Last Updated : 20 Dec, 2013 12:37 PM

 

Published : 20 Dec 2013 12:37 PM
Last Updated : 20 Dec 2013 12:37 PM

சென்னை சர்வதேச திரைப்பட விழா : சிறந்த படமாக தங்க மீன்கள் தேர்வு

டிசம்பர் 12ம் தேதி தொடங்கிய சென்னை சர்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை (டிசம்பர் 19) முடிவுற்றது.

56 நாடுகளைச் சேர்ந்த 163 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சென்னையில் உள்ள அபிராமி மெகா மால், ஐநாக்ஸ், உட்லண்ட்ஸ், ராணி சீதை ஹால் உள்ளிட்ட 8 திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன.

சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா, லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள அரங்கில் நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா கலந்துகொண்டார். இவர் ரங்கே தே பஸந்தி, பாஹ் மில்கா பாஹ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் வழங்கப்படும் YOUTH ICON விருது இசையமைப்பாளர் அனிருத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ்ப் படத்திற்கான போட்டிகள் பிரிவில், 'பரதேசி', 'சூது கவ்வும்', 'தங்க மீன்கள்', 'பொன்மாலை பொழுது', 'ஹரிதாஸ்', 'அன்னக்கொடி', 'மூன்று பேர் மூன்று காதல்', '6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்கள் போட்டியிட்டன.

'ஹரிதாஸ்' படத்தில் நடித்த சிறுவன் ப்ருத்விராஜ் தாஸ், 'தங்க மீன்கள்' படத்தில் நடித்த சிறுமி சாதனா இருவருக்கும் சிறப்பு நடுவர் விருது அளிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதினை 'பரதேசி' படத்தில் நாயகனாக நடித்த அதர்வா வென்றார்.

சிறந்த தமிழ் படங்களுக்கான பிரிவில், 'ஹரிதாஸ்' படத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்தது. படத்தின் இயக்குநர் குமாரவேலன், தயாரிப்பாளர் ராமதாஸ் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

'தங்க மீன்கள்' படத்திற்கு முதல் இடம் கிடைத்தது. படத்தின் இயக்குநர் ராமிற்கு ரூ.2 லட்சமும், தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது. விருதுகள் மற்றும் பரிசுகளை இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா வழங்கினார்.

விருதினைப் பெற்றுக் கொண்டு, ”மகள்களைப் பெற்ற அப்பாகளுக்கு மட்டும் தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று” என்ற புகழ் பெற்ற வசனத்தை கூறி தனது பேச்சைத் தொடங்கினார் இயக்குநர் ராம்.

அதனைத் தொடர்ந்து, " இந்தியன் பனோரமாவில் "தங்க மீன்கள்' தேர்வு செய்யப்பட்டதை விட சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வாங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர் விமர்சனங்களாலும் தனி நபர் விமர்சனங்களாலும் காயப்பட்டிருந்த மனதுக்கு இந்த விருது மருந்தாக அமைந்து இருக்கிறது.

இப்படத்துக்கு அதிக வெளிச்சம் தந்த ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்...' பாடலைத் தந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு நன்றி. பொருள் தேடி பணம் தேடி அலைகின்ற அனைத்து அப்பாக்களுக்கும், அப்பாக்களை பிரிந்து வாடும் செல்ல மகள்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் ” என்றார் இயக்குநர் ராம்.

இவ்விழாவினை நடிகர் கார்த்தி மற்றும் அனுஹாசன் தொகுத்து வழங்கினார்கள். சுஹாசினி, ரோகிணி, மோகன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x