Published : 26 Jun 2015 11:30 AM
Last Updated : 26 Jun 2015 11:30 AM

ஆட்டுக்கும் அவார்டு கொடுத்தவர்- இயக்குநர் ஆர். தியாகராஜன் சிறப்பு பேட்டி

சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப் பாதேவரின் மூத்த மகளை மணந்தவர் இயக்குநர் ஆர். தியாகராஜன். தேவர் பிலிம்ஸ் நிறுவனதுக்காக ரஜினியை வைத்து 11 வெற்றிப்படங்களை வரிசையாக இயக்கியவர். தனது மாமா சின்னப்பா தேவர் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிந்துகொண்டதிலிருந்து...

சின்னப்பாதேவரின் முருக பக்தி அவரது படங்களைப் போலவே புகழ்பெற்றது. அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

சினிமாத் துறையில் கவனச் சிதறல் இல்லாமல் அவரைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது முருக பக்திதான். 25 வயது வரை அவருக்குக் கடவுள் பக்தி கிடையாது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக போராடக் கூடியவர்.

ஆனால் அவரது நாணயத்துக்கு சோதனை வந்தது. அவர் மில்லில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் 250 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். திரும்பக் கொடுக்க ஒப்புக்கொண்ட நாள் வந்துவிட்டது. எங்கே அவமானம் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சிக்கொண்டிருந்தபோது அவரது நண்பர் அருணாசலம் என்பரை சந்தித்திருக்கிறார்.

“ நல்ல மனைவி, குழந்தைகள், நல்ல வேலைன்னு இருக்கே.. ஆனால் கண்ணுக்கெட்டுற தூரத்துல தெரியுற கடவுளை ஏன் கும்பிட மாட்டேங்கிறே..” என்று தூரத்தில் தெரிந்த மருதமலையைக் காட்டிக் கூறியிருக்கிறார். முதல்ல முருகனைக் கூம்பிடு. அப்புறம் இந்தக் கடன் பிரச்சினையெல்லாம் காணாமல் போயிடும்” என்று கூறிச் சென்றுவிட்டார்.

ஆனாலும் தேவருக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஊரில் இருந்த ஏரிக்கரை சாலையில் கவலையுடன் நடந்து கொண்டே தூரத்தில் தெரிந்த மருதமலையைப் பார்த்து, “ என்ன முருகா.. இவன் தனக்கு கஷ்டம்னதும் நம்மகிட்ட வரானேன்னு நினைக்கிறியா? உனக்கு விருப்பம் இருந்தா என்னைக் கொஞ்சம் பாரு. இல்லன்னா விட்டிரு” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே நடந்திருக்கிறார். அப்போது அவரைக் கடந்து சென்ற லாரியிலிருந்து ஒரு சூட்கேஸ் கீழே விழுந்து திறந்துகொண்டது.

அதில் கட்டுக் கட்டாய் பணம். பதட்டத்துடன் பணத்தை எடுத்துவைத்து பெட்டியை போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க தனது சைக்கிளில் விரைந்திருக்கிறார். அங்கே பெட்டியைத் தவறவிட்டவர் நின்று கொண்டிருக்க, நிலைமையை அறிந்த தேவர், “ உங்கப் பணம் சரியா இருக்கா என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பெட்டியை போலீஸ் முன்னிலையில் கொடுத்திருக்கிறார்.

பணக் கட்டுக்களை எண்ணிப் பார்த்துவிட்டு பத்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டி இதை வாங்கிக்கப்பா என்று அவர் கொடுக்க, வாங்க மறுத்துவிட்டார் தேவர்.

“நீங்கள் எனக்கு உதவ நினைத்தால் எனக்கு 250 ரூபாய் மட்டும் கடன் தாருங்கள்” என்று கேட்டு வாங்கி, தன் நாணயத்தைக் காப்பாற்றிக்கொண்டார் தேவர்.

அந்தக் கணத்திலிருந்து தீவிர முருக பக்தர் ஆகிவிட்டார். இந்தச் சம்பவத்தைத்தான் `தெய்வம்’ படத்தில் முத்துராமன் நடிக்க அப்படியே ஒரு காட்சியாக வைத்தார். வாராவாரம் சைக்கிளில் எம்.ஜி.ஆருடன் மருதமலைக்கு கிளம்பிவிடுவார். மலையில் ஏறும்போது தேவர் சைக்கிளை மிதிப்பார். இறங்கும்போது எம்.ஜி. ஆர். மிதிப்பார்.

எம்.ஜி.ஆரும் சிறந்த முருக பக்தராக இருந்தார். அவர் திமுகவின் நடிகராக இருந்தபோதும் அவரை வற்புறுத்தி `தெய்வப்பிறவி’ படத்தில் முருகனாக நடிக்க வைத்துவிட்டார்.

அவரது தொழில் பக்தி பற்றிக் கூறுங்கள். படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அவரை இடிஅமீன் என்று சொல்வார்களாமே?

எளிமை, நேர்மை, நேரம் தவறாமை, திட்டமிடல், வள்ளல் தன்மை இதுதான் தேவரின் வெற்றி ரகசியம். அவர் காலை அலுவலகத்தில் நுழைகிறார் என்றால் 8 மணி என்று அர்த்தம். அதேபோல பூஜை போட்ட தினத்திலிருந்து மூன்று அமாவாசைக்குள் படத்தை முடித்து அடுத்து வரும் பவுர்ணமியில் படத்தை வெளியிட்டுவிடுவார். இதில் கொஞ்சமும் பின்வாங்க மாட்டார்.

அனைத்து நட்சத்திரங்களுக்கும் முதலிலேயே மொத்த சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். இப்படி நாணயமாக நடந்துகொண்டதால், கறார் அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொண்டது. எம்.ஜி.ஆர் என்ற சூப்பர் ஸ்டாரை வைத்து அதனால்தான் ஆண்டுக்கு மூன்று படங்களை வெளியிட முடிந்தது.

பெரிய நட்சத்திரங்கள் அவருக்குத் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தாலும் விலங்குகளை அவர் அதிகம் நம்பியது ஏன்?

தனது படங்கள் குழந்தைகளையும் அதிகம் கவர வேண்டும் என்று நினைத்தார். அதனால் விலங்குகளை வைத்துத் தேவையில்லாத வித்தைகளைச் செய்யாமல் மையக் கதையுடன் அவற்றை இணைத்து உணர்ச்சிபூர்வ கதாபாத்திரங்களாக மாற்றினார்.

நான் இயக்கிய `ஆட்டுக்கார அலமேலு’ படத்தை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்குப் போட்டுக்காட்டி அவரைப் படத்தின் வெள்ளிவிழாவுக்கு அழைத்தார். படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., “என்னடா… அண்ணன் ஆட்டை வச்சுப் படமெடுத்திருக்கிறாரே என்று சங்கடத்துடன்தான் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆனால் போகப் போக அந்த ஆடு எப்ப வரும் என்று எதிர்பார்க்க வெச்சுட்டீங்க” என்று பாராட்டினார். தேவரும் விழா மேடையில், படத்தில் வந்த இரண்டு ஆடுகளையும் ஏற்றி அவற்றுக்கும் மாலை போட்டு அவார்டு கொடுத்து கவுரப்படுத்தினார். அந்தளவுக்கு நன்றி உணர்ச்சி மிக்கவர் தேவர்.

விலங்குகளுடனான அன்பு தேவரின் மாணவப் பருவத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. தோட்டத்து வீட்டில் அவர் தூங்கி எழுந்தபோது, பக்கத்தில் ஒரு நல்ல பாம்பு படமெடுத்தபடி நின்றிருக்கிறது. பயந்துபோய் “ ராமு” என்று தனது வளர்ப்பு நாயை அழைத்திருக்கிறார். ஓடிவந்த அந்த நாய் பாம்பைக் கடித்து குதறிக் கொன்றுவிட்டு, பாம்பு கடித்ததால் அதுவும் இறந்துவிட்டது. அதன் பிறகு தனது காளை, நாய் போன்ற விலங்குகளுக்கு ராமு என்றே பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தார்.

படங்களுக்குத் தேவையான விலங்குகளை சர்க்கஸிலிருந்து விலைகொடுத்து வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்துவிடுவார். அவற்றை இறுதிவரை வளர்த்தும் வந்தார். இப்படி அவரிடம் ஹீரா என்ற சிங்கம், கிட்டு என்ற சிம்பன்ஸி குரங்கு உட்பட ஏராளமான விலங்குகள் வளர்ந்தன.

சிவாஜியை வைத்து ஒரு படம் கூட ஏன் தயாரிக்கவில்லை?

எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த அளப்பரிய பாசம்தான் காரணம். `துணைவன்’ படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, என் தம்பி சிவாஜிக்குப் பொருத்தமான கதை அவரை வைத்து இந்தப் படத்தை எடுங்கள் என்றார். எம்.ஜி.ஆர்., ஆனால் தேவர் அதற்கு மறுத்துவிட்டார். இத்தனைக்கும் தேவரின் மகளை எனக்குப் பேசி மணம் முடித்து வைத்தவர் நடிகர் திலகம் அவர்கள்.

அவர்மீது அபரிமிதமான அன்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் நட்புக்கு மரியாதை கொடுத்து கடைசிவரை எம்.ஜி.ஆரின் உடன்பிறவா அண்ணனாகவும் அவரது முதலாளியாகவும் முருக பக்தராகவும் வாழ்ந்து மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x