Published : 23 May 2014 09:00 AM
Last Updated : 23 May 2014 09:00 AM

போலி கிரெடிட் கார்டு தயாரிக்கும் கும்பல் தலைவன் சிக்கினான்

போலி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரித்து பணத்தை திருடும் கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டார்.

ஒரு தனியார் வங்கியின் மேலாளர் கோபிநாத், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “எங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகளை போலியாக தயார் செய்து வாடிக்கையாளர்களின் பணத்தை ஏடிஎம் மையங்கள் மூலம் திருடியுள்ளனர்.

அமைந்தகரையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்படும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்திய பின்னரே இந்த மோசடி நடைபெற்றுள்ளது” என்று புகாரில் கூறி இருந்தார்.

விசாரணையில், குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் சிவசூர்யா என்பவர் வாடிக்கையாளர்கள் கொடுத்த டெபிட் கார்டின் விவரங்களையும், ரகசிய பின் நம்பர்களையும் திருட்டுத்தனமாக சேகரித்து கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி கார்டுகள் தயாரித்து பணம் திருடியது தெரிந்தது. இதைத் தொடர்ந்து சிவசூர்யா, சிஜுஜான், முருகன், விஜயகுமார், ராஜா ஆகிய 5 பேர் இரு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி கும்பல் தலைவனாக ஏழுகிணறு பகுதியை சேர்ந்த இம்ரான்கான் என்பவர் செயல்பட்டார். காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த இம்ரான்கானை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்-டாப் மற்றும் ஏராளமான போலி டெபிட், கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அமைந்தகரை வணிக வளாகத்தில் உள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டில் இம்ரான்கான் ஏற்கெனவே பணியாற்றி, பின்னர் அவரே வேலையிலிருந்து விலகியிருக்கிறார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர் சிவசூர்யா மூலம் வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை தொடர்ந்து பெற்றிருக்கிறார். கடந்த 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இம்ரான்கான் இதே போல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் ஜாமீனில் வந்து மீண்டும் மோசடி செய்திருக்கிறார். இம்ரான்கான் சுமார் 5 ஆண்டுகளாக இதேபோல மோசடி செய்து சுமார் ரூ.25 லட்சம் வரை திருடியிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த ஆண்டில் இதுவரை போலி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்

டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களையும், ரகசிய குறியீட்டு எண்ணையும் எந்த வங்கியும் தொலைபேசியில் கேட்பது இல்லை.

கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை மாதம் ஒருமுறை மாற்றுவது நமது பணத்திற்கு மிகச் சிறந்த பாதுகாப்பு. ஷாப்பிங் செய்யும்போது ரகசிய குறியீட்டு எண்களை முடிந்தவரை மற்றவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்துங்கள். அப்படி தெரிந்துவிட்டால் மறுநாளே உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றிவிடுங்கள்.

உங்கள் கார்டை கடைக்காரரிடம் கொடுக்கும்போது உங்கள் கவனம் முழுவதும் கார்டில் இருக்க வேண்டும். ஒருமுறைக்கு மேல் ஸ்வைப் செய்தால் அதற்கான காரணத்தை நிச்சயம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பெட்ரோல் போடும்போது காரில் இருந்து கொண்டு உங்கள் கார்டை பங்க் ஊழியரிடம் கொடுத்து அனுப்பக் கூடாது. நீங்களே நேரில் சென்று கொடுப்பது நல்லது. உங்கள் கார்டின் தகவல்கள் அதை பயன்படுத்தும் எந்த இடத்திலும் திருடப்படலாம். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x