Last Updated : 10 May, 2014 08:13 PM

 

Published : 10 May 2014 08:13 PM
Last Updated : 10 May 2014 08:13 PM

உங்களுக்காக நான் என்ன செய்யணும்? - பார்வையற்றவர்களை சந்தித்த ரஜினி!

'லிங்கா' பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தன்னைப்பார்க்க ஆவலுடன் வந்த பார்வையற்றவர்களை,கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைப்பிடித்துக்கொண்டே வந்து அவர்களை சந்தித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.பார்வையற்றவர்களின் பாடலைக் கேட்டு கண்கலங்கிய‌ அவர்,ஒருகட்டத்தில் பார்வையற்றவரை கட்டிப்பிடித்து,முத்தமிட்டு அன்பில் நனைய வைத்திருக்கிறார்.

பெங்களூரில் உள்ள மத்திக்கெரேவில் உள்ள‌ பி.கே.பால் என்பவர் கண் பார்வையற்றவர்களுக்காக ஐ.டி.எல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரின் விடுதியில் தங்கியிருக்கும் மாணவ‌ர்கள்,இசை கலைஞர்கள்,பாடகர்கள் என அனைவருமே பார்வையற்றவர்கள்.

கடந்த வியாழக்கிழமை கோடை விடுமுறைக்காக ஐ.டி.எல்.பார்வையற்றோர் இசைக்குழுவினர் பெங்களூரில் இருந்து மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது,ரஜினியின் புதிய படத்தின் ஷூட்டிங் பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பார்வையற்ற இசைக்குழுவினர்,தங்களை சுற்றுலாவிற்கு அழைத்து வந்திருந்த பி.கே.பாலிடம்,'சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்கணும்.ப்ளீஸ்,எங்களை அவர்க்கிட்ட கூட்டிட்டு போங்க‌.அவரை தொட்டு பார்க்கணும்'என அடம்பிடித்திருக்கிறார்கள்.

எனவே 'லிங்கா' பட ஷூட்டிங் நடைபெறும் இடம் தெரியாமலே மைசூர்,மண்டியா என பல இடங்களில் ரஜினியை தேடி அலைந்திருக்கிறார்கள்.ஒருகட்டத்தில் மண்டியா காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார்கள்.அப்போது மண்டியாவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள 'மேல்கோட்டை' என்னும் இடத்தில் ரஜினியின் ஷூட்டிங் நடந்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.எனவே பார்வையற்ற இசைக்குழுவினர் உற்சாகமாக மேல்கோட்டையை நோக்கி பயணித்திருக்கிறார்கள்.

அதிசய சந்திப்பு!

தங்களுடைய கனவு நாயகனை சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த ஐ.டி.எல்.கண் பார்வையற்றோர் இசைக்குழுவினரை,'தி இந்து'சார்பாக சந்தித்தேன்.

''நாங்க ரொம்ப ஆவலா மேல்கோட்டைக்கு போனோம்.அங்கே போய் பார்த்தால் மழைக் காரணமாக ஷூட்டிங்,'கேன்சல்' என்றார்கள். அடடா..இவ்வளவு தூரம் வந்தும்,தலைவரை பார்க்க முடியாம போச்சே என ஏமாற்றமடைந்தோம்.அங்கு இருந்த 'லிங்கா'படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க‌டேசை சந்தித்து,'ரஜினி சாரை பார்த்து பேசுவதற்காக ரொம்ப தூரத்தில இருந்து வர்றோம்.காலையில இருந்து மைசூர்,மண்டியா முழுக்க அலைஞ்சி திரிஞ்சி தேடினோம்.தயவு செஞ்சி அவரை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க‌'என எல்லாரும் சேர்ந்து கேட்டோம்.

மழைக்காக கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினி சாரிடம் ராக்லைன் வெங்கடேஷ் போய் விஷயத்தை சொல்லியிருக்கிறார்.'ஓ.. அப்டியா?' என ஆச்சர்யத்தோடு,அடுத்த நிமிடமே தானே குடையை பிடித்துக் கொண்டு,கட்டிய லுங்கியோடே எங்களை பார்க்க வேகமாக நடந்து வந்துட்டார் ரஜினி சார்.

எங்க பக்கத்தில் வந்து "கண்ணா..நான் ரஜினிகாந்த் வந்திருக்கேன்.எல்லோருக்கும் வணக்கம். எப்படி இருக்கீங்க?''என சிரிச்சிக்கிட்டே கன்னடத்தில் கேட்டார்.எங்களுடைய கனவு நாயகனை சந்திச்ச சந்தோஷத்தில் பாதி பேருக்கு பேச்சே வரலை.அப்புறம் நாங்க ஒவ்வொருவரும் கொண்டு வந்த ரோஜா மலர்களை அவருக்கு கொடுத்தோம்.

எங்க ஒவ்வொருத்தர் பேரையும் நல்ல கேட்டுட்டு,'வெரி குட்'என தோளில் தட்டிக் கொடுத்தார்.'என்னை பார்க்கிறதுக்கு இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வரணுமா?' என கேட்டார்.உங்களை பார்க்கணும்,தொடணும்,நிறைய பேசணும்.சின்ன வயசுல இருந்து நாங்க எல்லாம் உங்க ரசிகர்கள்.உங்களை சந்திக்கணும்கிறது எங்க கனவு.அதுக்காக இவ்வளவு எவ்வளவு தூரமா இருந்தாலும் வந்துடுவோம்"என்றோம்.

கண் கலங்கிய ரஜினி

'என் முகத்தையே நீங்க பார்த்ததில்ல.வெறும் குரலை மட்டும் கேட்டு இப்ப‌டி பாசமாக இருக்கீங்களே? உங்களோட அன்புக்கெல்லாம் நான் என்ன பண்ண போறேன்? ஓ.கே. உங்களுக்காக நான் என்ன செய்யணும்.சொல்லுங்க' என ரஜினி சார் கேட்டார்.'எங்களுக்கு எதுவும் வேணாம்.நீங்க நிறைய படத்துல நடிச்சால போதும்'னு சொன்னோம்.அதன்பிறகு நாங்க எழுதி,இசையமைத்து பாடிய 'ஐ.டி.எல்.பேண்ட் டி.வி.டி'யை அவருக்கு கொடுத்தோம்.

அதை வாங்கிட்டு,'கண்டிப்பாக கேட்கிறேன்'என சொன்னார்.அப்புறம் அவருக்காக நாங்க எல்லாம் சேர்ந்து,'பொதுவாக என் மனசு தங்கம்..ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்'என்ற பாட்டை பாடினோம்.ரொம்ப சந்தோஷப்பட்ட ரஜினி சார்,ஒரு கட்டத்துல கண்கலங்கி,எங்களை கட்டிபிடிச்சி,முத்தம் கொடுத்தார்.அதன் பிறகு எங்க எல்லாருக்கும் டிபன் கொடுக்க சொன்னார்.

அவரும் எங்களோடு சேர்ந்து டிபன் சாப்பிட்டார்.அதன் பிறகு எங்க டீம்ல இருந்த நஜீநா என்ற பார்வையற்ற‌ பெண் கொண்டு வந்திருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.அதனை வாங்கிக்கிட்டு, "பத்திரமா வீட்டுக்கு போங்க,பெங்களூருக்கு வந்து உங்களை ஒருநாள் கண்டிப்பா மீட் பண்றேன்"என்று கூறினார்.

'கோச்சடையான்','லிங்கா' ரெண்டு படமும் பெரிய ஹிட் ஆகணும்'னு சொல்லிவிட்டு கிளம்பினோம்''என மகிழ்ச்சி தாண்டவமாடும் மொழியில் பார்வையற்ற மாணவர்களான மனோகர்,ரமேஷ் உள்ளிட்ட அனைவரும் ஆர்ப்பரிப்போடு சொல்லி முடித்தார்கள்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x