலை கைகோர்த்துக் கொண்ட காதல், அப்போது தமிழ் சினிமாவுக்குப் புதுசுதான். அந்தப் புதுசு... இன்று வரைக்கும் புதிதாகவே இருக்கிறது. அது... ‘அலைகள் ஓய்வதில்லை’. 
இந்தப் படம் காதலைச் சொன்ன படமா என்றால் ஆமாம். அது மட்டுமல்ல... மத மாறுபாடுகளையும் மதம் தாண்டிய காதலையும் அப்படி காதலித்தால் வருகிற எதிர்ப்புகளையும் சொன்ன படமும் கூட! 
இந்து பிராமண ஏழைக் குடும்பத்தின் பையனுக்கும் பணக்கார கிறிஸ்தவ வீட்டுப் பெண்ணுக்கும் நடுவே முளைத்து மலர்கிற காதலும் அந்தக் காதலுக்கு பணம், ஜாதி, மதம், அந்தஸ்து முக்கியமாக மதத்தின் மீது கொண்ட ‘மதம்’ என எல்லாமே கலந்துகட்டி, காதலைக் காவு வாங்க ஒற்றைக் காலில் நிற்பதும், இரண்டு இதயங்களும் இணைந்துவிட்ட பிறகு, மதமாவது பிரிவினையாவது என்று காதலர்கள் கைகள் கோர்த்து, ஓர் முடிவெடுத்து உறுதியாக இருப்பதும் என வந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ கவிதை போல் காதலையும் கொஞ்சம் கோபத்துடன் மத நல்லிணக்கத்தையும் உரக்கச் சொன்னதுதான் ஆகச்சிறந்த வெற்றியைத் தேடித் தந்தது. 
பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஏழை மாமியின் மகன் விச்சு. பள்ளி நேரம் போக, நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றி வந்து அலப்பரையைக் கொடுப்பதுதான் அவன் வேலை. அதே ஊரில், பணக்கார டேவிட்டின் தங்கை மேரி, பட்டணத்தில் படிக்கிறாள். அண்ணனின் முழுக்கட்டுப்பாட்டில், பயந்து நடுங்கி வளர்கிறாள்.
விச்சு மேரியும் சந்திக்கும் போது முட்டிக்கொள்கிறார்கள். முதலில் முட்டிக்கொண்டால், பிறகு காதல் என்கிற சினிமா இலக்கணம் போல் தெரிந்தாலும், இருவரும் முட்டிக்கொள்வதற்கும் டீஸ் செய்து நோகப்பண்ணுவதற்கும் கிராமத்துக்கே உரிய குறும்பும் குசும்பும் காரணம் என்பதை மறந்துவிடமுடியாது. 
கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மேரி, பாட்டு பாடுகிறாள். அந்தப் பாட்டு நாராசமாய் இருக்கவே விச்சுவும் அவன் நண்பர்களும் கேலி செய்கிறார்கள். அதன் பிறகு, பாட்டு கற்க வருகிறாள், விச்சுவின்  அம்மாவிடம்! கொஞ்சம் கொஞ்சமாகக் கற்கிறாள். ஒருநாள் அவள் பாட... அதில் சொக்கிப் போகிறான் விச்சு. குரல் பிடிக்க, அவளின் உடலும் பிடிக்க அவளின் மனதில் இடம் பிடிக்க அவள் பின்னே ஓடுகிறான். அவளையே சுற்றிச் சுற்றி வருகிறான். ஒருகட்டத்தில்... மேரிக்குள்ளேயும் காதல் அலையடிக்கிறது. இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். 
அந்தக் காதல் எபிசோடுகள் மொத்தமும் புதுக்கவிதைகள். ஒருகட்டத்தில், அடுத்தகட்ட கல்லூரிப் படிப்பைத் தொடர அவள் வெளியூர் செல்லவேண்டிய நிலை. ஆனால் போக மனமில்லை. ஏதேதோ செய்து, இங்கேயே இருக்கிறாள். காதல் இன்னும் பலப்படுகிறது. 
அந்த சமயத்தில்தான், தங்கையின் காதல் அண்ணனுக்குத் தெரியவருகிறது. கோபமாகி விச்சுவையும் மேரியையும் விளாசித் தள்ளுகிறான். மேரி வெளியே சென்று வர தடை போடுகிறான். பார்க்க, பேச, காதல் பரிமாற முடியவில்லை. இப்படியே போனால், பிரித்தே விடுவார்கள் என்று முடிவெடுக்கிறார்கள். நண்பர்களின் உதவியுடன் ஊரை விட்டு ஓடிப்போகத் துணிகிறார்கள்.


ஆயுதங்களுடன் ஊரே திரண்டு வந்து மடக்குகிறது. அப்போது வெட்டுவதற்கு வரும் அண்ணனுக்கும் ஊருக்கும் இந்த உலகுக்கும் புதியதொரு வழியைக் காட்டுகிறார்கள் காதலர்கள். எல்லோரும் விக்கித்து நிற்க... விக்கியும் மேரியும் ஊரைவிட்டுச் செல்கிறார்கள். அலைகள் அடித்துக்கொண்டே இருக்க, அங்கே படம் நிறைவுறுகிறது.
இயக்குநர் பாரதிராஜாவின் முக்கியமான படங்களில் ‘அலைகள் ஓய்வதில்லை’ யும் ஒன்று. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் தனி முத்திரை பதித்து பேரும்புகழும் சம்பாதித்த நவரசநாயகன் கார்த்திக்கின் முதல் படம் இது. அம்பிகாவின் தங்கை என்று ஆரம்பத்தில் தெரிந்தது. பிறகு, தன் நடிப்பாலும் முகபாவங்களாலும் தனித்த புகழைப் பெற்ற ராதா அறிமுகமானதும் இதில்தான். ‘மம்பட்டியான்’ தியாகராஜன், ரசிக மனங்களில் பச்சக்கென்று முதன்முதலில் புகுந்துகொண்டது இந்தப் படத்தில்தான். கவர்ச்சி நடிகை, கிளப் டான்ஸ் நடிகை என்றெல்லாம் குத்தப்பட்ட முத்திரைகளையெல்லாம் அகற்றி, அட்டகாசமாக கேரக்டர் ரோலை அழகாகப் பண்ணிய சில்க் ஸ்மிதாவின் முக்கியமான படம்... ‘அலைகள் ஓய்வதில்லை’. ஏழை அம்மா, பரிதாப அம்மா, ஐயோ பாவம் என்று எல்லோரும் சொல்லும்படியான அம்மா என்றெல்லாம் பெயரெடுத்த தமிழ் சினிமா அம்மாவாக வெகு இயல்பாக கமலா காமேஷ் நடித்த முதல் முக்கியமான படம் இதுவே! 
பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் இளையராஜா சகோதரர் பாஸ்கருடன் தயாரித்த ‘அலைகள் ஓய்வதில்லை’, பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜா என பலரும் பாடல்கள் எழுதிக் கொடுக்க, எல்லாப் பாடல்களும் அன்றைக்கு செய்த தாக்கம் இன்று வரைக்கும் தொடருகிறது. முக்கியமாக பாரதிராஜாவின் இயக்கம், அவர் வைக்கிற கோணங்கள், லொகேஷன் பிடிக்கிற சாதுர்யம், காதலைச் சொல்லுகிற அழகு, அதை வெளிப்படுத்துகிற கவிதை என ரசனையுடன் ’அலைகள் ஓய்வதில்லை’யை நமக்குள் கடத்தில், உள்ளேயும் அலையடிக்கச் செய்திருப்பார். 
தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து வந்த பாரதிராஜா, முதன்முதலாக தோல்வியைச் சந்தித்தது ‘நிழல்கள்’ படத்தில்தான். இதையடுத்து ஓர் வெற்றி அவசர அவசியம். அதேசமயம், ’நிழல்கள்’ கதையைத் தந்தவரிடமே அடுத்த கதையையும் கேட்டு வாங்கினார். ‘யோவ்... நல்லாருக்குய்யா இந்த ஸ்டோரி. இதுல ஜெயிக்கிறோம்’ என்று உறுதியாக இருந்தார். அப்படியே நடந்தது. ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ இரண்டு படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர்... பின்னாளில் பெரிய இயக்குநர். நமக்கெல்லாம் பிடித்த இயக்குநர். அவர்... மணிவண்ணன். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணனின் கதை வசனத்தில் உதித்ததுதான் ‘அலைகள் ஓய்வதில்லை’. 
மீசையே முளைக்காத கார்த்திக்கிற்குள் இருந்து வந்த நடிப்பும் இளமையும் வசீகரமும் கொண்ட ராதாவிடம் இருந்தும் அவரின் கண்களிடம் இருந்தும் வெளிப்பட்ட எக்ஸ்பிரஷன்களும் அன்றைய இளைஞர்களையும் யுவதிகளையும் ரொம்பவே இம்சை பண்ணின. இதை இப்போது கேட்டாலும் வெட்கத்துடன் ஒத்துக்கொள்வார்கள். 
இயக்குநர் ஸ்ரீதருக்குப் பிறகு ஒளிப்பதிவின், ஒளிப்பதிவாளரின் முக்கியத்துவத்தை படமெடுத்தவர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. கேமிராக் கோணங்களில் கவிதையும் கதையும் பண்ணி ரகளைவிடுவார். குமரி மாவட்ட கடற்கரை கிராமத்தை அப்படியே கேமிராவுக்குள் கடத்தியிருப்பார். ஒவ்வொரு ஷாட்டிலும் பத்துப் பக்க வசனம் குறைத்து ரெண்டு பக்க வசனமாக்கி, மீதியை கேமிரா வழியே பேசும் வித்தை அவரின் பெரும் பலம். 
படத்தில், அலைகளையும் பாறைகளையும் ஆர்மோனியப் பெட்டியையும் தாமரைப் பூக்களையும் சம்பளம் வாங்காத நடிகர்களாக்கி, கேரக்டர்களாக்கி, ஜீவனாக்கியிருப்பார். அதற்கு ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் கண்களையும் கேமிராவையும் வைத்துக் கொண்டு பேருதவி செய்து, பெருங்காவியம் படைத்திருப்பார். 
தவித்து மருகும் கமலாகாமேஷ் கேரக்டர் ஒரு  ரகம். பண டாம்பீகத்திலும் மத வெறியிலும் ஊறிக்கிடக்கிற தியாகராஜனின் ஒழுக்க மீறல் இன்னொரு ரகம். வீட்டு வாசலில் உள்ள வேலைக்காரரின் வீட்டுக்குடிசைக்குள் நுழைந்து, வேலைக்காரரின் மனைவியை வேட்டையாடுவதும் அங்கே பதறிக் கலங்கிய மனைவி சில்க் ஸ்மிதா கைபிசைந்து செய்வதறியாமல் நிற்பதும் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு வேலையை விட்டுச் செல்கிற வேலைக்கார குடும்பத்துக்கு பணத்தை வீசியெறிவதும் ‘இந்தப் பணத்தை உங்க சம்சாரத்துக்கிட்ட கொடுங்க முதலாளி. அவங்கதான் வாசல்லயே நின்னு பாத்துக்கிட்டாங்க’ என்று எகத்தாளமும் ஆவேசமும் பொங்கச் சொல்கிற வேலைக்காரரும் என அந்தக் காட்சி... துள்ளத்துடிக்கிற காதல் படத்தின் இடைச்செருகல்தான். ஆனாலும் நெஞ்சின் ஆழம் பார்த்துக் குத்தப்பட்டதுதான் பாரதிராஜா டச்.
விச்சு, மேரி காதல்... அழகு. மரத்தில் பெயர்களை எழுதுவதும் மேரிக்காக கறி எடுத்து வரும் விச்சுவும் விச்சுவுக்காக கறி சாப்பிடுவதை நிறுத்திய மேரியும்... காதலின் நீள அகல ஆழங்களைச் சொல்லியிருப்பார் பாரதிராஜா. மேரி ஊருக்குப் போகாமலிருக்க ஜூரம் வரவேண்டும். அதற்கு கக்கத்திற்குள் வெங்காயம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று மேரியின் கக்கத்தில் வெங்காயம் வைப்பதும் பிறகு தனக்கும் வெங்காயம் வைத்துக்கொள்வதும் பார்த்து கிறுகிறுத்துப் போனான் அன்றைய டீன் ஏஜ் பையன். இதையெல்லாம் பார்த்து வெங்காயம் வைத்துக்கொண்ட காதல் இங்கே ஏராளம்! 
யார் தயாரிப்பு, யார் இயக்கம், எவர் நடித்திருக்கிறார் என்றெல்லாம் பார்க்காமல், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் பாடல்களைப் போட்டு மெகா ஹிட்டாக்குகிற இளையராஜாவுக்கு, இது சொந்தப்படம். அவரின் இனிய நண்பர் பாரதிராஜாவின் படம். கேட்கவா வேண்டும். ஒவ்வொரு பாடலும் மிகப்பெரிய ஹிட். சாலையில் சென்று கொண்டிருக்கிறவர்களை நிறுத்தி, அவர்களிடம் இருந்து செல்போன்களைப் பிடுங்கி, சோதனையிட்டால், ‘அலைகள் ஓய்வதில்லை’ பாடல்களை நூற்றுக்கு எழுபது பேர் வைத்திருப்பார்கள். ‘வாடி என் கப்பக்கிழங்கே’ என்றொரு பாடல். ரவுசு பண்ணும். ஆடச் செய்யும். ‘தரிசனம் கிடைக்காதா?’ என்ற பாடலில் ‘என்னை லவ் பண்ணேன்’ என்று ஏங்கச் செய்துவிடும். ‘காதல் ஓவியம்’ காதல் புயலில் மையம் கொண்டதைச் சொல்லிவிடும். ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ காதலுக்குள் சதிராட்டம் போடும். முக்கியமாக, ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ பாடல், காதலித்தவர்களையும், காதலிப்பவர்களையும் காதலிக்கப் போகிறவர்களையும் காதலே பிடிக்காதவர்களையும் கூட கரைத்துவிடும்.   பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், வைரமுத்து என எல்லார் பாடல்களும் செம ஹிட்டு. படத்தில் இடம் பெறாத ‘புத்தம்புதுக்காலை’ இன்றைக்கும் பலரின் செல்போன்களில் காலர் டியூன். 
1981ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி ரிலீசானது ‘அலைகள் ஓய்வதில்லை’. கிட்டத்தட்ட, படம் வெளியாகி 38 வருடங்களாகிவிட்டன. அப்போது ரிலீசான எல்லாத் தியேட்டர்களிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. இன்னும் சில தியேட்டர்களில் 150 நாட்களைக் கடந்து ஓடியது. பிறகு அடுத்தடுத்த வருடங்களில்... படத்தை எங்கு திரையிட்டாலும் அங்கே ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டது. அப்படியொரு ரெஸ்பான்ஸ்; அப்ளாஸ். இன்றைக்கும் டிவியில் ஒளிபரப்பினால், சேனல் மாற்றாமல் படம் பார்த்து பழையதில் புகுந்துகொண்டு, மனதில் ப்ளாஷ்பேக் ஓட்டிக்கொள்கிற ஐம்பது ப்ளஸ்காரர்கள் அதிகம்! 
காதலும் ஓயாது; இந்த ‘அலைகளும் ஓய்வதில்லை’. 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x