Last Updated : 10 May, 2015 03:04 PM

 

Published : 10 May 2015 03:04 PM
Last Updated : 10 May 2015 03:04 PM

படம், பணம், காதலியை இழந்து தவித்தேன்: சிம்பு உருக்கம்

"கடந்த இரண்டரை ஆண்டுகளில் படத்தை இழந்தேன், பணத்தை இழந்தேன், காதலியையும் இழந்தேன்" என்று நடிகர் சிம்பு உருக்கமாக பேசினார்.

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் 'இனிமே இப்படித்தான்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிம்பு, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட பல திரையுலகினர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சந்தானத்தை வாழ்த்தினார்கள்.

இவ்விழாவில் நடிகர் சிம்பு பேசியது:

"'கண்ணா லட்டு தின்ன ஆசையா' இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு இந்த விழாவுக்குதான் வந்திருக்கிறேன். அதற்குப் பிறகு எந்த ஒரு விழாவுக்கும் போகவில்லை. 2 வருஷம் கழித்து இந்த விழாவுக்குதான் வந்திருக்கிறேன்.

'இனிமே இப்படித்தான்' படத்தை இயக்கி இருக்கும் முருகன் மற்றும் ஆனந்த் என இருவருமே முருகானந்த் என ஒற்றுமையாக பேர் போட்டிருக்கிறார்கள். அதுவே இந்தப் படத்துக்கு வெற்றிதான் என நினைக்கிறேன். இந்த ஒற்றுமைக்காகவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியாகும் என நம்புகிறேன்.

'மன்மதன்' படத்தில் நான்தான் அவரை அறிமுகப்படுத்தினேன். தற்போது அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு போய் இருக்கிறார். "சந்தானத்தை நீங்க தானே அறிமுகப்படுத்தினீர்கள். இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டார்" என என்னிடமே நிறைய பேர் கேட்டார்கள். அறிமுகப்படுத்தினேன் என்பதை விட அவரிடம் திறமை இருக்கிறது என்பதை முதலில் அங்கீகரித்தது நான் தான். அவர் பெரிய நடிகனாக வருவார் என்று அங்கீகரித்து தான் பல தடைகளைத் தாண்டி அவரை 'மன்மதன்' படத்தில் நடிக்க வைத்தேன்.

நான் சந்தானத்தின் திறமையை தான் அங்கீகரித்தேன். எனக்கு திறமையே கிடையாது. அதை உருவாக்கி கொடுத்ததே எங்க அப்பா தான். இங்கு நான் நிற்பதற்கு காரணம் எங்க அப்பா தான். தட்டி விடுவதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுப்பதற்கு இங்கு சில பேர் தான் இருக்கிறார்கள். சந்தானத்தின் திறமையை அங்கீகரித்தேன் என்ற விஷயத்தில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

என் படங்கள் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த வருடங்களில் நிறைய விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். நிறைய பேர் நான் ஆன்மீகத்தில் போய்விட்டேன் என்று சொல்கிறார்கள். கடவுளைத் தேடி தானே போனே. ஃபிகரைத் தேடி போகவில்லையே. அனைத்து மக்களுமே கஷ்டத்தை அனுபவித்து இருப்பார்கள். என்னை அனைவருமே எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தவர் என்று தான் சொல்லுவார்கள். சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இந்த இரண்டரை வருடம் கற்றுக் கொடுத்தது.

கடந்த இரண்டரை வருடங்களில் என்னை விட்டு எல்லாமே போய்விட்டது. நான் சம்பாதித்தால் அம்மாகிட்ட கொண்டு போய் தான் காசைக் கொடுப்பேன். படம் போய்விட்டது. செலவுக்கு அம்மாவிடம் போய் காசு கேட்கக் கூட எனக்கு கஷ்டமாக இருந்தது. காசும் போச்சு, படமும் போச்சு. சரி நமக்காக ஒரு பெண் இருக்கிறாள் என்று அவள் இருப்பாள் என்று நினைத்தேன். அவளும் போய்விட்டாள். கல்யாணமாகி குழந்தை பிறந்து அதோட சிரிப்பைப் பார்த்தாவது நமது கஷ்டம் போய்விடும் என நினைத்தேன். அதுவும் இல்லாமல் என்னை கடவுள் சோதித்து விட்டார்.

எல்லாமே என்னை விட்டு போய்விட்டது என்றாலும் என்னிடம் உயிர் மட்டுமே இருந்தது. ஏதோ ஒரு காரணத்துக்காக உயிர் மட்டும் இருக்கிறது. எவ்வளவு கஷ்டங்களை நாம் கடந்தாலும் என்னோட ரசிகர்கள் என்னைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களும் என்னோட படம் வெளியாகவில்லை என்றாலும், என்னை தூக்கி நிறுத்தினார்கள். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

மே 9-ம் தேதி வெளியாக இருந்த 'வாலு' வெளியாகவில்லை. என்னடா இது கடவுள் நம்மளை கைவிட்டு விட்டாரே என்று நினைத்தேன். இப்போது எனது அப்பா 'வாலு' படத்தை வாங்கி வெளியிட இருக்கிறார். எப்போதுமே நாம் செய்யும் ஏதாவது ஒரு நன்மை தான் நம்மை காப்பாற்றும். இந்த இரண்டு வருடத்தில் நான் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டேன். நம்மாக வாழுவதை விட மற்றவர்களுக்காக வாழ்ந்தால் நாம் நன்றாக இருப்போம்.

நிறைய படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வளர்ந்தாலும், நான் அறிமுகப்படுத்தினேன் என்பதற்காக என்னை விட்டுக் கொடுக்காமல் நின்று இருக்கிறார் சந்தானம். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சிம்பு பேசினார்.