Last Updated : 09 May, 2015 11:06 AM

 

Published : 09 May 2015 11:06 AM
Last Updated : 09 May 2015 11:06 AM

இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய முதலீடு திரைப்படங்கள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

15 கோடிக்கு அதிகமான பொருட் செலவில் தயாராகும் படங்கள், பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிட முடியும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது குறித்த பேச்சுவார்த்தைகள் தயாரிப்பாளர் சங்கத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் அப்பேச்சுவார்த்தையின் முடிவில் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பது:

“சிறிய முதலீட்டுப் படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிரமத்தையும், அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பையும் கருத்திக் கொண்டு அதற்குத் தீர்வு காணும் வகையிலும், நமது சங்கத்தின் அடிப்படை நோக்கங்கள் பற்றிய விதி எண் 3(M)-ன்படி திரைப்படத் தொழிலை பாதிக்கும் வியாபாரத் தன்மையை ஆராய்ந்து ஏற்ற, இறக்கங்களை பார்த்து வரவிருக்கும் ஆபத்துகள் மற்றும் அனுகூலங்களை தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் சங்கத்தின் எண்ணங்களை செயல்படுத்துகிற வகையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு ஒரு முடிவினை எடுத்துள்ளது.

அந்த முடிவின்படி 15 கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் உருவாகும் பெரிய முதலீட்டுத் திரைப்படங்களை 1. பொங்கல் பண்டிகை, 2. ஜனவரி 26 – குடியரசு தினம், 3. ஏப்ரல்-14 தமிழ்ப் புத்தாண்டு தினம், 4. மே-1 உழைப்பாளர் தினம், 5. ஆகஸ்ட்-15 சுதந்திர தினம், 6. விநாயகர் சதுர்த்தி, 7 விஜயதசமி, 8. தீபாவளி, 9. ரம்ஜான், 10. கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய விடுமுறை தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும்.

15 கோடி ரூபாய்க்குக் கீழான முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர் விரும்பும் எந்தவொரு நாட்களிலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த திரைப்பட வெளியீட்டு திட்டத்தை வருகிற 2015 ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துமாறு அனைத்துத் தயாரிப்பாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x